வயது ஏழு... படிப்பது இரண்டாம் வகுப்பு... நெடுந்தொலைவு ஓட்ட (மாரத்தான்) போட்டியில் 21 கிலோமீட்டர் ஓடி சாதனை!
வயது ஏழு...
படிப்பது இரண்டாம் வகுப்பு...
நெடுந்தொலைவு ஓட்ட (மாரத்தான்) போட்டியில் 21 கிலோமீட்டர் ஓடி சாதனை!
------------------------
ஊரகப்பகுதி எளிய மாணவர்களின் நலன் கருதி தொடங்கப்பட்டு பெற்றோர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி.
பேராவூரணி வட்டாட்சியர் வளாக விளையாட்டு திடலில் பயிற்சி மேற்கொண்டு வரும் சின்னஞ்சிறார்களுக்கு பயிற்சியை வழங்கி வருகிறார் முதுநிலை விளையாட்டு ஆசிரியரான தோழர் மருத உதயகுமார்.
தொடங்கிய ஒரு மாதத்திற்குள் இந்த ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வரும் 15 சிறுவர்கள் கீரமங்கலம் ஜே சி ஐ அமைப்பால் நடத்தப்பட்ட நெடுந்தொலைவு ஓட்டப் போட்டியில் பங்கேற்றனர்.
சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு சிவ.வி. மெய்யநாதன் தொடங்கி வைத்த இந்த போட்டியில் ரிஸ்வா என்கிற சின்னஞ்சிறு பாலகன் ஆண்களுக்கான போட்டி இலக்கான 21 கிலோ மீட்டர் தொலைவை தொட்டு சாதனை படைத்தான்.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தொடர்ந்து ஓட அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுவன் ஆண்களுக்கான ஓட்ட இலக்கை அடைந்தான்.
பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ரிஸ்வாவின் இந்தச் சாதனைக்கு முக்கிய காரணமாக விளையாட்டு ஆசிரியர் கூறியதாவது: " இது போன்ற மாரத்தான் போட்டிகளில் இலக்கை அடைந்திட மிகவும் அவசியமானது பயிற்சி. ரிஷ்வா என்ற மாணவன் இலக்கை அடைந்திட காரணமாக அமைந்ததும் அவனது தொடர் பயிற்சிதான். இந்த மாணவன் ஓராண்டுக்கும் மேலாக ஓடி பயிற்சி மேற்கொண்டுள்ளான்" என்றார்.
இளம் வயதில் இலக்கை அடைந்த ரிஸ்வா உள்ளிட்ட பங்கேற்ற அனைத்து மாணவர்களும் பேராவூரணி வட்டாட்சியர் திரு த.சுகுமார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த நிகழ்வில் பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சித்ராதேவி, ஆசிரியர் காஜாமுகைதீன், துணை வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், திருவள்ளுவர் போட்டித் தேர்வு பயிற்சி மைய ஆசிரியர் ரே.சந்தோஷ் , சமூக செயற்பாட்டாளர் சித. திருவேங்கடம், கல்வியாளர் சீ.கௌதமன், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக