''எழுத்துகள் உருவாகும் முன்பே தோன்றியது ஓவியங்கள், மொழியும், கலையும் நமது கண்கள்'' மெய்ச்சுடர் ஓவியப் போட்டி பரிசளிப்பு மற்றும் தமிழ்நாடு தாயகநாள் விழாவில் பேச்சு.
''எழுத்துகள் உருவாகும் முன்பே தோன்றியது ஓவியங்கள், மொழியும், கலையும் நமது கண்கள்'' மெய்ச்சுடர் ஓவியப் போட்டி பரிசளிப்பு மற்றும் தமிழ்நாடு தாயகநாள் விழாவில் பேச்சு.
மெய்ச்சுடர் மின்னிதழ், கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான ஓவியப்போட்டியை அறிவித்தது. இந்தப் போட்டியில் 101 ஓவியங்கள் மாணவ ஓவியர்களால் படைத்தளிக்கப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்நாடு தாயகநாள் விழாவில் பரிசளிக்கப்பட்டது.
பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் தமிழ்நாடு தாயகநாள் விழா மற்றும் ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியின் கலை ஆசிரியர் கா.மல்லிகாதேவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்வழிக்கல்வி இயக்கத்தின் தலைவர் தோழர் சின்னப்பத்தமிழர் சிறப்புரையாற்றினார். அன்னை அமராவதி கல்வி அறக்கட்டளையின் பொறுப்பாளர் முனைவர் ஆ.ஜீவானந்தம், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் ஆசிரியர் சு.தமிழ்ச்செல்வன், கிழக்குப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் த.பழனிவேல், தமிழக மக்கள் புரட்சிக்கழக பொறுப்பாளர் இரா.மாரிமுத்து ஆகியோர் ஓவியப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பரிசளித்து வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய கா.மல்லிகாதேவி கூறியதாவது, "எழுத்துகள் உருவாகும் முன்பே தோன்றியது ஓவியங்கள், ஓவியங்கள் காலத்தின் வரலாற்றைப் படம்பிடித்து காட்டும். தமிழர்கள் ஓவியக் கலையில் மிகவும் சிறந்து விளங்கியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்கள் ஓவியக்கலையின் சிறப்புகளை உலகுக்கு பறைசாற்றி வருகின்றன. பழங்கால ஓவியங்களை மாணவர்கள் சென்று காண வேண்டும். சமணக் குகைகளான சித்தன்னவாசல் மிகப்பழமையான ஓவியக் கலைக்கூடமாகும். தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் ஓவியச் சிறப்பை காணலாம். இந்த ஓவியப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களின் ஓவியங்களில் கற்பனைத்திறன் நிறைந்துள்ளது. தமிழ்நாடு தாயகநாளில் ஓவியப்போட்டிக்கு பரிசளிப்பது சிறப்பானது'' என்றார்.
சிறப்புரையாற்றிய சின்னப்பத்தமிழர்,''தமிழர்கள் தங்களின் தாயக நாளை கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு அழைப்பு விடுத்தது. அரசு சார்பில் தமிழ்நாடு தாயக நாள் விழாவை கொண்டாட வேண்டும், தமிழ்நாட்டரசுக்கான கொடியை தமிழ்நாடு அரசு அறிவித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய மாநில அரசு அலுவலகங்களிலும் அந்தக் கொடியை ஏற்றி தாயக நாளைக் கொண்டாடச் செய்ய வேண்டும். தாயகத்தின் மீது பற்று கொண்ட இளம் தலைமுறையை பள்ளிகளிலேயே உருவாக்க அரசு முனைப்பு காட்ட வேண்டும். நாட்டையும் மொழியையும் காப்பது நமது கடமை. மருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது. கல்வியை மீண்டும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தாயக நாளில் உறுதியேற்போம். இழந்த கல்வி உரிமையை மீட்டெடுப்போம். வரும் சட்டமன்ற தேர்தலில் கல்வியை இந்திய ஒன்றிய அரசுப் பட்டியலிலிருந்து தமிழ்நாட்டுப் பட்டியலில் கொண்டுவரவேண்டும் என்பதை தேர்தல் வாக்குறுதியாக தமிழ்நாடில் தேர்தலில் ஈடுபடும் தமிழ்தேசிய மற்றும் இந்திய ஒன்றியக் கட்சிகள் அறிவிக்க வேண்டும்.
முன்னதாக மெய்ச்சுடர் மின்னிதழ் ஆசிரியர் நா.வெங்கடேசன் வரவேற்றார், நிகழ்வில் தமிழக மக்கள் புரட்சிக் கழக பொறுப்பாளர் ஆறு.நீலகண்டன், திராவிடர் விடுதலைக்கழக பொறுப்பாளர் சித.திருவேங்கடம், மருத.உதயகுமார் ஆசிரியர் காஜாமைதீன், பேராசிரியர் சண்முகப்பிரியா, ஆயர் த.ஜேம்ஸ் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக மெய்ச்சுடர் உதவி ஆசிரியர் தா.கலைச்செல்வன் நன்றி கூறினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக