பேராவூரணி வட்டாட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ் வழி கல்வி இயக்கம்



பேராவூரணியில் குடிமணையின்றி தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு குடியிருப்பு வளாகங்களை உருவாக்கி அந்த வளாகங்களுக்குத் திருவள்ளுவர், தொல்காப்பியர், பாவேந்தர், பாவாணர், அவ்வையார், பாரதியார் போன்ற தமிழ் அறிஞர்களின் பெயர்களைச் சூட்டி மகிழ்கிறார் பேராவூரணி வட்டாட்சியர் த. சுகுமார்.


உலக மயம், தனியார் மயம், நுகர்வு கலாச்சாரம் எல்லாம் சேர்ந்து தமிழை அழித்து வரும் சூழலில் வணிகப் பலகைகள் எல்லாம் தமிழை மறந்து வரும் காலத்தில் குடியிருப்புப் பகுதிகளுக்குத் தமிழ் வளர்த்தச் சான்றோர்களின் பெயர்களைச் சூட்டும் ஒப்பற்ற பணியை செய்து வருகிறார் வட்டாட்சியர்.


இச்செயல் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழறிஞர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் பாராட்டி வருகிறார்கள். 


இந்நிலையில் தமிழ்நாடு எங்கும் மருவிப்போன தமிழ்நாட்டு ஊர் பெயர்களை மீட்டெடுப்பது, தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் மட்டுமே கல்வியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவது, பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, தமிழ் பிள்ளைகளின் பெயர்களை தமிழில் சூட்ட பெற்றோர்களிடம் அறிவுறுத்துவது, ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை தமிழ் வழியில் தந்திட தமிழ்நாடு அரசை வலியுறுத்துவது, தமிழர் பண்பாடு, வரலாறு, தமிழர் அறிவியல் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்துவது, தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காட்டு மொழியாகவும், தீர்ப்புரை மொழியாகவும் மாற்றிட தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவது என தமிழ் மொழி சார்ந்த செயல்பாடுகளை தமிழ்நாடு முழுவதும் கட்டமைத்து வரும் தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் அந்த அமைப்பின் தமிழ்நாடு தலைவர் அ.சி. சின்னப்ப தமிழர் வட்டாட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.  


இதுகுறித்து அவர் கூறியதாவது:


"குடியிருப்புப் பகுதிகளுக்குத் தமிழறிஞர்கள் பெயர் சூட்டும் வட்டாட்சியர் பாராட்டுக்குரியவர். பண்பாட்டைப் பாதுகாக்கும் பெரும் பணியை செய்து வருகிறார். இதன் மூலம் தமிழையும் தமிழறிஞர்களையும் பெருமைப்படுத்துவதோடு அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்கிறார்"


மேலும், "தமிழ்நாட்டு அரசு மறுவிப்போன தமிழ் ஊர்ப் பெயர்களை தமிழ்ப் படுத்த அறிஞர் குழுவை அமைக்க வேண்டும்!


பொறியியல் படிப்பில் அனைத்து பாடங்களையும் தமிழ் வழியில் நடத்திட குழு அமைத்து பாடநூல்கள் உருவாக்க வேண்டும்!


மருத்துவ படிப்பை தமிழில் வழங்குவதாக அறிவித்துள்ள தமிழ்நாட்டு அரசுக்கு வாழ்த்துக்கள்! 


மருத்துவம் சார்ந்த துணைப் படிப்புகளையும் தமிழில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!


அரசுப் பள்ளிகள் அனைத்தும் தமிழ் வழியில் மட்டுமே கல்வி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! " 

என்றார்




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா