நம்பிக்கையை விதைக்கும் நாயகர்கள்
"காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்" என்று பாடுகிறான் பாரதி.
ஆனால் குடியிருக்க ஒரு சென்ட் நிலம்கூட இல்லாமல் தெருக்களிலும் தோப்புகளிலும் தற்காலிக குடிசைகளை அமைத்துக் கொண்டு வாழும் மனிதர்களின் நிலை மிகவும் மோசமானது.
வாழ்வியலுக்காக போராடும் மனிதர்களை இனம் கண்டு அவர்களுக்குள் நம்பிக்கையை விதைத்து "நாங்கள் இருக்கிறோம்" என்று உறுதிப்பட கூறுகிறார் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகர்.
பட்டுக்கோட்டை பகுதியில் வாழ்விடமின்றி தவித்து வந்தவர் மாற்றுத்திறனாளி தேவிகா. பல்வேறு போராட்டங்களுக்கு இடையே "வாழ்ந்து விட வேண்டும்" என்ற நம்பிக்கை துளிர் விட கோட்டாட்சியரை வந்து சந்திக்கிறார்.
எளிமை பண்பும் இரக்க குணமும் கொண்ட கோட்டாட்சியர், இவரின் நிலையைக் கண்டு கலக்கமடைகிறார். பட்டுக்கோட்டை பகுதியில் பட்டா கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா என்று வருவாய்த் துறையிடம் விசாரிக்கிறார். உரிய வாய்ப்பு அங்கு இல்லாததால் பேராவூரணி வருவாய் வட்டத்திற்குள் இடத்தை ஒதுக்கி தர பேராவூரணி வட்டாட்சியர் த. சுகுமார் உறுதியளிக்கிறார்.
கடந்த ஆண்டு ஆதனூர் வருவாய் கிராமம் கொரட்டூர் செல்லும் வழியில் அமைக்கப்பட்ட குடியிருப்பு வளாகமான திருவள்ளுவர்புரத்தில் தேவிகாவிற்கு குடிமனை பட்டா வழங்கப்படுகிறது. அந்தப் பகுதிக்கு தெருவிளக்கு, சாலை, குடிநீர் என சகல வசதிகளும் ஓராண்டுக்குள் வந்து சேர்கிறது.
குடியிருக்க பட்டா வழங்கியதும் பயனாளியின் சிக்கல் தீரவில்லை. குடிசை போட்டுக் கொள்ள வழியில்லை. "நம்ம கோட்டாட்சியரிடம்" திரும்பவும் கோரிக்கை மனு வைக்கிறார் தேவிகா.
"உதவும் உள்ளம் கொண்டவர்கள் எப்படியேனும் உதவுவார்கள்" பயனாளிகளுக்கு பட்டா வழங்கியதோடு விட்டுவிடாமல் அவருக்கு வீடு கட்டி கொடுக்க கருணை கொண்ட மனிதர்களை கண்டுபிடிப்பதையும் பணியாக மேற்கொண்டார் கோட்டாட்சியர்.
பெயரிலேயே அருளும், உதவும் உள்ளமும், சமூக பொறுப்பும் கொண்ட வீரக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த அருள்சூசை என்பவரின் உதவியை நாடுகிறார்.
அயல்நாட்டில் பணி செய்து சேர்த்த செல்வத்தை அப்படியே வைத்துக் கொள்ளாமல் அருள் சேர்ந்த நெஞ்சத்தோடு பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருபவர் வீரக்குறிச்சி அருள்சூசை.
"வறியவர்க்கு வீடு கட்டிக் கொடுப்பது தனக்கான வரம்" எனக் கூறி கோட்டாட்சியரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறார் அருள்சூசை.
அருள்சூசை அவர்களின் உதவியோடு ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில், பட்டா வழங்கப்பட்ட இடத்தில் தேவிகா விற்கு வீடு கட்டி எவ்வித பரபரப்பும் இன்றி திறப்பு விழா செய்து வைத்திருக்கிறார் கோட்டாட்சியர் பிரபாகர். ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள கூட முகம் காட்ட மறுத்து விட்டார்.
சமூகப் பொறுப்பு கொண்ட கோட்டாட்சியர் பிரபாகர் அவர்களின் கடமை உணர்வும், அருள்சூசை அவர்களின் அருள் உள்ளமும் கரம் கோர்த்து உலகை ஆளட்டும். வறியவர்களும் வளம் பெறட்டும். இருவருக்கும் மெய்ச்சுடரின் நெஞ்சார்ந்த நன்றிகள்.
கருத்துகள்
கருத்துரையிடுக