எளியவர்கள் வாழ்வில் ஏற்றம்! அடிப்படை வசதியின்றி தவித்த ஏழைகளுக்கு குடிமனைப் பட்டா வழங்கியது பேராவூரணி வருவாய் நிர்வாகம்.




எளியவர்கள் வாழ்வில் ஏற்றம்! அடிப்படை வசதியின்றி தவித்த ஏழைகளுக்கு குடிமனைப் பட்டா வழங்கியது பேராவூரணி வருவாய் நிர்வாகம்.

------------------
குடியிருக்க வசதியில்லாமல் தனிநபருக்குச் சொந்தமான தோப்புகளில் குடிசைபோட்டு வாழ்ந்து வந்த 68 குடும்பங்களை இனம்கண்டு அவர்களுக்கு பேராவூரணி வட்டம், ஆதனூர் வருவாய் கிராம எல்லையில் கொரட்டூர் கிராமத்திற்கு அருகில் குடியிருப்புப் பகுதியை உருவாக்கி கொடுத்திருக்கிறது பேராவூரணி வருவாய்த்துறை நிர்வாகம்.

திருவள்ளுவர் நாளைக் கொண்டாடிய கையோடு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த குடியிருப்புப் பகுதிக்கு திருவள்ளுவர்புரம் என்ற பெயரைச் சூட்டி அதற்கான பெயர்ப் பலகையை பட்டுக்கோட்டை துணை ஆட்சியர் பிரபாகர் கரங்களைக் கொண்டு திறக்கச் செய்துள்ளார் பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் த.சுகுமார்.

எளியவர்களின்பால் இரக்கமும், அவர்களுக்கான வாழ்வியல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் முனைப்பாகச் செயல்பட்டு வருகிறார் பேராவூரணி வட்டாட்சியர் த.சுகுமார்.

வாழ இடமின்றி தோப்புகளுக்குள் குடியிருந்து கொண்டு ஒவ்வொரு மழைக் காலங்களையும் பள்ளிக் கட்டிடங்களைப் புகலிடமாக்கிக் கொண்டு வாழ்ந்துவரும் 68 குடும்பங்களில் இன்று விளக்கேற்றி வைத்திருக்கிறார் வட்டாட்சியர்.

பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்களில் நீர் கசிய அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் அதிகாரிகளை அழைத்து தேங்காய் உடைக்கச் செய்து நெகிழ்ந்தனர்.


"ஆரம்பத்துல குடிமனைக்காக மனு கொடுத்துட்டு எப்ப மனை தருவாங்கன்னு எதிர்பார்ப்போட காத்துகிட்டு இருப்போம். ஒவ்வொரு மழை நேரத்திலும் குடிசையில் உள்ள தட்டுமுட்டு சாமான்களை எடுத்துக்கிட்டு பள்ளிக்கூடத்துல போயி படுத்துக்கிடப்போம். அப்போதெல்லாம், நம்ம பிள்ளைகளாவது சொந்த வீட்டில் வாழ வழி பொறக்காதான்னு ஏங்கிக்கெடப்போம். பல முறை மனு கொடுத்து சோந்து போயிருந்த நேரத்துல..." பயனாளியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது.

"இப்போதும் எங்களுக்கு ஆவுடையார்கோயில் - காலகம் முக்கியச் சாலையில் இடம் கிடைக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை. அதிகாரிகளும் எங்க எம்.எல்.ஏ.வும் நூறாண்டுகாலம் வாழவேண்டும்" உணர்சிவயப்பட்டார் ஒரு வயதான மூதாட்டி.


பேராவூரணியில் வட்டாட்சியராகப் பதவி ஏற்றுக்கொண்ட குறுகிய காலத்திற்குள் இப்படியொரு சிறப்பான பணியைச் செய்துள்ள வட்டாட்சியருக்கும் அவரது தலைமையில் பணியாற்றும் மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் என ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள்.

திருவள்ளுவரைத் தொடர்ந்து வள்ளலார், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், மறைமலைஅடிகள், பாவலரேறு பெருஞ்சித்திரனார், வ.உ.சி. போன்ற நூற்றுக்கணக்கான தமிழ்ச்சான்றோர்களின் பெயர்களைத் தாங்கிய எளியவர்களுக்கான குடியிருப்புகளை உருவாக்குவதுதான் இலக்கு என்று சிரிக்கிறார் பேராவூரணி வட்டாட்சியர் த.சுகுமார்.

இந்த நேரத்தில் எளியவர்களின் வாழ்வாதாரம் காத்திட தொடர்ந்து துணை நிற்கும் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் புரத்திற்கு பேராவூரணி பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக குடிநீர், சாலை, கழிப்பிடம், தெருவிளக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அரசின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டப்பட்டு அந்த ஏழைக் குடும்பங்களின் புதுமனைப் புகுவிழாவை விரைவிலேயே நாம் காணவேண்டும்.

இந்த நெகிழ்வான நிகழ்வில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் தவிர்க முடியாத காரணங்களால் கலந்து கொள்ளவில்லை. அவரது சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக பேச்சாளர் தமிழ்க்கடல் அப்துல் மஜீது, ஆசிரியர் ஆனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் குடிமனைப் பட்டா வழங்க முனைப்போடு செயல்பட்ட வருவாய் ஆய்வாளர்கள் கிள்ளிவளவன், மண்டல துணை வட்டாட்சியர் கவிதா, பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல், வருவாய் ஆய்வாளர்கள் கமலநாதன், முருகேசன், முத்துகிருஷ்ணன், ராஜசேகர், வெற்றிச்செல்வி, சரக குறுவட்ட அளவையர் கோபி, சந்தோஸ், சுகாதார ஆய்வாளர் அன்பரசன், கிராம நிர்வாக அலுவலர்கள் சிவா, நூர்ஜகான், கருப்பையா, அலுவலக உதவியாளர் கணேசன், கிராம உதவியாளர்கள் சக்திவேல், சிவகுமார், கார்த்திக், சுரேஷ் மற்றும் செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாய்ச் சுற்றும் உலகு





















மகிழ்வோடு...
நா.வெங்கடேசன்,
ஆசிரியர், மெய்ச்சுடர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா