பேராவூரணி ஜேசிஐ அமைப்பிற்கு வாழ்த்துக்கள்
பேராவூரணி ஜேசிஐ அமைப்பு 2022 ஆம் ஆண்டுக்கான புதிய ஆட்சிமன்ற குழுவுடன் செயல்படத் தொடங்கியிருக்கிறது.
தனிமனித மேம்பாட்டுக்கான பன்னாட்டு அமைப்புகளில் குறிப்பாக இந்த அமைப்புகளுக்கான பேராவூரணி போன்ற சிறிய நகரங்களில் பெண்களின் பங்கேற்பு என்பது மிகவும் குறைவு. இதுவரை இதுபோன்ற அமைப்புகளில் பெண்களின் தலைமை நம் பகுதியில் அமைந்ததில்லை.
இந்த நிலையில்
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே
என்ற இலக்கண மரபுக்கு ஏற்ப பேராவூரணி ஜேசிஐ அமைப்புக்கு ஒரு பெண் தலைமை ஏற்று இருப்பது பாராட்டுக்குரியது.
பேராவூரணி ஆர் ஜெயலட்சுமி இந்த அமைப்பிற்கு புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.
அவர் தலைமையிலான ஆட்சி மன்ற குழு போகித் திருநாளில் பதவி ஏற்றுக் கொண்டது.
பெண் தலைமைக்கான முன்னெடுப்புகளை செய்த இந்த அமைப்பின் நிர்வாகிகள் அனைவருமே போற்றுதலுக்கு உரியவர்கள்.
ஜெயலட்சுமி அவர்களோடு புதிய செயலாளராக எஸ் மாதவன், பொருளாளராக கே ராஜராஜன், இணைச் செயலாளராக ஆசிரியர் சத்தியமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
புதிய ஆட்சிமன்ற குழு பதவி ஏற்பு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் சமூகச் செயல்பாடுகளில் முனைப்பாக செயல்படும் பல்வேறு அமைப்புகளுக்கு விருது வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. மெய்ச்சுடர் இதழாசிரியருக்கு இந்த நிகழ்வில் விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார்.
நீர்நிலைகளைப் பாதுகாக்கும் கைஃபா அமைப்பிற்கும், பசுமை சூழலுக்காக தொடர்ந்து செயலாற்றி வரும் துளிர் அமைப்புக்கும், ஆலமரத்து விழுதுகள் அமைப்புக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.
நம் இதழின் பணிகளை தொடர்ந்து கவனித்து நம் இதழுக்கு விருது வழங்க பரிந்துரை செய்த இந்த அமைப்பின் சாசன தலைவர் கே சரபோஜி, 2021 ஆம் ஆண்டு தலைவர் சத்திய ஜெகதீசன் உள்ளிட்ட தோழமைகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
பதவியேற்பு நாளில் பேராவூரணி வட்டாட்சியர் த.சுகுமார் அவர்களும் மருத்துவர் துரை.நீலகண்டன் அவர்களும் பேராசிரியர் பா.சண்முகப்பிரியா அவர்களும் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
புதிய திசை நோக்கி பயணிக்கட்டும் பேராவூரணி ஜேசிஜ அமைப்பு.
ஆசிரியர்
மெய்ச்சுடர்.
கருத்துகள்
கருத்துரையிடுக