"மனப்பொழிவின் மாய வாசனை" - போராட்டத்தில் பொழிந்த அன்பு






அன்புத் தோழர் ஷமீம் பானு இக்பால் எழுதிய "மனப்பொழிவின் மாய வாசனை" என்ற நூல் வாசிக்க நேர்ந்தது. 

 நோயோடு போராடும் அனுபவத்தை இருபது தலைப்புகளில் இயல்பாக பேசுவதுபோல் உரையாடியிருக்கிறார் பானு. 

 மருத்துவர்கள் நோய் குறித்து பேசுவதற்கும், ஒரு நோய்வாய்ப் பட்டவரே நோய்குறித்து பேசுவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. குறிப்பாக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவது அரிது. பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை பக்கத்து வீட்டாரிடம்கூட பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களின் பாடுகள் அதிகம். தமது இருப்பை, அடையாளத்தை, தலைமைப் பண்பை தலைகுப்புற கவிழ்க்கும் ஆற்றல் நோய்க்குண்டு. நோய் கண்டதும் பலர் காணாமல் போய்விடுவார்கள். நோய் தாக்கும் முன்பே எண்ணங்களால் மனம் தாக்குதலுக்கு உள்ளாகி மனம் துவண்டு போவார்கள். ஆற்றாமை ஆட்கொண்டுவிடும். தனிமை தள்ளாட்டத்தைத் தந்துவிட்டுச் செல்லும். சுமையாக உணர்வது பெரும் சுமையாகும். சுற்றங்கள் சூழ்ந்து கொள்கிறதா? அல்லது அன்னியப்படுகிறதா? என்பதெல்லாம் அறிந்து கொள்ளும் காலம் நோயுற்ற காலம். 

 நோயுற்ற காலத்தின் மன உணர்வை எழுத்துக்களாக்கும் அளவுக்கு நம்மில் பலருக்கு வலிமை இருப்பதாக தெரியவில்லை. நோயோடும், சிகிச்சையோடும் போராடும் காலத்தை கட்டுரைகளாக மாற்றியிருக்கிறார் நூலின் ஆசிரியர் பானு இக்பால். 

 நோய்க்கான அறிகுறிகள், அடுத்தடுத்து சந்திக்க வேண்டிய பரிசோதனைகள், மருத்துவ சிகிச்சைகள் என எல்லாவற்றையும் வெளிப்படையாக விவரித்திருக்கிறார். 

 மருத்துவமும் சிகிச்சையும் மனிதர்களோடு தொடர்புடையதுதான். மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி இயல்புகளுடன் இயங்கி வந்தாலும் நோயுற்றவர்களிடம் அவர்கள் காட்டும் அன்பு சிகிச்சை காலத்தை கனமின்றி கடக்க உதவும் என்பதை இந்த நூல் முழுவதும் கொட்டி வைத்திருக்கிறார் பானு இக்பால். கணவர், மகன், ஆட்டோ டிரைவர், மருத்துவர், செவிலியர், மருத்துவமனை வரவேற்பாளர் என நோயுற்ற காலத்தில் தன்னோடு வாழ்ந்த, தான் சந்தித்த மனிதர்களின் செயல்களையும், தனது மன உணர்வையும் நம் மனத்திரையில் காட்சிப்படுத்துகிறது இவரது எழுத்துக்கள். 

 வலி நிறைந்த போராட்டம் வார்த்தைகளாகி வாசிக்கப்படும்போது ஏற்படும் மனவலி இன்னும் அதிகம். மார்பகப்புற்று மனித வாழ்வில் புரட்டிப்போடும் பொழுதுகள் பலரது வாழ்வில் வெறுமையை உருவாக்கியிருக்கிறது. ஆனால் தோழர் பானுவின் எழுத்துக்கள் ஊக்கத்தை ஊற்றுகிறது. வாழ்விக்கும் ஆற்றல் ஆசிரியரின் பேனா முனை வழியாக வழிந்தோடுகிறது. 

 யாக்கை நிலையாமை என்பது எவ்வளவு நிதர்சனம் என்பதை "தோகை உதிர்த்த மயில்" என்ற இவரின் கட்டுரை தொட்டுச் செல்கிறது. 

 "ஃபாஷில்" என்ற தலைப்பில் தனது மகன் குறித்த கட்டுரையால் நம்மைக் கட்டிப் போடுகிறார் பானு. மகனே தாயுமானவனாக மாறிப்போன சமயங்களை சாட்சியாக நின்று காட்சியாக்கியுள்ளார். நோய் ஆற்றாமையால் அடம்பிடிக்கும் பிள்ளையாக அன்னை மாறுவதும், ஆற்றுப்படுத்தி அரவணைக்கும் அன்னையாக மகன் மாறுவதும் பண்பாட்டின் உச்சம் தொட்ட நிமிடங்கள்.

 மரணத்தை வென்றுவிடத் துடிக்கும் மருத்துவமனை நிழ்வுகளை மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்துகிறார். இடையிடையே திருமூலர், வைரமுத்து, பாவேந்தர், மனுஸ்ய புத்திரன் இவர்களின் தமிழோடு விளையாடி தன்னம்பிக்கை பெறுவது வாசிப்பவர்களையும் ஆசுவாசப்படுத்துகிறது.

 "மூச்சுத்திணறல்" கட்டுரை மூச்சுப் பயிற்சியின் மூலம் தொடுகிறது. 

 மனித குலத்திற்கே உரிய நன்றியுணர்வோடு எழுதப்பட்ட நூல் "மனப்பொழிவின் மாய வாசனை". மானுடம் பேசுகிறது. மனித வாழ்வின் பொருளை உணர்த்துகிறது. வாழ்தலும், வாழ்வித்தலும் நிகழும் ஞாலத்தில் வாழ்விக்க வந்த அருளியாக இந்த நூல் மரணம் வென்று நிற்கிறது. மார்பகப்புற்று தோழர் பானு அவர்களை மரணத்திற்குள் தள்ளினாலும் அவர்களின் எழுத்துக்கள் மரணமில்லாப் பெருவாழ்வு பெற்று மனிதம் பேசி நிற்கிறது. 

 தனது இணையர் ஷமீம் பானு எழுதிய இந்த நூலினை பெரியார் அம்பேத்கர் நூலகத்திற்கு வழங்கியுள்ளார் தோழர் இக்பால். நமது நூலகத்தில் உங்களின் வாசிப்புக்காய் காத்திருக்கிறது "மனப்பொழிவின் மாய வாசனை" 

 ஆசிரியர், 
 மெய்ச்சுடர், 31.10.2022

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா