வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு

ஆசிரியர்களை மதிக்காத சமூகம் நெறி கெட்டுப் போகும் என்பது எவ்வளவு நிதர்சனமோ அதேபோல் மாணவர்களை மதிக்காத சமூகமும் அழிந்து போகும் என்பது பேருண்மை. வகுப்பறைச் சூழல்தான் வரலாற்றை எழுதுகிறது. வகுப்பறைக்குள் உருவாகும் சந்திப்புகள்தான் சரித்திரத்தில் பெரும் மாற்றங்களை செய்திருக்கிறது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உறவு மலர்வதும், வளர்வதும் வகுப்பறைகளால் தீர்மாணிக்கப் படுகிறது. உணர்வுள்ள ஜீவன்களுக்குள் மீண்டும் மீண்டும் உயிர்ப்பு நிகழ்வது இங்குதான். இருளகன்று மீண்டும் மீண்டும் பிறப்பெடுப்பது வகுப்பறைக்குள்தான். குற்றங்கள் களைந்து சுற்றம் சார்ந்து வாழும் சமூகங்கள் இங்கு உருவாக்கப்படுகிறது. வள்ளுவரும், வள்ளலாரும், பெரியாரும், பேரறிஞரும், அண்ணலும், அடிகளும் இங்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார்கள். பகத்சிங் போன்ற புரட்சிப் பூக்கள் பரிணாமம் பெருவதும் வகுப்பறைகளில் இருந்துதான். அறம் செய்ய ஆற்றலை வளர்க்கும் இடம் வகுப்பறைகள். வித்தைகள் வசமாவதும், சிந்தனை விசாலமாவதும் வகுப்பறைகளுக்குள்தான். கற்பித்தல் மூலம் மனிதம் கருவாகி உருவாகும் கருவறை வகுப்பறைகள். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்குமான புனிதத்தளம் வகுப்பறைகள். ஆன்லைன் வகுப்புகள் அதிகரித்து வந்தாலும் வகுப்பறைச் சூழலில் கற்கும், கற்பிக்கும் அனுபவம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான பந்தம். குழந்தைமையைக் கொண்டாடுவது, மாணவர்களின் வளர்ச்சியை பெருமிதத்தோடு தரிசிப்பது, அவர்களின் தனித்திறன்களை வளர்த்தெடுப்பது என மாணவக் கூட்டத்திடம் கொண்டாட்டத்தையும் மகிழ்ச்சியையும் உருவாக்கும் வலிமை மிக்க வகுப்பறைகளைக் கட்டமைத்து வருகிறார் கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் இரா. சசிகலா. சரிசெய்யப்பட வேண்டிய மாணவர்களின் நடத்தையோடு தொடர்புடைய செயல்களை சமூக ஊடகங்களில் பெரிதாக காட்சிப்படுத்தி அவர்களின் வாழ்வை நாசமாக்கும் வகுப்பறை சூழலுக்கு நடுவே வகுப்பறையை வாழ்வியல் பயிலகமாக மாற்றி நற்சமூகம் வளர்த்து வருகிறார் சசிகலா. வகுப்பறை வரையறைகளையெல்லாம் தாண்டி மாணவர்களுக்கான கற்றல் சூழலை விரிவாக்கி எல்லா இடங்களிலும் கற்றல் அனுபவத்தை மாணவர்களின் வாழ்வோடு கட்டமைத்து வருகிறார் ஆசிரியர். மாணவர்களின் கதை கூறுதல், வாசித்தல், தனித்திறன் வளர்த்தல் என பன்முக ஆற்றல் பிரவாகம் எடுக்கிறது இவரின் அருகில். அரசுப் பள்ளி ஆசிரிய பணியோடு தனது ஊரான தில்லைநாயகபுரத்தில் அம்பேத்கர் பெயரில் நூலகம் அமைத்து செயலாற்றி வருகிறார். பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதல், அரசுப் பணி வாய்ப்புகள் குறித்து அறியச்செய்தல், கைத்தொழில் கற்றுத்தருதல் அத்தனையும் நடக்கிறது இவர் நடத்தும் நூலகத்தில். இயற்கைப் பேரிடர் காலங்களிலும், மாணவர்களின் இல்லத்தில் ஏற்படும் இடர் நேரங்களிலும் உடன் இருந்து தேற்றுகிறார். இடை நிற்கும் மாணவர்களின் இல்லம்தேடிச் சென்று துயர்களைந்து வகுப்பறைக்குள் வரவைக்கும் வலிமை கொண்டவர். கொரோனா காலத்தில் கற்றலை மறந்து வேலைக்குச் சென்ற தனது பள்ளி பழைய மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் பேசி பள்ளிப் படிப்பைத் தொடர தொடர்ந்து பணியாற்றியுள்ளார். முதல் தலைமுறையாக கல்வி வாசனையை நுகரும் மாணவர்களுக்கு கல்விச் சுவையை கனிவோடு கொடுத்து கற்றலை இனிமையாக்கி வருகிறார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று பள்ளி செல்லாக் குழந்தைகளை படிக்க அழைத்து வரும் இவரை இப்பகுதி முற்போக்காளர்கள் சாவித்திரிபாய் என்றே அழைக்கிறார்கள். இவரே வகுப்பறைச் சுவருக்கு வண்ணம் தீட்டுகிறார். வரைந்து வைக்கிறார். வகுப்பறை தேவைகளைப் பட்டியலிட்டு அதைப் புரவலர்களைக் கொண்டு நிறைவேற்றுகிறார். "அரசுப்பணியாற்றுவோர் ஆளும் அரசுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும்" என்ற வழக்கத்திற்கு மாறாக அரசியல் பேசுகிறார். வகுப்பறைக்கான சமூக நீதிச் சிந்தனையைத் தூவி சமூக ஊடகங்கள் வழியாக சட்டமியற்றும் அதிகார மையத்தை சந்திக்கிறார். ஆசிரிய சமூகத்தின் உரிமைக்காக உரத்து பேசுகிறார் அதோடு ஆசிரிய சமூகத்தின் அக்கறையின்மையையும் அலசுகிறார். புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்கிறார். அரசுப் பள்ளிகளின் ஆற்றலை அதிகரிக்க ஓய்வின்றி உழைக்கிறார். பெண்ணியம் பேசுகிறார். ஆசிரியைகளின் ஆடை உரிமை குறித்து ஆட்சியாளர்களிடம் விண்ணப்பம் செய்கிறார். வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு என்ற பெயரில் சமூக ஊடக உலகில் உலாவரும் இவரின் வகுப்பறைக் கனவுகள் வருங்கால தமிழ்ப் பிள்ளைகளுக்கான விடியல். வாசகர்களே! வரிசைப்படுத்தப்பட்ட ஒளிப்படங்களை ஒன்றுவிடாமல் பார்த்துவிடுங்கள். ஆசிரியர் இரா சசிகலா அவர்களின் சமூக வலைதளத்திலிருந்து வாரிச்சுருட்டி காட்சிப்படுத்தியுள்ளோம். இந்த ஒளிப்படங்கள் வழியே அரசுப்பள்ளிகளின் மீது ஒளி பாய்ச்சும் ஆசிரியர் இரா.சசிகலா அவர்களின் அறப்பணி வெளிப்படும். ஆசிரியர் இரா. சசிகலா அவர்களை மெய்ச்சுடர் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறோம் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா