பன்னாட்டு ஓகம் (யோகா) நாள்


 உலகத்திற்கு தமிழ்நாடு வழங்கிய மிகப் பெரிய கொடை ஓகம்.  உடலுக்கும் மனதுக்கும் ஒருசேர பயிற்சி வழங்கும் ஒரு முறை ஓகம் என்று அழைக்கப்படுகிறது.  உலகம் முழுவதும் வழங்கி வரும் பல்வேறு உடற்பயிற்சி முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு உயிர் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட  பயிற்சி முறை ஓகம் என்று அழைக்கப்படுகிறது.  இந்த ஓகக் கலை குறித்த செய்திகள் தமிழ் சித்தர்களின் பல்வேறு நூல்களில் இருந்து இன்று உலகம் முழுவதும் பரவி நிற்கிறது. 


18 சித்தர்கள் என்று அழைக்கப்படக் கூடியவர்கள் ஓக நிலையில் அமர்ந்திருப்பதை நாம் படத்தில் காணலாம்.  அவர்களின் உருவப்படங்கள் ஓகப் பயிற்சிக்கான முத்திரையுடன் சித்திரங்களாக வரையப்பட்டு பரப்பப்பட்டுள்ளது. 


இந்த சித்தர்கள் மருத்துவம், வானவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அளப்பரிய பங்களிப்பை சமூகத்திற்கு வழங்கி உள்ளார்கள். 


ஓகம் என்ற சொல்லுக்கு இணைத்தல் என்று பொருள் கூறுகிறார்கள்.  ஐம்புலனோடு இயங்கும் நம் உடலை ஐம்பூதங்களோடு இணைக்கும் கலை என்றும் ஐம்பூதங்களின் இயக்கத்தை ஐம்புலன்களின் வழியாக அறிந்து கொண்டு செயலாற்றுவதற்கான கலை என்றும் கூறுகிறார்கள்.  புலன் என்றால் சிறிது என்றும் பூதம் என்றால் பெரிது என்றும் பொருள் கூறுவார்கள்.


இந்தக் கலையின் சிறப்பை உணர்ந்து கொண்ட உலக நாடுகள் இந்த ஓகக் கலையை போற்றி வருகிறது.  தங்கள் நாடுகளில் பரப்பவும் செய்கிறார்கள்.  தற்பொழுது ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு உலக ஓகம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று கொண்டாடப்படுகிறது. 


ஓகம் என்ற தமிழ்ச்சொல் இன்று யோகம் என்றும் யோகா என்றும் திரிபு பெற்று யோகா என்று இப்பொழுது பலராலும் அழைக்கப்படுகிறது. 


இந்த ஆண்டு ஓகா நாளினை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இக்கலையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறி பயிற்சிகள் வழங்கப்பட்டது. 


பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை சார்பில் ஓகக் கலையின் சிறப்புகளை செயல் விளக்கம் மூலம் செய்து காட்டி பயிற்சி வழங்கப்பட்டது.  பள்ளித் தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமையில்  மருத்துவர் சு.சுகந்தி, மருத்துவப் பணியாளர் தீபா ஆகியோர் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.  


இதேபோல் பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் மாணவர்கள் ஓக பயிற்சி மேற்கொண்டனர்.

சிறப்பாக பயிற்சி மேற்கொண்ட மாணவர்களுக்கும் பயிற்சி வழங்கிய ஓகக் கலை வல்லுனர்களுக்கும் மெய்ச்சுடர் வாழ்த்து தெரிவிக்கிறது.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா