வழக்கொழிக்க நினைப்பவர்கள் வளர்க்க மாட்டார்கள்
வழக்கொழிக்க நினைப்பவர்கள் வளர்க்க மாட்டார்கள்
----------------
"நற்றமிழால் என்னைப் பாடு"
என்று பக்தி இலக்கியங்களால் போற்றப்பட்டது தமிழ்!
என்று பொருள் உணர்ந்து மக்கள் மொழியான தமிழில் பாடும் பண்பாட்டை வளர்த்தது பக்தி இலக்கியம்.
கிளைத்தது எல்லாம் தமிழில் இருந்து தான் என்றாலும் கிளைகளால் மரத்துக்கு ஆபத்து வரா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டியது தாய் தமிழ் உறவுகளின் கடமையாகும். அதுதான் கிளைகளுக்கும் நல்லது.
வழக்கொழிந்து போவதே இறப்புக்கு சமமானது. மக்கள் பயன்பாட்டில் இருந்து மக்கள் மொழியை அழித்தொழித்து அந்த மொழியை போற்றுவதும் புகழ்வதும் திவசம் செய்வதற்கு சமமாகும்.
புகழ்வது போல இகழ்வது எப்படி என்பதை தமிழ் தான் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. தமிழ் தன்னகத்தே சேர்த்து வைத்திருக்கும் பல்லாயிரம் ஆண்டு அறிவு அதுதான்.
தமிழைப் (எங்களை) புகழ்வது கூட எங்களை அழித்துவிட எடுக்கும் அரவணைப்பு என்பதை எங்கள் மொழி எங்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.
"தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து"
தமிழர்களை வரவேற்றிட எங்கள் தோள்களில் போடும் துண்டுகளில் கூட தமிழ் இல்லையே! இந்தியைத் தானே திணிக்கிறீர்கள்!
தமிழ் சங்கமம் தமிழ் வளர்க்கவா? உறவாடிக் கொல்லவா? என்பதை உணராதவர்கள் இல்லை தமிழர்கள்.
இந்தியாவின் முதல் மொழி, உலகம் மொழிகளின் தாய் தமிழை வளர்ப்பதென்றால்...
1) இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவித்திடுங்கள்.
2) ஐநா மன்றத்தில் அலுவல் மொழிகள் ஆறோடு ஏழாவது மொழியாக தமிழை இணைத்திட முடிவெடுங்கள்.
3) அண்டை நாடான இலங்கை தீவில் தனித் தமிழ் ஈழம் அமைந்திட உலகெங்கும் பரவி வாழும் ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த உரியன செய்திடுங்கள்.
4) இந்திய ஒன்றியம் முழுவதும் பரவிக் கிடக்கும் பல்வேறு தேசிய இன உரிமைகளை அதிகாரப் பரவல் மூலம் பகிர்ந்தளியுங்கள். தமிழ்நாட்டு தமிழ் மக்களின் இறையாண்மையை காக்கும் பொருட்டு மாநிலத்திலிருந்து பறித்த உரிமைகளை பகிர்ந்தளியுங்கள். பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்காடாக தமிழ் நிலப்பரப்பை மாற்றுவதை நிறுத்துங்கள்.
5) பன்மைத்துவத்தை பாதுகாக்க முடிவெடுங்கள். பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம், ஆகமங்கள், சைவ வைணவ சித்தாந்தங்கள் இவற்றிலும் மிகப் பழமையான ஆசீவக நெறி கொண்ட சங்க இலக்கியங்கள், நீதி இலக்கியங்கள் எல்லாவற்றையும் உங்களின் பகவத்கீதைக்குள் பதுக்கி கொள்ள நினைத்தால் பன்மைத்துவம் பாதுகாக்கப்படுமா?
இவற்றையெல்லாம் நடைமுறைக்கு கொண்டு வரும் பொழுது தான் தமிழ் மக்கள் உங்களோடு சங்கமம் ஆவார்கள்...
தமிழ் வளர்ப்பது வியாபாரம் அல்ல.
தமிழ் வளர்ப்பது அறம் வளர்ப்பது..
'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று" என்பது தான் தமிழரின் பாலபாடம்.
தமிழ் வளர்ப்பதால் மனித குலம் மாண்புரும்...
தமிழ் வளர்ப்பதால் மதவாதம் அழிந்தொழியும்...
தமிழ் வளர்ப்பதால் பகுத்தறிவு பண்பாடு தழைதோங்கும்...
ஏனென்றால் தமிழ் கருவூலத்தில் காக்கப்பட்டு வரும் சொத்துக்கள் இவைகள் தாம்.
காவியை மீண்டும் வெண்மையாய் மாற்றிய வள்ளலார் வழி வந்தவர்கள் தமிழர்கள். வெண்மையை காவியாய் மாற்றினாலும் வெண்மையே வெல்லும்.
கருத்துகள்
கருத்துரையிடுக