"கேள்வி கேட்கும் நடுத்தர வர்க்க மக்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும்!" மணமேல்குடியில் தமுஎகச விருது வழங்கும் விழாவில் பேச்சு


கடந்த 9 ஆண்டுகளாக இந்த விருது வழங்கும் விழாவை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மணமேல்குடி கிளை பொறுப்பாளர்கள்.  


அரசுப் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், மாணவர்களிடம் கல்வி உணர்வூட்டும் உன்னதமான ஆசிரியர்களுக்கும், மக்களின் நலனுக்காக நேரம் காலம் கருதாமல் சிறப்பாக பணியாற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய கடை நிலை பணியாளருக்கும், சுகாதாரத்துறையில் சீரியப் பணியை மேற்கொண்ட மனிதருக்கும் விருதுகளை வழங்கி வாழ்த்தும் இனிய நிகழ்வாக இந்த நிகழ்வு அமைந்தது. 


மணமேல்குடி கிளை தமுஎகச தலைவர் மரியாதைக்குரிய தோழர் இந்தியன் கணேசன் அவர்கள் அழைப்பின் பெயரில் நிகழ்வில் கலந்து கொண்டேன்.  


விருதுகளைப் பெற்ற மாணவர்களும், மாணவர்களை பெற்றவர்களும், சமூகத்தால் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்ட மின்சாரத்துறை மற்றும் சுகாதாரத்துறை கடைநிலைப் பணியாளர்களும், அவர்களின் இணையர்களும் அடைந்த மகிழ்வுக்கு அளவே இல்லை.  


ஒன்பது ஆண்டுகளாக ஒப்பற்ற பணியாக இந்தப் பணியை முன்னெடுக்கிறார்கள் முற்போக்கு எழுத்தாளர்களும் கலைஞர்களும். இந்நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்த நான் நிகழ்த்திய உரை,

"அரசு பள்ளிகளே மாணவர்களின் பன்முக ஆற்றலை வளர்த்தெடுக்க முடியும். எளிய பிள்ளைகளின் புகலிடமான அரசுப் பள்ளிகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டியது நிகழ்கால பெற்றோர்களின் கடமை. பிள்ளைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திட முன் வர வேண்டும். சிறப்பாகச் செயல்படும் அரசுப் பள்ளி ஆசிரியர்களையும் மாணவர்களையும் மிகுந்த பொறுப்புணர்வோடு கொண்டாடி மகிழ்கிறது மணமேல்குடி கிளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம். சமூகத்துக்கு உழைப்பவர்களை அடையாளம் கண்டு பாராட்டும் பொழுது தான் மனித வளம் ஆற்றல் பெறுகிறது. தேசத்தை காக்கும் நல்ல தலைமுறையை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். பொருளீட்டும் கருவியாக மட்டும் பிள்ளைகளை பெற்றோர்கள் பார்க்க கூடாது. பேரிடர் காலத்திலும் பறிக்க முடியாத ஒரே சொத்து கல்வி மட்டுமே. அதை நமது தலைமுறைக்கு வழங்கி விட வேண்டும் ‌. பெண்கள் கல்வி பெறுவது இன்னும் பரவலாக்கப்பட வேண்டும். பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். தன் எழுச்சியாக சமூகப் பங்காற்றும் இளைஞர்கள் இன்று கொண்டாடப்படுகிறார்கள். அவர்களை இலக்காக இளைஞர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களை முன்மாதிரியாக ஆசிரியர்கள் மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். காமராஜர் மிகப்பெரிய கனவுகளோடு உருவாக்கிய கிராமப் பள்ளிகளை நாம் இழந்து விடக்கூடாது" 


கவிஞரும் எழுத்தாளருமான அன்புத் தோழர் இந்தியன் கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மணமேல்குடி ஒன்றிய துணை துணை பெருந்தலைவர் எஸ் எம் சீனியார், மணிமேல்குடி ஒன்றிய குழு உறுப்பினர் சக்தி ராமசாமி, ஓய்வு பெற்ற மூத்த ஆசிரியர் எம் கணபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  


நிகழ்வில் பள்ளி மாணவர்களின் கண்கொள்ளா கலை நிகழ்ச்சிகள் காண்பவர் மனதை ஈர்த்தது.  


பகுதி தோறும் பரப்ப வேண்டிய பண்பாட்டு நிகழ்வு. மணமேல்குடி முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு அன்பு வாழ்த்துகள்.


வாழ்த்துகளுடன்...

ஆசிரியர்,

மெய்ச்சுடர்.


























































கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா