பேரிடர் மீட்புப் பணிக்கு பேராவூரணி வருவாய் துறையினர் நிவாரணம் சேகரிப்பு
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நீரிடி மழை காரணமாக ஏற்பட்டுள்ள பேரிடரில் இருந்து மக்களை மீட்கும் பணியில் பேராவூரணி வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
கஜா புயலால் பேராவூரணி மக்கள் பெரும் துயரை சந்தித்த காலத்தில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சாரை சாரையாய் வந்த வாகனங்களில் நமது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கான பொருட்கள் குவிந்து இருந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நமது வருவாய் துறை அதிகாரிகள் நேரில் சென்று பொதுமக்களிடம் நிவாரண பொருட்களை வழங்கியது இன்றும் நம் கண்களை விட்டு அகலவில்லை.
இப்பொழுது தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் தத்தளிக்கிறது. பெரு வெள்ளத்தில் பெரிய கட்டிடங்கள் கூட சரிந்து விழுந்ததை நாம் சமூக ஊடகங்களில் கண்டு உள்ளம் கலங்கினோம்.
பேரிடர் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்ல முடியாமல், கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு அவர்களின் கண்ணீரைத் துடைக்க முடியாமல் தவித்து நிற்கிறோம். யாரிடம் கொடுப்பது எப்படி அங்கு கொண்டு போய் சேர்ப்பது என்ற எண்ணம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிறைந்து நிற்கிறது.
நம் உள்ளத்தில் எழுந்த உதவிக்கான சிந்தனை சிறிது என்றாலும் அது காலத்தினால் செய்த உதவி. பாதித்த பகுதி மக்களுக்கு பெரும் பயனை விளைவிக்கும்.
பேரிடர் பாதித்த பகுதிகளுக்கு உதவும் வகையில் பேராவூரணி கடைவீதியில் உதவும் உள்ளங்களிடம் உதவிக் கரம் நீட்டினர் பேராவூரணி வருவாய் துறை அதிகாரிகள்.
பணி நேரம் தாண்டியும் தன்னார்வலர்களாய் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் பேராவூரணி வருவாய் துறை அதிகாரிகளை மெய்ச்சுடர் நெஞ்சார வாழ்த்துகிறது.
உங்களின் உதவிகளை பெற்றுச் செல்ல தயாராக உள்ளது பேராவூரணி வருவாய்த்துறை. பேராவூரணி வருவாய் துறை அதிகாரிகளை சந்தித்து உங்களின் உதவிகளை வழங்கலாம்...
கருத்துகள்
கருத்துரையிடுக