சமய நல்லிணக்கம் பேணும் பொன்காடு மாமுண்டி கருப்பர் கோயில்
சமய நல்லிணக்கம் பேணும் பொன்காடு மாமுண்டி கருப்பர் கோயில்
பேராவூரணி அருகில் பொன்காடு கிராமத்தில் அமைந்துள்ளது மாமுண்டி கருப்பர் கோயில். இப்பகுதியில் பெரும்பாலன மக்களின் குலதெய்வமாக உள்ள இக்கோயில் சமய நல்லிணக்கத்தின் அடையாளமாக அமைந்துள்ளது.
தமிழர்கள் பண்பாட்டின் அடையாளம் குலதெய்வங்கள். நிறுவனப் படுத்தப்பட்ட மதங்கள் தோன்றுவதற்கு முன்பே குலதெய்வ வழிபாடுகள் தோன்றிவிட்டன. தமிழர்களின் மிகப்பழைமையான ஆசீவகத்தின் ஐயனார் தொடங்கி குலதெய்வ வழிபாடு இருந்து வருவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இன்று நிறுவனப்படுத்தப்பட்ட பெருசமயங்களின் கடவுளர்கள் கூட தமிழர்களின் குலதெய்வங்கள்தான் என்கிறார்கள் அவர்கள்.
சமூக அறம் போற்றி வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மனிதர்கள் குலதெய்வங்களாக போற்றப்படுகிறார்கள். ஒவ்வொரு குலதெய்வ வரலாறுகளும் அறவாழ்வின் அவசியத்தை சமூகத்தில் வலியுறுத்திக்கொண்டே வருகின்றன.
சாதி மறுத்த காதல்,
ஈகம் செய்த நேர்மை,
தன்னுயிர் தந்து மண்ணுயிர் காத்த வீரம்
என குல தெய்வங்கள் மக்களுக்கு மனித மாண்புகளை மட்டுமே போதித்து வந்திருகின்றன.
ஆனால் இன்று குலதெய்வங்களின் வரலாறுகள் மக்களிடமிருந்து துண்டிக்கப்பட்டு வழிபாடு மட்டுமே சடங்காகி போனதுதான் காலத்தின் அவலம்.
மதவாதம் தலைதூக்கி சமயப் பொறை அழிந்து வரும் இந்த காலகட்டத்தில், அவரவர் மதத்தைச் சார்ந்தவர் மட்டுமே ஆலயத்திற்குள் பிரவேசிக்க வேண்டும் என எழுதி வைத்துள்ள ஆலயங்களுக்கு மத்தியில் பேராவூரணி அருகில் பொன்காடு கிராமத்து மக்களின் குல தெய்வமாக போற்றப்படும் மாமுண்டி கருப்பர் ஆலயம் தமிழர் அறத்தை உலகுக்குப் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.
வைணவ சமய அடையாளங்களுடன் காட்சிதரும் மூலவரான மாமுண்டி கருப்பர் கோயிலுக்குள் சைவ சமய அடையாளமான திருநீறுடன் மக்களுக்கு அருள்பாலிக்கிறார் மதுரை வீரன்.
மாமுண்டி காருப்பரும் மதுரை வீரனும் சேர்ந்திருப்பதிலென்ன ஆச்சரியம்? சைவம் - வைணவம் என்றெல்லாம் இருந்த நிலை மாறி இன்று மக்களிடம் ஒற்றுமை மேலோங்குகிறது என்று யாரும் எளிதில் சொல்லலாம்.
ஆனால் அதே மாமுண்டி கருப்பர் கோயிலில் முத்தால் ராவுத்தருக்கும் சிலை அமைத்து வழிபட்டு வருகிறார்கள்.
பெருமதங்கள் பின் வந்தது, ஆனால் நம் தமிழர் பண்பாடோ மிகவும் பழையது. வைணவ நெறியை பின்பற்றிய மாமுண்டி கருப்பரை குல தெய்வமாக கொண்டு அவரின் வழித் தோன்றலாக சைவ நெறிபிடித்தொழுகும் மதுரை வீரன் வருகிறார். அந்த வழியிலேயே இசுலாமிய மார்க்கம் தழுவிய முத்தால் ராவுத்தரும் வருகிறார். குலதெய்வ வரலாறுகள் வலியுறுத்துவது பண்டைத் தமிழர்களின் அன்பை வழியுறுத்திய அறமும் மறமும் மட்டுமே, குலதெய்வங்களுக்கேது மதம்?
மதமான பேயைப் பிடித்தொழுகாமல்
தமிழர்களின் பெருநெறி பிடித்தொழுகுவோம்!
கருத்துகள்
கருத்துரையிடுக