பேராவூரணி கிழக்குப் பள்ளியில் பரிசளிப்பு விழா
17.03.2023 - மாலை 3.00 மணிக்கு நடைபெறும் விழாவுக்காக காலை முதலே ஆசிரியர்களும் மாணவர்களும் சணல் கயிற்றில் பசை தேய்த்து வண்ண வண்ண தாள்களை தோரணங்களாக ஒட்டிக் கட்டினர்.
பேரூராட்சி பெருமன்ற உறுப்பினர் மகாலட்சுமி சதீஷ் பள்ளி வளாகத்தின் மேடு பள்ளங்களை தனது மேற்பார்வையின் கீழ் பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு அழகு படுத்தினார்.
ஒலிபெருக்கி வந்ததும் ஒட்டுமொத்த பள்ளி குழந்தைகளுக்கும் குதூகலம் தொற்றிக் கொண்டது.
விழா தொடங்குவதற்கு முன்பு ஒலிபெருக்கியில் வந்த பாடல்களுக்கு வகுப்பறைகளில் நடனமாடி மகிழ்ந்தனர் மாணவர்கள்.
கொரோனா கொடுந்துயர் கல்வித்துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.
பள்ளிகளில் நடத்தப்பெறும் ஆண்டு விழாக்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பெறவில்லை.
கற்றல் செயல்பாடுகளை மீண்டும் மாணவர்களிடம் கொண்டு வருவதற்கே ஆசிரியர்கள் பெரும்பாடுகிறார்கள்.
சுமார் இரண்டு ஆண்டுகள் தொடர் விடுமுறை மாணவர்களின் மனநிலையை மாற்றி இருக்கிறது. அவர்களை திறன் சார்ந்து வளர்த்தெடுக்க வேண்டிய ஆசிரியர்களுக்கு எண்ணற்ற பணிச்சுமை.
இதில் ஆண்டு விழாவை நடத்துவது என்பதெல்லாம் கனவாக மாறி வருகிறது.
இதனால் பெரும்பாலான அரசு பள்ளிகள் இவ்வாண்டு விழா நடத்துவதை கைவிட்டு விட்டன.
விழாவை மனதில் கொண்டு ஆண்டு முழுவதும் வகுப்புக்கு வரும் மாணவர்களும் உண்டு. அவர்களுக்கு இது பெரும் ஏமாற்றம். விளையாட்டுப் போட்டிகளும் இலக்கியப் போட்டிகளும் மாணவர்களுக்கு உந்து சத்திகள்.
நூற்றாண்டு விழாவை வரும் கல்வியாண்டில் பெருமிதமாய் கொண்டாட உள்ள பேராவூரணி கிழக்கு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு இணைந்து இலக்கிய மன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
ஆண்டு விழாவுக்கு இணையாக மாணவர்களிடம் இந்தப் போட்டிகள் மகிழ்ச்சியை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் எளிய விழாவுக்கு தயாரானார்கள்.
மாணவர்களுக்கு இலக்கிய மன்ற போட்டிகளும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்த பெற்று பரிசளிப்பு விழா பெரும் கொண்டாட்டமாய் நடைபெற்றது.
நான்கு நாட்களுக்கு முன்னதாக பள்ளியின் கல்வியாளர் ஐயா கே.வி.கிருஷ்ணன் வழிகாட்டுதலோடு வகுப்புக்கு ஐந்து இலக்கியப் போட்டிகளை நடத்தி வென்றவர்களை வரிசைப்படுத்தி எழுதி வைத்திருந்தார் பள்ளி மேளாண்மை குழு தலைவர்.
பள்ளி வளாகத்திற்கு உள்ளே சிறு சிறு விளையாட்டுப் போட்டிகளை சிறார்களுக்கு நடத்தி வெற்றி பெற்றவர்களை வரிசைப்படுத்தியிருந்தனர் பள்ளி ஆசிரியர்கள்.
பாடலுக்கேற்ற நடனத்தை பாவனையோடு அரங்கேற்ற சிறுமிகளை சீர்படுத்தினார் இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஆசிரியர் பிரதீபா.
பள்ளியில் படிக்கும் அத்தனை மாணவர்களுக்கும் பரிசு கிடைத்து விட வேண்டும் என்பதற்காகவே மாணவர்களின் தனித்திறன் அறிந்து அவர்களுக்காக அரிய போட்டிகளை அடையாளப்படுத்தினர் ஆசிரியர்கள். முதல் இரண்டு மூன்று தகுதிக்குள் வராதவர்கள் யாரும் இல்லை. அவ்வளவு போட்டிகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட பாடல்களுக்கான நடனம், நாடகம் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
குறிப்பாக சிலப்பதிகாரக் காப்பியத்தில் கால் சிலம்போடு வந்து கணவன் கோவலன் கொல்லப்பட்டதற்கு நியாயம் கேட்ட கண்ணகியின் கதை, நாடகமாக அரங்கேற்றப்பட்டது. மிரட்டும் கண்களால் கண்ணகியாக வந்து தனது கனல் வசனங்களால் நாடகத்திற்கு உயிரூட்டினார் பள்ளி மாணவி. இரண்டு நாள் அவகாசத்தில் பக்கம் பக்கமான வசனங்களை பரீட்சையமாக்கிக் கொண்டு பாவனையோடு நடித்துக் காட்டிய அத்தனை மாணவிகளும் பாராட்டுக்குரியவர்கள்.
மாணவர்களுக்காகவே தயாரிக்கப்பட்ட "என்மேடை" என்ற சிறிய மேடையில் ஏறி சின்னஞ்சிறு குழந்தைகள் பாடல்களைப் பாடியும் உரை நிகழ்த்தியும் பெற்றோர்களை மகிழ்வித்தனர்.
பள்ளியில் செயல்படும் பாலர் பள்ளி மாணவர்களும் தேசத் தலைவர்கள் போல் வேடமிட்டு மேடையை அலங்கரித்தனர்.
விருந்தினர்களின் சிறிய வாழ்த்துரைகளோடு பெருநேரம் எடுத்துக் கொண்டது பரிசளிப்பு நிகழ்வு. பிள்ளைகள் மேடையேறி பரிசு பெறும்போது பெருமிதத்தோடு பார்த்து ரசித்தனர் பெற்றோர்கள். தங்கள் கைபேசிகளில் காட்சிப்பதிவு செய்து கொண்டனர். கை கொள்ளா பரிசுப் பொருட்களை பெற்றோர்கள் பைக்குள் திணித்துக் கொண்டனர்.
பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எஸ்பிஐ வங்கி கிளை முதன்மை மேலாளர் ராகவன் சூரியேந்திரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மகாலட்சுமி சதீஷ், ராஜலட்சுமி ராமமூர்த்தி, மு.த.முகிலன், அரசு கல்லூரி பேராசிரியர்கள் சண்முகப்பிரியா, பிரபா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரண்யா, கல்வியாளர் கே.வி.கிருஷ்ணன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பெற்றோர்களுக்கு பொன்னாடை
கிழக்கு பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்த பெற்றோர்கள் அனைவருக்கும் பேரூராட்சி பெருமன்ற உறுப்பினர் மகாலட்சுமி சதீஸ் பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது,"அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்த்திடும் ஆர்வம் பெற்றோர்களுக்கு வர வேண்டும். அரசுப் பள்ளி நம் பள்ளி. பள்ளியின் வளர்ச்சியில் ஒவ்வொரு பெற்றோர்களும் பங்கேற்க வேண்டும். அரசுப் பள்ளிகளை தொடர்ந்து பாதுகாத்து வரும் அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதற்காக அவர்களுக்கு இந்த மரியாதையை செலுத்தினோம்" என்றார்.
பள்ளித் தலைமையாசிரியர் பாலச்சந்தர் வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளி ஆசிரியர் சுபாஷ் நன்றி கூறினார்.
பிரம்மாண்ட மேடை இல்லை, தெருவை இறைச்சலாக்கும் ஒலிபெருக்கி மாசு இல்லை, பகட்டான பட்டாடைகளை மாணவர்கள் உடுத்தவில்லை இருந்தாலும் இந்த விழா மாணவர்களிடம் பெருமிதத்தை உருவாக்கியது. இந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பை முடித்துவிட்டு ஆறாம் வகுப்பு படிக்க உயர் பள்ளிக்குச் செல்லும் இப்பள்ளி மாணவர்களிடம் இந்த நிகழ்வு ஒரு நல்ல நினைவலைகளை என்றென்றும் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
கிழக்குப் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் மெய்ச்சுடரின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக