ஒன்றிய கட்சிகளை ஓரம் கட்டி விட்டு தேசிய இனங்களுக்கான கட்சிகள் எழுந்து நிற்க வேண்டும்! - தமிழ்நாடு வழிகாட்டுகிறது.
மாநில தன்னாட்சி உரிமை என்ற கருத்தியல் மீண்டும் இந்தியாவில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
மாநிலங்களை ஆள விடாமல் ஆளுநர்களைக் கொண்டு ஆட்சி செய்ததன் விளைவுகளை ஆட்சி செய்த பாரதிய ஜனதா கட்சி மட்டுமல்ல இனி ஆளப்போகும் கட்சிகளும் மீண்டும் உணர வேண்டிய நேரம்.
தமிழ்நாட்டின் கல்வி உரிமைக்கான குரல், மதவாதத்திற்கு எதிரான குரல், சமூக நீதிக்கான குரல் மீண்டும் ஓங்கி ஒலித்து இருக்கிறது.
தமிழ்நாட்டின் முகம் என்ன என்பதை உலகம் அறிந்திருந்தாலும் அந்த முகத்தை மாற்றிவிட முயற்சி செய்த மதவாத சக்திகளின் முயற்சி மீண்டும் முறியடிக்கப்பட்டிருக்கிறது.
திராவிடக் கருத்தியல் என்பது தமிழுக்கு எதிரானது அல்ல. பார்ப்பனியத்திற்கு எதிரானது, சமூக நீதிக்கு துணையானது என்பதை தமிழக மக்கள் மீண்டும் அடித்துச் சொல்லி இருக்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்தினாலும் மக்களிடம் ஓர் அதிருப்தி தொற்றிக் கொண்டே இருப்பதை அந்தக் கட்சி உணராமல் இல்லை.
குறிப்பாக தமிழ்நாட்டில் பரவலான கல்வி மருத்துவ கட்டமைப்பை வலுப் படுத்துவதற்கான செயல் திட்டங்களை இன்னும் அதிகப்படுத்த வேண்டும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மாநில அளவிலான பொதுத்துறை நிறுவனங்களை கட்டமைக்க வேண்டும், நிரப்பப்படாமல் இருக்கிற அரசு பணி வாய்ப்புகளை நிரப்ப வேண்டும் என்கிற எண்ணம் மக்கள் மனதில் தேங்கி நிற்கிறது.
திமுக மீதான மக்களின் அதிருப்திகளை எல்லாம் தாண்டி திமுக கூட்டணிக்கு கிடைத்திருக்கிற வெற்றி என்பது பாஜக மீதான கடும் கோபத்தை வெளிப்படுத்துவதாகும்.
குறிப்பாக ஆளுநர் ஆர் என் ரவி, அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி இவர்களின் தமிழ் சிந்தனைகளுக்கு எதிரான கருத்துக்கள் திமுகவை வெற்றியடைய வைத்திருக்கிறது.
திருவள்ளுவர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழ்நாடு மதச்சார்பற்ற தன்மை கொண்டது. இங்கு பல சமயங்கள் தழைத்து வளர்ந்திருக்கின்றன. ஒவ்வொரு சமயங்களும் தமிழுக்கு தொண்டு செய்து இருக்கின்றன. ஆனால் மதவாதம் வளர்ந்ததில்லை. தமிழ், மதவாதத்தை வளர்த்ததும் இல்லை.
மதவாதத்திற்கு எதிராக மக்களை வளர்த்தெடுத்த திருவள்ளுவர், வள்ளலார் போன்றவர்களை சனாதன வலைக்குள் திணித்து காவிச் சாயம் பூசிய பாஜகவின் குறிப்பாக ஆளுநர் ஆர். என். ரவியின் செயல்பாடுகளுக்கு மக்கள் கொடுத்த தீர்ப்பு தான் திமுக கூட்டணியின் மாபெரும் வெற்றி.
குறிப்பாக ஆளுநர், "தமிழ்நாடு" என்று கூற மறுத்தது, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை நாட்டு பாடலுக்கு பிறகு பாட வேண்டும் என்று கூறியது, தமிழ்நாடு அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் படத்தை மறுத்து காவி பூசிய திருவள்ளுவரை ஆளுநர் மாளிகைக்குள் அலங்கரித்தது, மாநில உரிமைகளை மறுத்து சட்டமன்றத் தீர்மானங்களை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்தது இவற்றையெல்லாம் கண்டிக்க வேண்டிய ஒன்றிய அரசு கண்டிக்காமல் வேடிக்கை பார்த்தது என எல்லாம் சேர்ந்து தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவளித்திருக்கிறார்கள்.
இந்திய ஒன்றியத்தில் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாரதிய ஜனதா கட்சியின் கருத்தியலுக்கு கொள்கைகளுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் உள்ளார்கள் என்பதை அந்த கட்சி உணர வேண்டும்.
தாங்கள் முன்னெடுத்த சிஏஏ, என்ஆர்சி, பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல், இந்திய ஒன்றியம் எங்கும் ஒரே மொழி, தேசிய இனங்களுக்கான கல்விக் கொள்கையை அழித்து ஒன்றியமெங்கும் ஒரே கல்விக் கொள்கையை உருவாக்குவது போன்ற கொள்கைகள் சமூக நீதிக்கு எதிரானது என்பதை உணர வேண்டும்.
குறிப்பாக ராமர் கோவில் கட்டியதை தங்களது வெற்றியாக கூறிக் கொள்ளும் பாரதிய ஜனதா கட்சி அயோத்தி உள்ளடக்கிய நாடாளுமன்ற தொகுதியில் தோல்வி அடைந்திருப்பது இவர்களின் கருத்தியலுக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வியாக கருத வேண்டும்.
சமூக நீதிக்கு எதிராக கோரிக்கை இல்லாமலேயே தங்கள் உருவாக்கிக் கொடுத்த உயர் சாதி ஏழைகளுக்கான(?) இட ஒதுக்கீட்டை அனைத்து ஏழை சமூகங்களும் பயன்பெற உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் மனநிலை இந்திய ஒன்றிய முழுவதும் பரவுகிறது என்பதை இந்தக் கட்சி உணர வேண்டும்.
தேசிய இனங்களின் தனித்துவத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்.
சமத்துவத்திற்கு எதிரான மதவாதத்தை கைவிட்டு மக்களாட்சிக்கு வழி விட வேண்டும்.
தமிழ் தமிழ் என்று பேசுவதால், திருவள்ளுவர் திருக்குறள் என்று முழங்குவதால், தவறு தவறாக திருக்குறளை ஆங்கிலத்தில் எழுதி உச்சரிப்பதால், வண்...க்கம் தமில்...நாடு இன்று மேடைகளில் வலிந்துரைப்பதால் தமிழர்கள் ஏமாற மாட்டார்கள். தமிழுக்கும் திருக்குறளுக்கும் பெருமை சேர்க்க செய்த திட்டங்களை தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை இனியாவது பாஜக உணர வேண்டும்.
பார்ப்பனியச் செயல்பாடுகளை கைவிட்டு தேசிய இனங்களின் அடையாளங்களை பாதுகாக்க முன்வர வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் மக்களின் நன்மதிப்பை பாரதிய ஜனதா கட்சி பெற முடியும்.
மக்களாட்சி மலரட்டும்... மாநில தன்னாட்சி உரிமை வலுப்பெறட்டும்.
வாழ்த்துக்களுடன்...
ஆசிரியர்,
மெய்ச்சுடர்.
பட உதவி: தினத்தந்தி நாளிதழ்.
மதவாத,சாதிய மேலாதிக்க வருணாஸ்ரம மனப்பான்மை உடைய பார்ப்பனியம் ஒருபோதும் தன்னைத் திருத்திக் கொள்ள முன்வராது.
பதிலளிநீக்கு