பெண்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெற வேண்டும்! சான்றிதழ் வழங்கும் விழாவில் பேச்சு.
மார்ச் 30. பேராவூரணி பாரதி மகளிர் தையல் பயிலகம் சார்பில் சான்றிதழ் வழங்கும் விழா பெரியார் அம்பேத்கர் நூலக வளாகத்தில் நடைபெற்றது. பயிலகத்தில் பயிற்சியை நிறைவு செய்த மாணவிகளுக்கு பயிற்சிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் சண்முகப்பிரியா, பேராசிரியர் பிரபா ஆகியோர் பயிற்சிச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினர். பெரியார் அம்பேத்கர் நூலகப் பொறுப்பாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தமது வாழ்த்துரையில், "தையல் கலை என்பது மிகவும் நுணுக்கம் நிறைந்ததாகும். சிறந்த படைப்பாற்றல் மிக்கவர்களால் தான் தையற்கலையை கற்றுக் கொள்ள முடியும். திரைப்படமும் சமூகமும் தையல் கலையின் சிறப்பை குறைத்து மதிப்பிட்டுள்ளது. இன்று நல்ல தையல் கலைஞர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்புகள் பெருகி உள்ளது. பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற தான் மேற்கொள்ளும் தொழிலை மதிப்போடும், விருப்பத்தோடும் மேற்கொள்ள வேண்டும்" என்றார். பயிற்சி மைய ஆசிரியர் நித்யா வரவேற்றார். நிறைவாக பயிற்சி மைய ஆசிரியர் உமா நன்றி கூறினார்.