ஆத்தாளூர் பாதைக்கு ஆபத்து?
பேராவூரணி பேரூராட்சியோடு இணைந்திருந்தாலும் கிராமிய மணம் கமழும் அழகிய ஊர் ஆத்தாளூர்.
ஏரிகள் சூழ்ந்து பசுமை படர்ந்துள்ள அழகிய தீவு போன்றது இந்த ஊர்.
பேராவூரணியைச் சுற்றியுள்ள அனைத்து கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தான் கல்விக் கோயில். 6 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான அரசு அதிகாரிகளையும், கல்வியாளர்களையும், வணிகர்களையும், அரசியல் ஆளுமைகளையும் உருவாக்கி வருகிறது. எழுபதுகளில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தொடங்குவதற்கு முன்பு பெண்களும் இந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்தான் படித்தார்கள். பேராவூரணியில் அடையாளமான அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், தஞ்சை மாவட்டத்திலேயே சிறப்புமிக்க கலைவாணர் விளையாட்டு திடலும் இந்த ஊரின் சொத்துக்கள்.
அருள்மிகு வீரமாகாளி அம்மன் வீற்றிருப்பதால் இந்த ஊர் ஆத்தாளூர் என்று பெயர் பெற்றதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். தஞ்சாவூர் மாவட்டத்திலேயே மிகவும் பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று. இக்கோவிலின் மது எடுப்புத் திருவிழா ஆத்தாளூர் கிராம மக்கள் மட்டுமின்றி தென்னங்குடி, களத்தூர், முடப்புளிக்காடு, கழனிவாசல் கிராம மக்கள் ஒன்றுகூடிக் கொண்டாடும் குதுகலத் திருவிழா. பண்பாடு மாறாமல் இன்றும் நடைபெற்று வருகிறது. பேராவூரணி வட்டத்தில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டு விழாக்களை இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்துவிட்டு தான் தொடங்குகிறார்கள். இந்தக் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில்தான் பேராவூரணியில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கோவிலுக்குச் சொந்தமான பல்வேறு கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஊரில் அமைந்துள்ள அம்மா பள்ளிவாசல் மிகவும் புகழ்பெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த தர்காவை தரிசிக்க வருகிறார்கள். எல்லா சமயத்தவர்களும் கொண்டாடும் சமயப் பொறை கொண்ட திருத்தலம்.
சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட பல கிராம மக்கள் தங்களது வேளாண் பணிகளை இந்த கிராமத்தின் ஊடேதான் செய்து வருகிறார்கள்.
ரயில்வே நிர்வாகம் இந்த கிராமத்திற்கு செல்லும் பாதையில் கீழ் பாலம் அமைக்க முயற்சி செய்து வருகிறது.
நீலகண்டபுரம், கீழக்காடு, சொர்ணக்காடு கிராமங்களுக்குச் செல்லும் பாதைகளை சிதைத்த கரங்களோடு ஆத்தாளூர் கிராமத்தை பேராவூரணி நகரத்தோடு இணைக்கும் முக்கிய சாலையில் ரயில்வே கீழ் பாலம் அமைக்க முனைப்பு காட்டி வருகிறது ரயில்வே நிர்வாகம்.
அப்படி ஒரு பாலம் அங்கு அமைந்தால் பூக்கொல்லை, வாத்தலைகாடு, ரெகுநாதபுரம், நாடாகாடு, குருவிக்கரம்பை போன்ற கிராம மக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள்.
ஆத்தாளுர் மாந்தோப்பு க்குச் செல்லும் கீழக்காடு சாலையில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடி கீழ் பாலம் அமைக்கப்பட்டு அந்தப் பகுதி மக்கள் தற்போது ஆத்தாளூர் சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஆத்தாளூர் சாலைக்கு இடையில் ரயில்வே கீழ் பாலம் அமைந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும்.
பள்ளிக்கூட மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறும்...
வேளாண் குடி மக்களின் அன்றாடப் பணிகள் பாதிப்படையும்... வேளாண் கருவிகளை இடையூறின்றி எடுத்துச் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பார்கள்.... விளைபொருள்களை நகருக்கு எடுத்துச் செல்ல விவசாயிகள் பெரும் பாடுபடுவார்கள்....
வழிபாட்டுத் தலங்களின் பாரம்பரிய பெருமை சிதைக்கப்படும்...,
பேராவூரணி யின் பெருமையாக காட்சிதரும் ஆத்தாளூர் கிராமத்தை பாதுகாப்பதும் அதே பெருமையோடு வைத்திருப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமை.
ரயில்வே நிர்வாகம் இந்தப் பகுதிகளுக்குள் கீழ் பாலம் அமைப்பதைத் தவிர்த்து மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பேராவூரணி வட்டார பொதுமக்களின் கோரிக்கையாகும்.
மக்கள் குரலை ரயில்வே நிர்வாகம் மதிக்க வேண்டும்... மக்களுக்கு இடையூறாக கீழ் பாலம் அமைக்கும் பணிகளை ரயில்வே நிர்வாகம் நிறுத்திக்கொள்ள வேண்டும்....
ஒருபுறம் வேளாண் நிலங்களை எல்லாம் கபளீகரம் செய்து கொண்டு 8 வழிச்சாலை களும் நான்கு வழிச் சாலைகளும் அமைக்கப்பட்டு வருகிறது..
ஆனால் கிராமப்புறங்களுக்கு செல்லும் ஒற்றை பாதையையும் கேள்விக்குறியாகும் இது போன்ற திட்டங்களை அரசு கைவிட வேண்டும்.
வளர்ச்சி என்பது மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாகும்.
வருமுன் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
வள்ளுவரின் வாய்மொழியை மனதில் தாங்கி பாதையை பாதுகாக்க ஒன்று திரண்டு போராடுவோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக