கலைகள் மாணவர்களின் தயக்கத்தை உடைக்கிறது- சட்டமன்ற உறுப்பினர் பேச்சு
தமிழ்நாடு அரசால் பள்ளி மாணவர்களிடம் கலைத்திறனை வளர்க்கும் வகையில் ஆண்டுதோறும் கலைத் திருவிழா நடத்தப்படுகிறது.
பள்ளி அளவில் தொடங்கி ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கலையரசன் - கலையரசி விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கலைத் திருவிழா பள்ளி அளவில் நடத்தப்பட்டு பல்வேறு போட்டிகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இன்று பேராவூரணி ஒன்றிய அளவிலான கலைப் போட்டிகளின் தொடக்க விழா பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
பேராவூரணி ஒன்றியத்திற்குள் உள்ள மேல்நிலை, உயர்நிலை, நடுநிலைப் பள்ளிகளில் பல்வேறு கலைப் போட்டிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஒன்றிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கலைத்திருவிழாவை தொடங்கி வைத்து பேசிய பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார், "கலைகள் மாணவர்களின் தனித் திறனை வளர்த்தெடுக்கிறது. தொடக்கத்தில் மேடை ஏறி பேசுவதை தவிர்த்து வந்த நான் பேராவூரணி பேரூராட்சியில் பத்தாண்டுகள் தலைவராக இருந்த காலத்தில் மேடையில் பேசும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன். மாணவர்கள் ஆர்வமுடன் கலை போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இது அவர்களின் தயக்கத்தை போக்கி வாழ்வில் வெற்றி பெற உதவும். போட்டிகளில் பங்கேற்க வந்துள்ள மாணவர்களுக்கும் மாணவர்களை தகுதிப்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்", என்றார்.
பேராவூரணி வட்டார வளமைய ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன் வரவேற்றார்.
மேல்நிலை, உயர்நிலை, நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலர்கள் கல்வியாளர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் பள்ளி வளாகத்தை வண்ணமயமாக மாற்றினர். மாணவர்கள் மேடைகளில் நிகழ்த்திய பல்வேறு திறன்கள் காண்பவர் கண்களை கவர்ந்தது.
இது குறித்து பெற்றோர்கள் கூறியதாவது, "பள்ளி அளவில் தொடங்கி ஒன்றிய மாவட்ட மாநில அளவில் நடத்தப்படும் இந்த போட்டிகளில் ஒவ்வொரு நிலையிலும் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்க வேண்டும். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கலை திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு நிலையிலும் சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கப்பட்டால் மாணவர்கள் இன்னும் ஊக்கமடைவார்கள். இதை தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டும்" என்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக