பொன்னாடை வேண்டாம்! - பேராவூரணி அரிமா சங்கத்தின் புதிய முடிவு



"சிறிய மாற்றம் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்" அப்படி ஒரு மாற்றம் பேராவூரணி அரிமா சங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.  

ஆண்டுதோறும் அரிமா சங்கத்தில் புதிய நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பதவி ஏற்பு விழா சிறப்பாக நடைபெறும். அந்தப் பதவியேற்பு விழாவில் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட புதிய நிர்வாக குழுவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பழகியவர்கள், நண்பர்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் பொன்னாடை என்ற பெயரில் சால்வை அணிவிக்கும் பழக்கம் தொடர்ந்து வந்தது.  


புதிய பொறுப்பாளர்களுக்கு அணிவிக்கப்படும் சால்வைகள் மலை போல் குவிந்து கிடக்கும். சுமார் நூறிலிருந்து ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து வாங்கப்படும் சால்வைகள் பெரிதும் பயன் தருவதில்லை. நாம் வாழும் பகுதி வெப்பம் நிறைந்த பகுதியாக இருப்பதால் எந்த நேரமும் சால்வை அணிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெற்ற சாலைகளில் யாருக்கும் கொடையாக கூட கொடுக்க முடியாது. சுழற்சி முறையில் இந்த சால்வைகளை பெற்றுக் கொண்டவர்களால் அடுத்தவர்களுக்கு அணிவிக்கப்படும்.


புதிதாக பொறுப்பேற்றவர்களை மதிக்க வேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கான சால்வைகளை ஒரே நேரத்தில் அணிவிப்பது பயனற்றது. அந்த சால்வைகளின் பயன்பாடும் மிகக் குறைவு.  


இதைக் கருத்தில் கொண்டு 2023-24 ஆம் ஆண்டிற்கான பேராவூரணி லயன்ஸ் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழாவில் சால்வைகள் வேண்டாம் என்று குறிப்புடன் அழைப்புதல் வழங்கப்பட்டது.  


புதிய பொறுப்பாளர்களை மரியாதை செலுத்திட விழா அரங்க வாயிலில் ரூபாய் 100 ரூபாய் 200 என சால்வைக்கு பதிலாக கொடையாக பெற்றுக்கொண்டு அவர் பெயரோடு அன்பளிப்பு ரசீது வழங்கப்பட்டது.  


இதனால் மலைபோல் குவியும் சால்வைகள் அரிமா சேவைத் திட்டங்களுக்கான நிதியாக குவிந்தது.


இந்தச் சிறிய மாற்றம் பெரிய விளைவுகளை தரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நண்பர்களிடமும் பொதுமக்களிடமும் பெற்ற சால்வைக்கு பதில் நன்கொடை நல்ல பணிகளுக்குப் பயன் தரட்டும்.


மேடையில் அணிவிக்கப்படும் சால்வைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு சமூக அங்கீகாரம் கிடைப்பதாக கருதிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி பெரிய விளைவை உருவாக்கி இருக்கும் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் மெய்ச்சுடரின் வாழ்த்துக்கள்.


பேராவூரணி லயன்ஸ் சங்கத்திற்கு தலைவராக கே சிவநாதன், செயலாளராக தினமலர் செய்தியாளர் ஜீ. ராஜா, பொருளாளராக தினத்தந்தி செய்தியாளர் பி பழனியப்பன் உள்ளிட்ட புதிய நிர்வாக குழு பதவி ஏற்றுக்கொண்டது.


புதிய நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாக குழுவுக்கு மெய்ச்சுடரின் வாழ்த்துக்கள்.




கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா