அறந்தாங்கியில் "வேங்கை வயல்" நூல் அறிமுக நிகழ்வு!



 சிபிஎம் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மரியாதைக்குரிய தோழர் கவிவர்மன் எழுதிய வேங்கை வயல் ஆவண நூலின் அறிமுக விழா திசைகள் அமைப்பு சார்பில் அறந்தாங்கியில் நடைபெற்றது.


வேங்கைவயல் சாதிய வன்மத்தின் வடுக்களை தாங்கி நிற்கிறது இந்த புத்தகம்.  


மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்குள் மலத்தை கலந்த ஆதிக்கச் சாதியின் சாக்கடைச் சிந்தனைகள் ஆதாரங்களோடு அச்சிடப்பட்டு இருக்கிறது இந்தப் புத்தகத்தில்.


அரசியலமைப்புச் சட்டத்தை எடுத்துச் செல்வது ஆட்சியராகவே இருந்தாலும் அவரின் ஆணைக்குக் கட்டுப்பட மறுத்து, ஆதிக்க வர்க்கம் ஆலயத்தை திறக்க விடாமல் செய்த அத்தனை திமிர் தனங்களையும் காட்சிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.  


சினிமா திரைக்கதைகளை மிஞ்சும் அளவிற்கு ஆலயத்திற்குள் நடந்த சாமியாடி நிகழ்வுகளை பதிந்து வைத்திருக்கிறார்.  


"நாங்க ஒன்னாத்தான் இருக்கோம்!" என்று நாடகத்தை நடத்திட ஆதிக்கச் சாதி நடத்திய செயல்களை அம்பலப்படுத்தி இருக்கிறார். 


கோவிலுக்குள் நடந்த சமத்துவப் பொங்கல் விழாவில் கூட சாதியைக் கலந்து படைகளிட்ட சமூகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.


கோவிலுக்குள் பட்டியல் இனத்தவர் புகுந்து சென்ற இடங்களையெல்லாம் சாதிச் சாக்கடை கலந்த கழிவு நீரால் கழுவியதை கண்ணீரோடு பதிவு செய்கிறார் ஆசிரியர். 


இந்த ஆவண நூல் சாதி ஆணவத்தை அழிப்பதற்கான ஆயுதமாக நாம் கைகொள்ள வேண்டும்.  


இந்தப் புத்தகத்திற்கான வாசிப்பும் கலந்துரையாடல்களும் விரிவு செய்யப்பட வேண்டும் என்பது மெய்ச்சுடரின் விருப்பமாகும்.  


 இளைஞர்களிடம் எடுத்துச் செல்லப்பட வேண்டும். சமகால சாதி ஆதிக்கச் சமூகம் நிகழ்த்திய கோரத்தாண்டவத்தை கல்லூரி பிள்ளைகளிடம் கொண்டு செல்ல வேண்டும்.   


பாதிக்கப்பட்ட மக்களின் பெருந்துயர் பொதுமக்களிடம் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.


பதிவு செய்யப்பட்ட வரலாற்றைக் கூட திரித்து எழுதி பொய் புனையும் மதவாத சாதியவாத கூட்டத்திற்கு முன் வேங்கைவயல் சாதி ஆணவச் செயலை ஆவணப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர் கவிவர்மன். அறச்சீற்றம் கொண்டு எழுதிய அன்புத் தோழர் கவிவர்மன் கொண்டாடப்பட வேண்டிய மனிதர்.


இதற்கான முன்னெடுப்பை முதலில் செய்திருக்கிறது அறந்தாங்கி திசைகள் மாணவர் வழிகாட்டு அமைப்பு. நூல் அறிமுகத்தோடு ஆசிரியரையும் கொண்டாடித் தீர்த்திருக்கிறது அறந்தாங்கி திசைகள் அமைப்பு.


மெய்ச்சுடரும் உங்களோடு என்றும் கைகோர்த்து நிற்கும்


திசைகளுக்கும் நூலாசிரியர் அன்பிற்கினிய தோழர் கவிவர்மன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.  


ஆசிரியர்,

மெய்ச்சுடர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா