தமிழர்களின் பெருமையைப் பாதுகாக்கும் பணிக்கு ஆசிரியர்கள் பேராதரவு



தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் இந்த ஆண்டு நம்பகுதியில் தமிழ்நாள்காட்டி அறிமுக விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழ் உணர்வாளர்கள் தமிழ் நாள்காட்டியை பெற்றுச் சென்றனர். இந்நிகழ்வு குறித்து மெய்ச்சுடர் ஊடகத்தின் பதிவை படித்தவர்கள் தமிழ் நாள்காட்டி வேண்டி நம்மைத் தொடர்பு கொண்டு பெற்று வருகிறார்கள்.
மேலும் இந்த நாள்காட்டியை ஆசிரியர்களிடம் எடுத்துச் செல்லவேண்டும் என்று விரும்பினோம். முதலில் சேதுபாவாசத்திரம் பள்ளியில் நடைபெற்று வரும் ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி கேட்டோம். பயிற்சிஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கருணாகரன் அவர்கள் மகிழ்வோடு எங்களை பள்ளிக்கு அழைத்தார். பள்ளி ஆசிரியர்களிடம் தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் அறிமுகத்தையும், நாள்காட்டியின் அறிமுகத்தையும் செய்தோம். வெகுவாக வியந்த ஆசிரியர்கள் தமிழர்களின் எண்கள் பொறிக்கப்பட்ட இந்த நாள்காட்டியை பெருமை பொங்க பெற்றுக் கொண்டனர். அந்தப் பள்ளியைத் தொடர்ந்து ஆசிரியர்கள் கோவி.தாமரைச்செல்வன், ரஞ்சித்குமார், காஜாமுகைதீன் ஆகியோரின் அழைப்பின் பெயரில் பல்வேறு இடங்களில் நடந்துவரும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெறும் பள்ளிகளிலெல்லாம் சென்று ஆசிரியர்களிடம் கொடுத்து வருகிறோம். ஒவ்வொரு ஆசிரியர்களும் தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் தமிழ்நாள்காட்டியை மகிழ்வோடு பெற்று வருகிறார்கள்.
நமது தமிழ் எண் வரிவடிவங்களின் தொன்மையை மொரீசியஸ் நாட்டு நாணயம் அறிந்த அளவுக்குக்கூட நாம் அறியாமல் இருக்கிறோம். நமது மொழியின் எண்களையும் மாதங்களின் தமிழ்ப் பெயர்களையும் எங்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்போம் என்றார்கள் ஆசிரியர்கள். தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் தமிழ் மொழி சார்ந்த இந்த முன்னெடுப்பிற்கு பேராதரவு தரும் ஆசிரியர் சமூகத்திற்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
ஆசிரியர்கள் அனைவரும் நாள்காட்டியை உயர்த்திப்பிடித்து பெருமையோடு ஒளிப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இந்த நாள்காட்டி பேராவூரணி காய்கறிச் சந்தை எதிரில் உள்ள பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு 9842609980, 8248672425.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா