சாதிப் பெருமிதங்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றுவோம்



பொதுவெளியில் கட்டப்பட்டுள்ள  கோவில்களில் முதல் மரியாதை, ஜாதிய மண்டகப்படி,  பரிவட்டம் போன்ற பழக்கங்களுக்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறோம். 

-------------

 இந்திய ஒன்றியம் ஒரு மக்கள் குடியரசு.  


மக்களால் உருவாக்கப்பட்ட சட்டமன்றம் நாடாளுமன்றம் மூலமாக இயற்றப்படும் சட்டங்களின் அடிப்படையிலேயே ஆட்சி நடைபெற்று வருகிறது.  


மன்னர்கள் பராமரித்த கோவில்கள் மக்களாட்சியில் அரசு வசமானதற்கு பிறகு மக்கள் அனைவருக்கும் சமமான மரியாதையும் வழிபாட்டு உரிமையும் வழங்கப்பட வேண்டியதை அரசு உறுதி செய்ய வேண்டும்.  


விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும், மக்கள் குடியரசை நாம் உருவாக்கிய பிறகும் கோவில்களில் முதல் மரியாதை, பரிவட்டம், சாதிய மண்டகப்படிகள் போன்ற நடைமுறைகள் இருப்பது பெரும் சோகம்.


உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு என்று அறிவித்துக் கொண்டு மன்னராட்சியின் பழக்கங்களை அப்படியே வைத்துக் கொள்வது, பண்ணை அடிமைச் சமூகத்தின் பழக்கங்களை பின்பற்றுவது ஏற்புடையதல்ல. பாரம்பரிய பண்பாட்டு பழக்க வழக்கங்களாக சமூக ஏற்றத்தாழ்வுகளை நடைமுறைப்படுத்துவது நாகரீகம் அடைந்த சமூகத்திற்கு ஏற்றதல்ல.  


கோவில்களில் வளர்க்கப்படும் சாதிய பழக்கங்கள் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  


#புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சி, இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் இனச் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்குள் சாதி வெறி கொண்ட சமூக விரோதிகளால் குடிநீரோடு மலம் கலக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தக் குடிநீரை குடித்த மக்களின் உடல் நிலையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட பின்னர் குடிநீர் ஆய்வு செய்யப்பட்டு இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.  


இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அந்தப் பகுதியில் நடைமுறையில் இருந்த மற்றும் ஒரு கொடுஞ்செயலையும் கண்டறிந்தார். 


அந்தப் பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் பல காலமாக பட்டியல் இன மக்கள் அனுமதிக்கப்படாத பழக்கம் குறித்து அறிந்துள்ளார் மாவட்ட ஆட்சியர். இந்த கொடுஞ்செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க அவர்களை மாவட்ட ஆட்சியரே கோவிலுக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.   


இந்தச் சம்பவத்தின் போது பட்டியலின மக்களை அப்பகுதியைச் சேர்ந்த சாதி வெறியர்கள் நுழையவிடாமல் தடுத்ததையும், கோவிலில் திறக்க முடியாது என்று கூறியதையும், சாமி வந்ததாக ஒரு பெண் ஆடி கோவிலுக்குள் பட்டியலிட மக்களை அனுமதிக்காதீர்கள் என்று அருள்வாக்கு சொன்னதையும் நாம் ஊடகங்களின் வழியாக கண்கூடாக பார்த்தோம். 


கோவிலில் பன்னெடுங்காலமாக நடைமுறையில் உள்ள பழக்கம் சாதிய வெறியாக மாறி பட்டியலிட மக்களுக்கு எதிராக குடிநீரில் மலம் கலக்கும் அளவிற்கு சென்றிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்னும் அங்கு ஒரு சில பகுதிகளில் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் இருப்பதாக கூறுகிறார்கள்.  


இன்னும் சாதி ஏற்றத்தாழ்வுகள் அதிகம் உள்ள பகுதிகளை ஆய்வு செய்தால் அந்த பகுதி கோவில்களில் நடைமுறையில் இருக்கும் சாதியை ஏற்றத்தாழ்வுகளை நாம் அறிய முடியும்.  


 சமூக ஏற்றத்தாழ்வுகளின் பிறப்பிடமாக கோவில்களும் கடவுள் நம்பிக்கையும் இருக்கிறது என்பதே தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் ஆய்வு செய்து கண்டறிந்த உண்மை.  


கோவில் பழக்கவழக்கங்களில் தொடங்கிய சாதிய வன்மம் குடிநீரில் மலம் கலக்கும் அளவிற்கு செல்கிறது என்றால் கோவில்களில் பின்பற்றப்படும் மன்னர் கால, பண்ணையடிமை கால பழக்கங்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வர வேண்டியது கட்டாயமாகும்.  


பெரியார் மறைவுற்று ஐம்பது ஆண்டுகள் கடந்த பின்னும் இன்றும் இதுதான் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணமாக இருக்கிறது என்றால் கோவில் பண்பாட்டுப் பழக்கங்களில் நாம் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து சிந்திக்க வேண்டிய நேரத்தில் உள்ளோம்.


சட்டத்தின் ஆட்சிக்கு எதிராக சமூக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் எல்லா பழக்கங்களையும் மாற்ற வேண்டியது அவசியமாகும்.


பொதுமக்கள் வழிபடும் அனைத்து கோவில்களிலும் மக்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். பரம்பரை அறங்காவலர்கள் என்றும், முதல் மரியாதைக்கு உரியவர்கள் என்றும் தொடரும் முரட்டுத்தனமான நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். திருவிழாக்களில் அனைத்து சமூக மக்களும் பொதுவாக நடத்தப்பட வேண்டும். தனிப்பட்ட சாதிய மண்டகப்படிகள் ஒழிக்கப்பட வேண்டும். பண்பாட்டுப் பழக்கங்களுக்குள் ஒளிந்து கொண்டு பல்லிளிக்கும் சாதிய வன்மங்களுக்கு முடிவு கட்டுவோம். 


தமிழ்நாடு அரசு கோவில்களில் நடைமுறையில் உள்ள சாதி வன்மங்களுக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டும். ஆலயங்களை அழகாக வைத்துக் கொள்ள புதிய ஆகமத்தை உருவாக்கும் உழவாரப் பணியை அரசே முன் நின்று நடைமுறைப்படுத்த வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா