சமூகத்திற்கான நம்பிக்கை சமகால ஆசிரியர்கள்...



அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்து கிளம்பும் அறமாய் ஆசிரியர்கள் எதிர்கால சமூகத்திற்கான நம்பிக்கையை விதைப்பவர்களாய் இருக்கிறார்கள்.


பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இந்திய விடுதலை நாள் விழாவிற்கு அழைக்கப்பட்டு இருந்தேன். இந்தப் பள்ளியில் தான் எனது மகளை இரண்டாம் வகுப்பில் சேர்த்திருக்கிறோம்.


பள்ளி வளாகம் எங்கும் மாணவர்கள் காந்தி, நேரு, காமராஜர், வேலு நாச்சியார், ஜான்சி ராணி, இந்திரா காந்தி என தலைவர்களாய் வலம் வந்தார்கள். விழா உயிர்ப்போடு நடைபெற்றது.


விடுதலை நாள் விழாவை மையப்படுத்தி நடத்தப்பட்ட பல்வேறு திறன் போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை வென்ற மாணவர்கள் சிறப்பு விருந்தினர்கள் கரங்களிலிருந்து கொண்டாட்டமாய் பரிசுகளைப் பெற்றுச் சென்றனர்.


பள்ளியிலும் அதற்கு முன்பாக வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடத்தப்பட்ட கொடியேற்றும் நிகழ்வில் மரியாதைக்குரிய வட்டாட்சியர் த சுகுமார் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி பரிசுகளை வழங்கினார்.  


பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் பொறுப்பேற்றுக்கொண்டு பிள்ளைகளுக்கு லட்டு, பிஸ்கட், சாக்லேட் போன்ற இனிப்புகளை வழங்கினர்.   


பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களையும் விருந்தினர்களையும் வரவேற்று விருந்தோம்பல் செய்த விதம் மாணவர்களுக்கான செயல்வழிப் பாடம்.  


பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மாணவர்களை சீர் மிகுந்தவர்களாய் வளர்த்தெடுக்கிறது.  


வழிபாட்டு நேரத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கும் ஆணைகள் அவர்களை வழிநடத்துகிறது.  


விழாவில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நிற்க வேண்டும், யார் யார் என்ன சொல்ல வேண்டும், பள்ளிக்கான விருந்தினர்களை எப்படி நடத்த வேண்டும், உணவு கூடத்தில் மாணவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அடித்துக் கொள்ளாமல் இனிப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை பெற்றுச் செல்வது எப்படி என எல்லாவற்றிற்கும் இங்கு ஆசிரியர்களிடமிருந்து வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருக்கிறது. இடையிடையே எதற்கெடுத்தாலும் மாணவர்களை ஏசும் பழக்கம் இங்கில்லை.


மாணவர்கள் காது கொடுத்து கேட்க பழக்கப்படுகிறார்கள். தலைமையேற்று வழிநடத்தும் மாணவர்களின் செயல்களில் ஆசிரியர்கள் குறுக்கிடுவதில்லை. பார்வையாளர்களாக மட்டுமே இருந்து வழி நடத்துகிறார்கள். மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் போட்டிகளை எல்லாம் ஐந்தாம் வகுப்பு மாணவர்களே நான்கு வகுப்புகளுக்கும் நடத்தி விடுகிறார்கள். இதனால் மாணவர்களின் தலைமை பண்பு வளர்கிறது.


ஒப்பனைக்காக, விளம்பரத்திற்காக இல்லாமல் மாணவர்களுக்கான இலக்காக பிள்ளைகளுக்கு தேசியத் தலைவர்கள் போல் வேடம் அணிந்து அழைத்துவர பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டு பள்ளி வளாகம் எங்கும் வருங்கால தலைவர்களாய் வலம் வந்தார்கள்


ஆசிரியர்களின் உழைப்பு உயிரோட்டமான விழாவில் காண முடிந்தது.


இது போன்ற பள்ளிகளால்தான் மாணவர்களிடையே பேதங்கள் மறைகிறது, நற்பண்புகள் வளர்கிறது.  


இங்கு பணியாற்றும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் மெய்ச்சுடரின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். எதிர்கால நற்சமூகத்திற்கான நம்பிக்கை விதைகள் நீங்கள்.  


ஆசிரியர்,

மெய்ச்சுடர்.













கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா