பேராவூரணி அரசு மருத்துவமனையின் அவல நிலையை கண்டித்து நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் வருவாய்த்துறை தலையீட்டின் பெயரில் தற்காலிகமாக ஒத்திவைப்பு. நிர்வாக சீர்கேட்டை சரி செய்து தருவதாக இருதரப்பு பேச்சுவார்த்தையில் மருத்துவமனை தலைமை மருத்துவர் உறுதி.
பேராவூரணி அரசு மருத்துவமனையின் அவல நிலையை கண்டித்து நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் வருவாய்த்துறை தலையீட்டின் பெயரில் தற்காலிகமாக ஒத்திவைப்பு.
நிர்வாக சீர்கேட்டை சரி செய்து தருவதாக இருதரப்பு பேச்சுவார்த்தையில் மருத்துவமனை தலைமை மருத்துவர் உறுதி.
---------
பேராவூரணி அரசு மருத்துவமனை வட்டத் தலைநகரத்தில் இருக்கும் பெரிய மருத்துவமனையாகும்.
இந்த மருத்துவமனையை சுமார் 20 கி.மீ. சுற்றளவில் உள்ள கிராம மக்கள் நம்பி உள்ளனர்.
விபத்துகள், முதுமை, பல்வேறு நோய்கள், நாய்கடி, பாம்பு கடி, மகப்பேறு போன்ற மருத்துவ காரணங்குக்காக இந்த மருத்துவமனையை நாடி வருகின்றனர் ஏழைகள்.
மருத்துவமனை இருக்கு! சுகாதாரம் இல்லை...
படுக்கை இருக்கு! கழிப்பறை இல்லை...
மருத்துவர்கள் இருக்கிறார்கள்! மருந்து இல்லை...
டிஜிட்டல் எக்ஸ்ரே இருக்கு! அதற்குரிய துணைக் கருவிகள் இல்லை... ஒருசில நேரங்களில் பணியாளர் இல்லை...
அறுவை அரங்கம் உண்டு! மயக்க மருத்துவர் இல்லை...
மகப்பேறு சிகிச்சை உண்டு! அல்ட்ரா ஸ்கேன் போன்ற கருவிகள் இல்லை...
24 மணி நேரமும் மருத்துவமனை திறந்திருக்கும்! ஆனால் முதலுதவிக்குத் தேவையான ரத்தம் மற்றும் சிறுநீர் ஆய்வக வசதிகூட 24 மணி நேரமும் இயங்கவில்லை...
இப்படி இருந்தும் இல்லாமலும் இருக்கும் மருத்துவமனை எதற்கு?
என்ன நடக்கிறது இந்த மருத்துவமனையில்...
காலை நேரங்களிலும், மாலை நேரங்களிலும் வெளி நோயாளிகள் மருத்துவம் பெற்றுச் செல்கிறார்கள்.
ஒரு சில மருந்துகளை வெளியிலும், ஒரு சில மருந்துகளை உள்ளேயும் பெறுகிறார்கள்.
அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை அவசர அவசரமாக தஞ்சாவூருக்கோ, புதுக்கோட்டைக்கோ அனுப்பிவிடும் துரிதம் மருத்துவர்களிடம் உண்டு.
காரணம் எந்த அவசர சிகிச்சைக்கும் தேவையான வசதிகள் இந்த மருத்துவமனையில் இல்லை.
மருத்துவமனை வளாகத்திற்குள் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது வளாகத்தை வெளிநபர்கள் ஆக்கிரமிக்கும் செயலும் நடந்து வருகிறது.
பேராவூரணி அரசு பொது மருத்துவமனை நிர்வாக சீர்கேட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக முற்போக்கு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பேராவூரணி வருவாய் துறை சார்பில் மருத்துவமனை நிர்வாகத்தையும் போராடும் ஜனநாயக அமைப்புகளையும் அழைத்து பேசிட முடிவு செய்து இருதரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இன்று 15 12 2022 பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் த. சுகுமார் தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் மேற்கொண்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து மருத்துவமனை நிர்வாகத்தை சீர் செய்து தர வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இருதரப்பு பேச்சு வார்த்தையின் முடிவில்
போராட்டக் குழுவினரின் கோரிக்கை தொடர்பாக கும்பகோணம் மாவட்ட இணை இயக்குனர் அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரியப்படுத்துதல் வேண்டும்.
விஷக்கடி மருந்து மற்றும் அவசிய மருந்துகள் எல்லா நேரங்களிலும் தடை இன்றி கிடைத்திட செய்தல் வேண்டும்.
தடை செய்யப்பட்ட இருமல் மருந்தினை பரிந்துரை செய்யாமலும் வெளியில் வாங்கி வரச் சொல்லாமலும் கண்காணித்திடல் வேண்டும்.
மருத்துவமனையில் பூட்டப்பட்ட கழிவறைகளை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வருவதுடன் தூய்மையாக தொடர்ந்து பராமரித்திட வேண்டும்.
உள் நோயாளிகள் படுக்கைகள் மற்றும் தளவாடங்கள் சரி செய்து போதிய அளவிலும் தொடர்ந்து பராமரிக்கவும் வேண்டும்.
சிடி ஸ்கேன் டிஜிட்டல் எக்ஸ்-ரே ஆகியவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
தரமான உணவு வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்
போதிய இரவு காவலர்களை நியமிக்க வேண்டும்.
புகார் பெட்டி மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் அடங்கிய விவரப் பலகை மருத்துவமனை வளாகத்திற்குள் அமைத்திட வேண்டும்.
மருத்துவமனையில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை மூலமாக அகற்றிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மயக்க மருத்துவர் பல் மருத்துவர் இதய மருத்துவர் நரம்பியல் மருத்துவர் கட்டு போடும் பணியாளர் மருந்தாளுநர் ஆகியோர் நிரந்தரமாக பணி புரிந்திடவும் தனித்தனி பிரிவுகள் அமைத்திடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
உள் நோயாளிகளின் உறவினர்கள் தங்கிட அறை வசதியினை ஏற்படுத்தித் தர வேண்டும்.
போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைமை மருத்துவரை நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
பிணவறைக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள் தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவமனை நிர்வாகம் சிறப்பாக நடைபெறுவதை தலைமை மருத்துவ அலுவலர் தொடர்ந்து கண்காணித்திட முறையான நடவடிக்கை வேண்டும்.
மருத்துவமனை வளாகத்திற்குள் வரும் கால்நடைகளை பேரூராட்சி மற்றும் காவல்துறையினர் மூலம் கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவமனை கழிவறைகளையும் மருத்துவமனை வளாகத்தினையும் முழுவதுமாக தூய்மைப்படுத்தும் பணியையும் மருத்துவமனை வளாகத்திற்குள் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியையும் வருகிற 15 01 2023க்குள் செய்து முடித்திட வேண்டும்.
மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திடவும் செம்மையாக நிர்வாகம் செய்திடவும் மருத்துவர்கள் தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய மருத்துவமனை மேலாண்மை குழுவை அமைத்து அவர்களுக்கான கூட்டம் 31 01 2023 அன்று நடத்திட ஏற்பாடு செய்திட வேண்டும்
என்று இருதரப்பு பேச்சுவார்த்தை நிறைவில் முடிவுகள் எட்டப்பட்டது.
இன்று நடைபெற்ற இரு தரப்பு அமைதி பேச்சுவார்த்தை நிர்வாக சீர்கேட்டை சரி செய்வதில் ஒரு நல்ல தொடக்கத்தினை கண்டிருப்பதாகவே தெரிகிறது. மருத்துவமனையில் நல்ல மாற்றம் ஏற்பட தொடர்ந்து குரல் கொடுப்போம்.
அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர்கள், திராவிடர் விடுதலைக் கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி போன்ற அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களும் மெய்ச்சுடர் சார்பில் நாமும் கலந்து கொண்டோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக