அறந்தாங்கியில் சுவைமிகு சைவ உணவகம்
அறந்தாங்கி பேருந்து நிலையம், பேருந்துகள் உள்வரும் வாயிலில் அமைந்திருக்கிறது சோழா உயர்தர சைவ உணவகம்.
அறந்தாங்கி வழியாக பயணிக்கும் பொழுதெல்லாம் கையில் எடுத்துச் சென்ற உணவை உட்காந்து சாப்பிட இந்த உணவகத்திற்கு தான் வருவேன்.
இங்கு பணியாற்றும் பணியாளர்கள் மரியாதையாக நடத்துவார்கள். கூட்டு, பொரியல் வேண்டுமா, குழம்பு வேண்டுமா என்றெல்லாம் வந்து கேட்பார்கள். அவர்கள் அப்படி கேட்பது விருந்தினரை உபசரிப்பது போன்று இருக்கும்.
இந்த உணவகத்தின் உரிமையாளர் மரியாதைக்குரிய ஐயா கராத்தே கண்ணையன். எல்லோரிடமும் எளிமையாக பழகக் கூடியவர்.
திசைகள் அமைப்பு விழாக்களில் பரபரப்புக்கு இடையே சந்தித்து புன்னகைக்கும் இவரை இன்று உணவகத்தில் சந்தித்து உரையாடினேன்.
நகரின் மதிக்கத்தக்க மனிதராக வளம் வரும் இவர் தனது உணவகத்தில் ஒவ்வொரு மேசையாக சென்று உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டுக் கேட்டுப் பரிமாறுகிறார்.
"எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து" என்கிறார் வள்ளுவர்.
தொழில் தொடங்கிய காலத்தில் வாடிக்கையாளர்களை போற்றி பாதுகாக்கும் பலர், வளர்ந்த பிறகும் அதைத் தொடர்வதில்லை.
இதில் ஐயா கண்ணையன் விதிவிலக்கு. வள்ளுவரின் மேற்கண்ட குறளைப் பின்பற்றுகிறார்.
"உணவகங்களில் வாடிக்கையாளரை விருந்தினரை போன்று நடத்த வேண்டும்" என்று சொல்லும் இவர் தனது பணியாளர்களும் இதை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறார். பழக்கி பக்குவப்படுத்துகிறார்.
இங்கு சாப்பிட வருபவர்கள் வயிறும் மனமும் நிறைந்து செல்கிறார்கள்.
பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவுக் கடைகள் எல்லாம் சுவையாக இருக்காது, விலை அதிகமாக இருக்கும் என்ற இலக்கணங்களை எல்லாம் மாற்றி குறைந்த விலையில் சுவையான உணவை பரிமாறும் சோழா உணவக உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் மெய்ச்சுடரின் வாழ்த்துக்கள்.
ஆசிரியர்,
மெய்ச்சுடர்.
கருத்துகள்
கருத்துரையிடுக