"தமிழ்நாட்டு அரசு தமிழ் சித்த மருத்துவப் பயன்பாட்டினை அதிகப்படுத்த வேண்டும்" தமிழ்வழிக்கல்வி இயக்கம் கோரிக்கை.


தமிழ் சித்த மருத்துவப் பயன்பாட்டை மக்களிடம் கொண்டுசெல்ல ஆட்சியாளர்கள் முனைப்பு காட்டவேண்டும் என்று தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் தலைவர் அ.சி.சின்னப்பத்தமிழர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவரின் அறிக்கை.


பெரும் நோய்த் தொற்று காலத்தில் தமிழ் மருத்துவ முறைகளை மறுப்பதும் குமுக நீதிக்கு எதிரானதல்லவா?
தமிழ்நாட்டு அரசு குமுகநீதிக்கான பல்வேறு நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு, தமிழ்நாட்டில் தமிழ்ப் படித்தவர்களுக்கே வேலை போன்ற அரசின் அறிவிப்புகள் மகிழ்ச்சியை தருகிறது. தமிழ்நாட்டு அரசின் இத்தகையச் செயல்பாடுகளுக்கு வரவேற்பளிக்கிறோம்.

அதே நேரத்தில் உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக பல்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக மருத்துவ நடவடிக்கைள் மூலம் மக்களைக் காக்க ஆட்சியாளர்கள் முனைப்புக் காட்டி வருகிறார்கள். நம் தமிழ்நாட்டின் பரம்பரை மருத்துவ முறையான சித்த மருத்துவத்திற்கான ஆய்வுகளும், அதன் பயன்பாடும் இந்த நேரத்தில் அதிகமாகியிருக்க வேண்டும். மாறாக சில ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ் மருத்துவ முறைகள் குறித்தும் அந்த மருத்துவப் பயன்பாடுகள் குறித்தும் ஆட்சியாளர்கள் முனைப்புக் காட்டி வந்தார்கள். தற்போது தமிழ் மருத்துவத்திற்கான குரல் மங்கத் தொடங்கியுள்ளது. எந்த நேரமும் தடுப்பூசி குறித்து மட்டுமே அமைச்சர்களும், அதிகாரிகளும் பேசி வருகிறார்கள். நோய்த் தடுப்பு முறையாகவும், நோய் எதிர்ப்பு ஆற்றலை வழங்குவதாகவும் உள்ள நமது மரபு வழிச் சித்த மருத்துவத்தை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டியது காலத்தின் தேவையாகும்.

தடுப்பூசி குறித்து மக்களிடம் உள்ள ஐயத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் மாற்று மரபு மருத்துவ முறைகள் குறித்து ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது. சித்த மருத்துவத்திற்கென்று தனி அமைச்சகம் அமைத்து செயல்படுவதாக அறிவித்து ஆட்சிக்கு வந்த குமுக(சமூக) நீதிக்கான அரசு அதை நடைமுறைப்படுத்த காலதாமதப்படுத்துவது ஏன்? மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் தலையிட்டு உடனடியாக தமிழ்நாட்டின் மக்களை காத்திட தமிழ் மருத்துவத்திற்கான தனி அமைச்சகத்தை அமைத்து தமிழ் சித்த மருந்துக்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.

தொடர்ந்து தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவம் தமிழ்நாட்டிலேயே புறக்கணிக்கப்பட்டால் சித்த மருத்துவம் பயின்ற ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் தற்போது பயின்றுவரும் மருத்துவ மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகும். எனவே தமிழர்களின் மிகப் பழைமைமிக்க மருத்துவக் கட்டமைப்பான தமிழ் - சித்த மருத்துவத்தை நவீன ஆய்வுகளுக்கு உட்படுத்த, தமிழ்மருத்துவப் பல்கலைக்கழகம் அமைத்து ஒழுங்குபடுத்த வேண்டும். தமிழ் மருத்துவம் பயின்ற மருத்துவர்களை அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச்சுகாதார நிலையங்களில் பணியமர்த்த வேண்டும். இது தமிழ் மருத்துவத்தை மாணவர்கள் விரும்பிப் படிப்பதற்கும் அந்த மருத்துவம் குறித்த ஆய்வுகளுக்கும் வலிமை சேர்க்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா