எளியவர்களுக்கு வாழ்வு தரும் வங்கி மேலாளர் ராகவன் சூர்யேந்திரன்
பேராவூரணி எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையின் முதுநிலை மேலாளராக பணியாற்றி வருகிறார் திரு ராகவன் சூர்யேந்திரன்.
வங்கிகளில் மேலாளர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் கார்ப்பரேட் மனநிலையோடு பயணிப்பதை பார்த்திருக்கிறோம்.
இலக்கியம் சமூகம் என பன்முக பார்வையோடு வங்கிப் பணி செய்வது அரிதிலும் அரிது.
பதவியும் அதிகாரமும் பரிதவிக்கும் மக்களுக்கு பக்க பலனாக பணியாற்றுவதற்கு தான் என்ற சிந்தனையோடு செயலாற்றும் வங்கி மேலாளர்.
கடன் கேட்டு வங்கிக்கு வருபவர்களை "ஏமாற்று பேர்வழிகளை" போலவே பார்க்கும் மேலாளர்களுக்கு மத்தியில் அவர்களோடு உரையாடுகிறார். கடன் தேவை குறித்து வாடிக்கையாளர்களிடம் உளவியலாக இவர் நிகழ்த்தும் உரையாடல் பலரை வாழ்வித்திருக்கிறது.
கல்விக்கடன் கேட்டு வரும் மாணவர்களிடம் வங்கிப் பயன்பாடு குறித்து இவர் நிகழ்த்தும் கலந்துரையாடல் மாணவர்களிடம் பெரும் பொறுப்புணர்ச்சியை உருவாக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கல்விக்கண் திறக்கும் வங்கிக்கு உண்மை உள்ளவர்களாக நடந்து கொள்ளுங்கள் என்று வகுப்பு எடுத்து கல்விக்கடன் வழங்குகிறார். இவரிடம் கடன் பெற்ற மாணவர்கள் உரிய நேரத்தில் கடனை திருப்பி செலுத்தும் சிந்தனை கொண்டவர்களாக மாறி போகிறார்கள். இப்பகுதி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மத்தியில் இவர் ஒரு வங்கி மேலாளராக மட்டும் தெரிவதில்லை, மாணவர் நலனில் அக்கறை கொண்ட ஒரு ஆசிரியரைப் போல தெரிகிறார்.
வங்கி மேலாளராக இருக்கும் காலத்தில் கணக்கிற்காக ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுத்து கணக்கை முடித்துக் கொள்ளும் நிலையைத் தான் நாம் கண்டிருக்கிறோம். ஆனால் இவரோ ஒழுக்கமும் கடனை திருப்பிச் செலுத்தும் பண்பும் கொண்ட புதிய தொழில் முனைவோர்களை கண்டறிந்து கடன் அளிக்கிறார்.
தேசத்தின் வளர்ச்சி என்பது பெண்களை அதிகார படுத்துவதில் இருந்து தொடங்குகிறது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையும் உறுதியும் கொண்டு செயல்படுகிறார் ஐயா ராகவன் சூர்யேந்திரன். முறையாக செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல லட்சங்களில் இவர் வாரி வழங்கி வரும் கடன் திட்டங்கள் பெண்களை தன்னம்பிக்கை உள்ளவர்களாக உருவாக்கியுள்ளது. கந்து வட்டிக்கு கடன் பெற்று அழியும் நிலையை மாற்றி வருகிறது
முறையான ஆவணங்களுடன் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் செயல்முறைகளை எளிதாக்கி வங்கி மீதான நன்னம்பிக்கையை வளர்த்து வருகிறார்.
புதிய புதிய வாடிக்கையாளர்களை வங்கியில் சேர்த்திட புன்னகை பூத்திட பணியாற்றுகிறார். புதிதாக வங்கிக்கு வருபவர்களிடம் வங்கி சேவையின் அவசியத்தையும் சேமிப்பின் நோக்கத்தையும் பளிச்சென பேசி வங்கி வாடிக்கையாளராய் மாற்றி விடுவார். வங்கியில் பணியாற்றும் அதிகாரிகளையும் பணியாளர்களையும் சொந்த உறவுகளைப் போல் அரவணைத்து அழைத்துச் செல்கிறார்.
மக்களின் நலனுக்காக வங்கி செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களையும் அனைவரும் அறியும் வகையில் பலருக்கும் அறிமுகப்படுத்துவது தான் இவரின் பெரும் பணி.
ஒருமுறை கனரக வாகனத்தை இயக்கும் ஓட்டுநர் ஒருவரிடம் விபத்து காப்பீட்டின் அவசியத்தை வலியுறுத்தி மிகக் குறைந்த கட்டணத்தில் 20 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கும் திட்டத்தை இவர் அறிமுகப்படுத்தியுள்ளார். அதன் விளைவாக, ஓட்டுநரும் அந்தத் திட்டத்தில் தன்னை சேர்த்துக் கொண்டுள்ளார். திட்டத்தில் இணைந்து கொண்ட ஒரு சில மாதங்களில் ஒரு விபத்தில் அந்த ஓட்டுநர் இறந்து போக 20 லட்சத்தை அவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக பெற்றுக் கொடுத்துள்ளார் வங்கி மேலாளர்.
திருமண வயதில் மகளையும் கல்லூரியில் படிக்கும் மகனையும் பெற்ற அந்த ஓட்டுநரின் மனைவி கண்களில் நீர் கசிய வங்கி மேலாளரை பார்த்து தனது இரு கரங்களையும் இணைத்து கூப்பிய அந்த காட்சி பார்ப்பவர் கண்களை குளமாக்கிவிடும்.
இவரது வங்கி மேலாளர் அறைக்குள் பெரும் வணிகர்கள் மட்டும் வந்து செல்வதில்லை, கடைக் கொடியில் வசிக்கும் காளியம்மாளும் கருப்பையாவும் வந்து செல்கிறார்கள். பாமர மக்களான அவர்களிடம் பகுத்தறிந்து பேசுகிறார். அவர்களோடு பேசி மனம் விட்டு அறை அதிர சிரிக்கிறார். உற்சாகமூட்டுகிறார். உதவிக்கரம் நீட்டுகிறார்.
உள்ளத்தில் ஆழத்திலிருந்து அருள் கசிய அதிகாரியாக பணியாற்றும் பேராவூரணி எஸ்பிஐ வங்கியின் முதுநிலை மேலாளர் ஐயா ராகவன் சூர்யேந்திரன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஞாயிறு விடுமுறை நாளென்றும் பாராது இவர் தனது வங்கிப் பணியாளர்களை அழைத்துக் கொண்டு பேராவூரணி பெருநகர் வீதிகளில் வங்கியின் திட்டங்களை விளக்கிச் சென்ற வீதி உலா பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது.
இன்னும் பல்லாண்டுகளுக்கு உங்களின் பணிகளை பேராவூரணி நகர் பறைசாற்றி கொண்டே இருக்கும் ஐயா.
மெய்ச்சுடர் வாசகர்களோடு உங்களை அறிமுகம் செய்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
நம்பிக்கையுடன்
ஆசிரியர்
மெய்ச்சுடர்.
12.12.2022
கருத்துகள்
கருத்துரையிடுக