"நாங்க அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! எங்கப் பிள்ளைகளும் அரசுப் பள்ளி மாணவர்கள்தான்!" நம்பிக்கை அளிக்கும் ஆசிரிய இணையர்...
"நாங்க எங்க புள்ளைங்கள அரசுப் பள்ளியில் சேர்க்கும் போது எல்லோரும் திட்டுனாங்க, படிக்கிற புள்ளைங்கள கெடுக்குறீங்க அப்படின்னு சொன்னாங்க, இப்படி சொன்னவங்க பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கிற ஆசிரியர்கள் தான்", சொல்கிறார் பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் த.முருகையன்.
"என்னிடமும் அப்படித்தான் சொன்னாங்க. ரெண்டு பேருந்தான் நல்லா சம்பாதிக்கிறீங்கல்ல, அப்புறம் ஏன் அரசு பள்ளியில படிக்க வைக்கிறீங்கன்னு நிறைய பேர் கேட்டாங்க. எல்லா விமர்சனங்களையும் உள்ளுக்குள்ளேயே வச்சுக்கிட்டு புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுப்பேன். நம்பிக்கைகளோட அரசு பள்ளியில எங்க பிள்ளைகளை படிக்க வச்சோம்" கூறுகிறார் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சகுந்தலா.
ஆசிரியர்கள் முருகையன் சகுந்தலா இணையர் எடுத்த தீர்க்கமான முடிவு பல பெற்றோர்களுக்கு நம்பிக்கையையும் வெளிச்சத்தையும் கொடுத்திருக்கிறது.
அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதில்லை என்ற விமர்சனம் பலதரப்பிலிருந்தும் இன்று வரை வந்து கொண்டே இருக்கிறது.
பெரும்பாலான ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பிவிட்டு அரசு பள்ளிக்கு வருகிறார்கள் என்பதே உண்மை.
இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தங்கள் பிள்ளைகளை தாங்கள் பணியாற்றும் பள்ளிகளுக்கே அழைத்துச் சென்று படிக்க வைத்துள்ளார்கள் இந்த ஆசிரிய இணையர்.
கொரோனா கொடுந்துயர் பலருக்கும் பொருளாதாரத்தில் பின்னடைவை உருவாக்கியது. காலம் பல பெற்றோர்களை அரசுப்பள்ளி நோக்கி தள்ளியது.
மேலும், ஆறாம் வகுப்பிலிருந்து அரசுப் பள்ளியில் படித்தால்தான் உயர்கல்வியில் ஏழரை விழுக்காடு இட ஒதுக்கீட்டை பெற முடியும் என்ற நிலை வந்த பிறகு பல அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள்.
ஆனால் 12 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளிகளின் தாக்கம் உச்சத்தில் இருந்த நேரத்தில் தங்கள் பிள்ளைகளை தங்களோடு அரசு பள்ளிக்கு அழைத்துச் செல்வது அவ்வளவு எளிதல்ல.
கணவன் ஏற்றுக் கொண்டால் மனைவி ஏற்றுக் கொள்வதில்லை, மனைவி ஏற்றுக் கொண்டால் கணவன் ஒத்துக் கொள்வதில்லை. அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்திட இன்றும் பெற்றோர்களிடம் தயக்கம் தொற்றிக் கொண்டே இருக்கிறது.
ஹரிஷ், ஹர்ஷா இருவரும் முருகையன் சகுந்தலா இணையரின் பிள்ளைகள். இருவரும் இரட்டையர்கள். சமூகத்தின் எதிர்மறை விமர்சனங்களை எல்லாம் எட்டி உதைத்து 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்கள்.
ஆவணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் இருவரையும் நாள்தோறும் காலை மாலை இரு வேளையும் 10 கிலோமீட்டர் பயணம் செய்து பள்ளிக்கு அழைத்துச் சென்று அழைத்து வருவார் ஆசிரியர் முருகையன்.
ஹரிஷ் பெற்ற மதிப்பெண் 572. பள்ளியில் முதலிடம். ஹர்ஷா பெற்ற மதிப்பெண் 524. பள்ளியில் மூன்றாம் இடம். இருவரும் நீட் தேர்வு எழுதி இருக்கிறார்கள்.
பள்ளிப்படிப்பு மட்டுமின்றி விளையாட்டு, நடனம், செஸ் என பல திறன்களும் பெற்றவர்களாக பெற்றவர்களுக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள் ஹரிஷ், ஹர்ஷா இருவரும்.
உங்களின் உயர்கல்வியும் சிறப்பாக அமைய மெய்ச்சுடர் வாழ்த்துகிறது.
ஆசிரிய இணையர் முருகையன் சகுந்தலா இவர்களைப் போல அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும். இது பள்ளியின் கட்டமைப்பு மற்றும் கல்வியின் தரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். சமூகத்தின் பார்வையில் ஆசிரியர்கள் இன்னும் மதிக்கப்படுவார்கள்.
பிள்ளைகளின் வெற்றி இந்த ஆசிரிய இணையரிடம் பெருமிதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருவரையும் வாழ்த்துகிறோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக