முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியருக்கு பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் பாராட்டு!




காசி ஆனந்தன் படைப்புகளில் ஓங்கி நிற்கும் உணர்ச்சிகள் என்ற தலைப்பில் முனைவர்பட்ட ஆய்வு மேற்கொண்டு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்
முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர் பா.சண்முகப்பிரியா அவர்களுக்கு பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழ் இனத்திற்காகவும் தமிழ் மொழிக்காகவும் தனது நெருப்பு கவிதைகளால் தமிழினத்தை உணர்ச்சி பெறச் செய்த உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.
அவரின் படைப்புகளை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தும், ஈழத்தமிழர்கள் சிங்களப் பேரினவாதத்தால் பட்ட துயரங்களையும் கவிஞரின் வரிகள் துணைகொண்டு ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார் பேராசிரியர் சண்முகப்பிரியா.
நிகழ்வில் தனது ஆய்வு நூலின் படியை பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்திற்கு வழங்கி, தனது ஆய்வு குறித்து உரை நிகழ்த்தினார் சண்முகப்பிரியா.
தனது கல்வி வளர்ச்சியில் தந்தையின் பங்கு குறித்தும் தனது கணவரின் பங்கு குறித்தும் உணர்ச்சி பொங்க பேசிய ஆய்வாளர், தனது குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனது ஆய்வுக்கு பெருந்துணையாக நின்றதாக குறிப்பிட்டார். தனது தந்தையின் நினைவு நாளில் முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு அறிவிக்கப்பட்டு அதே நாளில் முனைவர் பட்டம் பெற்றதை கண்களில் நீர் கசிய குறிப்பிட்டார்.
மேலும் ஒரு பெண்ணாக ஆய்வு மேற்கொள்வது எவ்வளவு சவாலானது என்பதை தான் ஆய்வு மேற்கொண்ட காலத்தில் உணர்ந்ததாக எடுத்துரைத்தார்.
"தமிழ் இலக்கிய உலகம் பெரிதும் போற்றப்பட வேண்டிய உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன். அவரது படைப்பை ஆய்வு செய்வதே எனது இலக்காக இருந்தது. அவரது படைப்புகளை ஆய்வு செய்ய வாய்ப்பு மறுக்கப்பட்டு இருந்தால் முனைவர் பட்டமே பெற்று இருக்க மாட்டேன்.
நான் பெற்ற முனைவர் பட்டத்தை முதல்படியாக நினைத்துக்கொண்டு மேலும் மேலும் பல்வேறு நூல்களை படைப்பதும், எனது மாணவர்களை படைப்பாளர்களாக மாற்றுவதும்தான் எனது வாழ்நாள் பணியாக மேற்கொள்வேன்" என்றார்.
நிகழ்வில் நூலகப் பொறுப்பாளர் மெய்ச்சுடர் நா. வெங்கடேசன், ஒருங்கிணைப்பாளர்கள் ஆறு நீலகண்டன், சித திருவேங்கடம், புலவர் சு போசு, முனைவர் ச கணேஷ்குமார், த.பழனிவேல், பாரதி ந.அமரேந்திரன், அன்னை தங்கம் ஜெயபாலன், கவிஞர் துறையூர் சோமசுந்தரம், ஓட்டுனர் சதீஸ்கரன், அப்துல் சலாம், உமா, நித்யா ஆகியோர் கலந்துகொண்டு பட்டம் பெற்ற முனைவர் பா.சண்முகப்பிரியா அவர்களை வாழ்த்தினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா