ஆதரவாய் ஆட்சியர்

 

தஞ்சாவூர் மாவட்டம் கூடுதல் ஆட்சியராக (வருவாய்) பணியாற்றி வருகிறார் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி என். ஓ. சுகபுத்திரா. ஓரிரு நாட்களில் பணி மாறுதல் பெற்று வேறு இடத்திற்கு பணியாற்ற செல்லும் இவர் பேராவூரணி திருவள்ளுவர் கல்விக் கழக ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் மதிப்புமிக்க பாட நூல்களை வழங்கினார்.

இவரை சந்தித்த நிமிடத்தில் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது, அனைத்தையும் சாத்தியமாக்கும் நேர்மறை சிந்தனைகளை விதைக்கும் சொற்கள் இவரிடமிருந்து பட்டுத்தெறிக்கிறது.
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இவரை ஒரு முறை சந்தித்தால் சாதிக்க வேண்டும் என்கிற சிந்தனை சிறகடித்து பறப்பதை தடுக்க முடியாது.

தான் ஏற்றுக்கொண்ட பதவி எளிய மனிதர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் அதிகாரம் மிக்க பதவி என்பதை உணர்ந்து செயலாற்றுகிறார். "தனக்கான அதிகாரம் மக்களுக்கானது" என்று கூறும் இவர் எளிய மனிதர்களின் இருப்பிட தேவைகளை ஏராளமாய் நிறைவேற்றி இருக்கிறார்.

பேராவூரணி வட்டாட்சியர் மதிப்பிற்குரிய ஐயா த. சுகுமார் அவர்களின் முன்னெடுப்பில் பேராவூரணியில் செயல் படுத்தப்பட்டு வரும் திருவள்ளுவர் கல்வி கழகம் - போட்டித் தேர்வு பயிற்சி மையம் குறித்து பாராட்டு தெரிவித்த கூடுதல் ஆட்சியர்,
"இதை விட்டு விடாமல் தொடருங்கள், தொடக்கத்தில் சுமையாக தெரிந்தாலும் பயிற்சி பெற்ற மாணவர்கள் பணிக்கு வந்து அமரும் பொழுது சமூகத்தில் நல் விளைச்சலை நாம் உருவாக்க முடியும். அப்பொழுது நமது உழைப்பு உயர்வாக மதிக்கப்படும்" என்று  ஊக்கப்படுத்தினார்.

போட்டித் தேர்வுக்கு தயாராகும் எளிய மாணவர்கள் எவ்வளவு பேர் இருந்தாலும் அவர்களின் பாடநூல் தேவையை பூர்த்தி செய்கிறேன் என்று உறுதி அளித்தார்.
மதிப்பு மிக்க பதவிகளில் வந்து அமர்பவர்கள் தங்களின் பணிச்சுமையையும் தாண்டி சமூகத்திற்காக சிந்திக்கும் பொழுது அடுத்த தலைமுறை ஆற்றலைப் பெறுவது நிச்சயம்.
தஞ்சை மாவட்டத்தில் இருந்து பணி மாறுதல் பெற்றுச்செல்லும் கூடுதல் ஆட்சியர் அன்பிற்கினிய ஐயா சுகபுத்ரா அவர்களின் நற்பணி தொடர மெய்ச்சுடரின் நெஞ்சார்ந்த
வாழ்த்துகள்.

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா