கஜா புயல் உருவாக்கிய காயங்களை ஆற்றும் பணியில் தன்னார்வலர்கள்
கஜா புயல் உருவாக்கிய காயங்களை ஆற்றும் பணியில் தன்னார்வலர்கள்
கஜா புயல் பேராவூரணி பகுதியை தாக்கி நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் அந்தப் புயல் உருவாக்கிய காயங்கள் இன்னும் ஆறவில்லை.
20 ஆண்டுகளுக்கு பேராவூரணி பகுதியை பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டது இந்த புயல். பசுமை போர்த்திய பல பகுதிகள் இன்று பொட்டல்காடாக மாறி உள்ளது.
மீண்டும் பேராவூரணி பகுதியை பசுமையாக மாற்ற தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள் தன்னார்வலர்கள்.
கஜா புயல் தாக்கிய காலங்களில் வீடுகளை இழந்து உணவின்றி தவித்து வந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த தன்னார்வலர்கள் கூட்டம் தொடர்ந்து இப்பகுதிகளில் மரம் நடுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கஜாவை தொடர்ந்து கொரோனா பெருந் தொற்று காலத்திலும் எளியவர்களுக்கு உதவும் தொண்டறத்தை மேற்கொண்டனர் இந்த தன்னார்வலர்கள்.
கஜா தாக்கி நான்காண்டு நிறைவில் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு நற்பணியில் ஈடுபட்டனர்.
இவர்களோடு இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு மகிழ்ந்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஐயா முதல்வன்.
தங்களுக்கென்று தலைமை கிடையாது. பதிவு கிடையாது. அலுவலகம் கிடையாது. யாரிடமும் நன்கொடை கேட்பதில்லை. "உதவுவது..." இதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள் இந்த தன்னார்வலர்கள். நற்செயல் மட்டுமே இவர்களுக்கு இலக்கு. பேராவூரணி தன்னார்வலர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக