"நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்"


பெயரிலிருந்து திட்டத்தின் கருத்துரு வரை பெரும் விவாத பொருள் ஆகி இருக்கிறது தமிழ்நாடு அரசின் நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம்.


கழிவறை இல்லை

வகுப்பறை இல்லை

போதிய இடவசதி இல்லை

ஆசிரியர்கள் பற்றாக்குறை

ஆய்வகங்கள் இல்லை

நூலகம் இல்லை

நூலகம் இருந்தும் பயன்படுத்துவதில்லை இப்படி ஏராளமான இல்லைகள் நிறைந்தது தான் அரசுப் பள்ளி.  


பழைய ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெறும் ஆசிரியர்கள்,

காலமுறை ஊதியம் பெறும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பயன்பெறும் ஆசிரியர்கள்,

ஓய்வூதியம் இல்லாத காலமுறை ஊதியம் பெறாத தொகுப்பூதிய திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள்,

ஓய்வூதியமும் காலமுறை ஊதியமும் தொகுப்பூதியமும் இல்லாத பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமிக்கப்படும் ஆசிரியர்கள்,

ஓய்வூதியமும் காலமுறை ஊதியமும் தொகுப்பூதியமும் இல்லாமல் ஆயிரம் ரூபாய் ஊதியத்திற்கு பணியாற்றும் இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள்

என பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கொண்ட ஆசிரிய பட்டாளத்தோடு அரசுப் பள்ளிகள் இயங்கி வருகிறது.


 மேலும் பி.எட் அல்லது டிடிஎட் படித்த  தகுதி தேர்வு  வருவதற்கு முன்பே பணிக்கு வந்த ஆசிரியர்கள்,  டி ஆர் பி நடத்திய தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் தகுதி தேர்வு வருவதற்கு முன்பே பணிக்குச் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறாமல் பி எட் அல்லது டிடிஎட் முடித்த தற்காலிக ஆசிரியர்கள், பி எட் டிடிஎட் படிக்காமலேயே பிளஸ் டூ வில் இருந்து பிஎச்டி வரை படித்துவிட்டு இல்லம் தேடிக் கல்வியில் ஆசிரியரானவர்கள் என பல்வேறு தகுதிகளில் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் மாணவர்களை வழிநடத்தி வருகிறார்கள். 


ஐந்து வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலையிலிருந்து ஐந்து வகுப்புக்கு 5 ஆசிரியர் என்ற நிலையிலும் பள்ளிகள் வேறுபட்டு இயங்குகிறது.

30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதநிலை அடிப்படையில் ஆசிரியர் நியமனங்கள் என்று சொன்னாலும் ஆசிரியர் நியமனம் செய்து ஆண்டுகள் பல ஆகிறது.  60 மாணவர்களை ஓர் ஆசிரியர் மட்டுமே வழி நடத்தும் நிலையும் பல பள்ளிகளில் உள்ளது.


பல்வேறு பொருளாதார ஏற்றத்தாழ்வுகளோடு, பல்வேறு ஏற்றத் தாழ்வுகள் கொண்ட தகுதி நிலைகளோடு ஆசிரியர்கள் மட்டுமல்ல... ஆங்கில வழிக் கல்வி தமிழ் வழி கல்வி என கல்வி வழங்கும் முறையிலும் வேறுபாடுகள் கொண்டுதான் அரசு பள்ளிகள் இயங்கி வருகிறது.


பாடப் புத்தகங்களில் சமச்சீரை கொண்டுவந்துள்ள தமிழ்நாடு அரசு பள்ளி கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள் தகுதி நிலையில் சமச்சீரை நடைமுறைப்படுத்தவில்லை.  


அரசு பள்ளிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தாலும் அவைகள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட எந்த முனைப்பையும் அரசோ அதிகாரிகளோ காட்டியதாக தெரியவில்லை.  அதனால் தான் இவ்வளவு சீர் கேட்டு கிடக்கிறது அரசுப் பள்ளிகள்


எல்லா நிர்வாக சீர்கேடுகளுக்கு பின்னாலும் பெரும் கொள்ளை திட்டம் உள்ளது என்பதை பல நிலைகளில் நாம் உணர்ந்து இருக்கிறோம்.  அரசுத் துறையை தனியார் மயமாக்கும் செயல்திட்டத்தின் ஒரு பிரிவு தான் நிர்வாகச் சீர்கேடு.  


பிஎஸ்என்எல் நிர்வாக சீர்கேடு பல தனியார் தொலைத்தொடர்பு துறைகள் வளர்ச்சிக்கு வழி வகுத்தது.


இந்திய அஞ்சல் துறை நிர்வாக சீர்கேடு பல தனியார் துறை துரித அஞ்சல் நிறுவனங்களுக்கு பச்சைக் கம்பளம் விரித்தது.


இப்படி தனியார் துறை வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அரசு துறையின் நிர்வாக சீர்கேட்டை வளர்த்தெடுக்கும் பணியில் அரசும் ஆட்சியாளர்களும் பொது நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். 


தனியார் பங்களிப்போடு அரசே ஒரு செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை நாம் ஏற்கலாம்.  ஆனால் பொதுமக்களின் பொது ஊழியர்களின் பங்களிப்பை சேர்த்து தனியாரிடம் கொடுத்து நிர்வாகம் செய்யக் கோருவது பெருங்குடுமை.  


கல்வி அமைச்சர் தொடங்கி தலைமைச் செயலாளர், மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் அதிகாரிகள், ஒவ்வொரு பள்ளிக்கும் தலைமை ஆசிரியர் தலைமையில் நிர்வாகம் என பெரும் நிர்வாகக் கட்டமைப்பு கொண்டது கல்வித்துறை.  


தமிழ்நாடு முழுவதும் 37 ஆயிரம் அரசு பள்ளிகள் இருப்பதாக கூறுகிறார்கள்.   அத்தனைப் பள்ளிகளையும் நிர்வாகம் செய்யும் பெரும் பொறுப்பை தனியாரிடம் தாரை வார்க்கும் பெரும் திட்டத்தை சட்டமன்றத்தில் எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றி இருக்கிறது தமிழ்நாடு அரசு.  தமிழ்நாடு முதலமைச்சர் நம்ம ஸ்கூல் பவுண்டேஷனுக்கு ஐந்து லட்சம் நிதி கொடுத்து முதலாவதாக ஆதரித்து இருக்கிறார்.  தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஒரு லட்சம் நிதி கொடுத்திருக்கிறார்.  ஒரே நாளில் 50 கோடி நிதியை திரட்டி இருக்கிறது "நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்" 


 சீர்கேடான அரசு நிர்வாகத்தில் இருந்து அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்க வேண்டும்.   அதற்காகவாவது தனியார் துறை நிர்வாகத்தை அரசு பள்ளிகள் மீது திணிக்க வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள்.  ஒருவேளை வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் அகரம், திசைகள் போன்ற அரசு பள்ளி மாணவர்களுக்காக செயல்படும் அமைப்புகள் அல்ல என்பது தான் பெரும் சோகம்.  பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருப்பவர்களை, அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கையற்றவர்களை, அரசுப் பள்ளிகளுக்காக அரசு பள்ளி மாணவர்களுக்காக எந்த செயல்பாடுகளும் செய்யாத கார்ப்பரேட் மனிதர்களிடம் அரசு பள்ளி நிர்வாகத்தை கொடுத்து இருப்பது தான் பெரும் சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது.  


மாநில அரசு அமைத்திருக்கும் புதிய கல்விக் கொள்கைக்கான குழுவின் அறிக்கை இன்னும் பெறப்படாத நிலையில் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின் அம்சத்தை தமிழ்நாடு அரசு  அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.  எதிர்ப்பது போல பேசிக்கொண்டே ஆதரிப்பது ஆபத்தானது.


திட்டத்தின் பெயர் தொடங்கி அதன் செயல்பாடு வரை மோசமான விமர்சனத்தை கொண்டிருக்கும் இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்... 


தனியார் பங்களிப்பை முன்னாள் மாணவர்கள் பங்களிப்பை பொதுமக்கள் பங்களிப்பை அரசே பெற்று அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா