வளநாடு வரட்சி நாடாக மாறிய வரலாறு - புதுக்கோட்டையில் எழுத்தாளர் நக்கீரன் உரை
புதுக்கோட்டை வறட்சி மாவட்டம் அல்ல ஈகம் சூழ்ந்த பகுதி என்றார் சூழலியல் அறிஞர் எழுத்தாளர் நக்கீரன்.
புதுக்கோட்டையில் ஆறாவது புத்தகத் திருவிழா முற்போக்காளர்களின் பெரும் கொண்டாட்டமாய் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆளுமைகள் வருகை தந்து சிறப்புரை நிகழ்த்தி வருகிறார்கள்.
02 ஆகஸ்ட் 2023 அன்று புதுக்கோட்டையின் சூழலில் சார்ந்து சிறப்புரையாற்றிய சூழலியலாளரும் எழுத்தாளமான ஐயா நக்கீரன் புதுக்கோட்டை சார்ந்த வரலாற்றை தரவுகளோடு வழங்கினார்.
" புதுக்கோட்டையின் பழைய பெயர் பன்றிவள நாடு. பன்றி என்றால் தற்பொழுது உள்ள பன்றி அல்ல வளம் நிறைந்த காடுகளில் உள்ள பன்றி.
வளம் நிறைந்த முல்லை நில காடுகள் சூழ்ந்த பகுதியாக இந்தப் பகுதி திகழ்ந்துள்ளது.
புதுக்கோட்டையின் மலைகள் இன்று போல் மொட்டை மலைகளாக இல்லாமல் வளம் நிறைந்த மலைகளாக இருந்துள்ளது.
தற்பொழுது டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மலை கோவில்கள் நிறைந்து காணப்படுகிறது. மலைக்குன்றுகளே இல்லாத இந்த மாவட்டங்களில் மலைக் கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து கல்லெடுக்கப்பட்டது? அருகிலுள்ள புதுக்கோட்டை மாவட்ட மலைக்குன்றுகள் தமிழ்நாட்டில் முதல் கல்குவாரிகளாக மாற்றப்பட்டது. வைதீக மதம் வளர்க்க புதுக்கோட்டை தனது மலை வளத்தை இழந்தது.
1800 களில் வெள்ளைக்கார அரசு விதித்த உப்பு வரியால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தனது வருமானத்தில் பத்தில் ஒரு பகுதியை உப்புக்காக செலவிட்டனர். இந்நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் மக்கள் எவ்வித பாதிப்பும் இன்றி இருந்தனர். அதற்குக் காரணம் புதுக்கோட்டை பகுதியில் உள்ள மண்வளத்தை கொண்டு எடுக்கப்பட்ட உப்பு இந்தப் பகுதியில் பயன்படுத்தப்பட்டது. புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 175க்கும் மேற்பட்ட கிராமங்களில் உப்பு உற்பத்தி நடைபெற்றது. கண்டு கொண்ட ஆங்கிலேயர்கள் இதைத் தடுத்து நிறுத்தினர். இதனால் இப்பகுதியில் சூழலியல் சார்ந்து வாழ்ந்து வந்த 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சூழலியல் அகதிகளாக வேறு வேறு பகுதிகளுக்கு குடி பெயர்ந்தனர். 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இலங்கைக்கு இடம் பெயர்ந்தனர்.
இந்தப் பகுதியில் வளம் சேர்த்த வெள்ளாறு, அம்புலி ஆறு, அக்னி ஆறு போன்ற காவிரியின் தடங்கள் சூழலியல் மாற்றங்களால் இன்று காணாமல் போய் உள்ளது.
ஆஸ்திரேலியா சதுப்பு நில காடுகளில் மட்டுமே வளரக்கூடிய யூகலிப்டஸ் மரங்கள் புதுக்கோட்டை பகுதிகளில் செழித்து வளர்கிறது. அதற்குக் காரணம் இப்பகுதியில் ஓடிய காவிரி- யால் நிலத்தடி நீர் வளம் இன்றும் செழித்து இருக்கிறது என்பதுதான். சூழலில் காரணங்களால் காவிரி தனது வழித்தடத்தை 19 முறை மாற்றிக்கொண்டுள்ளது. இதற்கு ஆதாரங்களாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் உள்ளன.
தனது மலை வளம், உவர் மண் வளம், காவிரியின் வழித்தடம் என சூழலில் ஈகம் செய்த மண் புதுக்கோட்டை. இன்றும் நெடுவாசலில் நிலத்தடி வளம் காக்க போராடி வருகிறது.
புதுக்கோட்டையை வறட்சி மாவட்டம் என்று கூறாதீர்கள், தியாகம் செய்த மண் என்று கூறுங்கள்" என்றார்.
அரங்கு நிறைந்த மக்கள் வெள்ளம் உறைந்து நின்றது.
அறம் சார்ந்து பயணிக்கும் ஐயா நக்கீரன் அவர்களின் ஆய்வுத் தரவுகளை கொண்டு சூழலிகளைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் முயற்சி செய்வோம்
சூழலில் சார்ந்த விழிப்புணர்வு நம்மை சூழ்ந்து கொள்ளட்டும்.
ஆசிரியர்,
மெய்ச்சுடர்.
கருத்துகள்
கருத்துரையிடுக