வரலாற்றை புனைவுகளில் தேடாமல் தரவுகளில் தேடுங்கள்!
கல்கி எழுதி வாசகர்களால் பெரிதும் போற்றப்பட்ட "பொன்னியின் செல்வன்" நாவல் திரைப்படமாக அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
வரலாற்று நாயகர்களை தனது கற்பனைப் புனைவுகளுடன் சேர்த்து வாசகர்களின் மனதில் காட்சிப்படுத்தியிருப்பார் கல்கி. நாவலில் வரும் பாத்திரப்படைப்புகள் ஒவ்வொன்றும் வாசகர்களை வசப்படுத்தியிருக்கும்.
எழுபது-எண்பதுகளின் வாசகர் வட்டம் பொன்னியின் செல்வன் வாசித்தவர்களை அறிவாளிகளாக அடையாளப்படுத்தியது. வார்த்தைகளைக் கோர்த்துக் காட்சிகளாக்கி கண்முன் ஓடவிட்டதுதான் கல்கியின் பேராற்றல். கண்முன் விரியும் காட்சிகளை உண்மையிலேயே கட்சிப்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் பல பத்தாண்டுகளாகப் தமிழ் திரையுலக ஆளுமைகளால் பேசப்பட்டுதற்போதுனஅதைச் சாத்தியமாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.
தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழபுரம், வீராணம் ஏரி போன்ற வரலாற்றின் பேரடையாளங்களை விட்டுச்சென்ற பிற்காலச் சோழர்களின் கதையைச் சுற்றி எழுதப்பட்ட கல்கியின் கற்பனைப் பெருங்காப்பியத்தை காட்சிப்படுத்திய திரைப்படம் மனத்திரையின் எல்லையை சுருக்கிவிட்டது. வாசித்தவர்களை வசீகரிக்கவில்லை என்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஐந்து தொகுதி நாவலை இரு பகுதிகளாக 6 மணி நேரத்திற்குள் அடைப்பது எளிதான காரியமல்ல என்றாலும், தமிழர்களின் வீரஞ்செறிந்த வாழ்வை பொன்னியின் செல்வன் பாகம் 1வெளிப்படுத்த திணறியிருக்கிறது.
வார்த்தைகளால் அழகூட்டப்பட்ட பருவ வயது நந்தினியின் பேரழகை வயது ஐம்பதைத் தொடும் ஐஸ்வர்யா ராய் அளக்கமுடியாது என்பதை மணிரத்னம் ஏனோ மறந்துபோனார். நடிப்புலகில் இளம் நாயகிகளுக்கா பஞ்சம்?
அழகும், அறிவும் ததும்பிய படைப்பான குந்தவை நாச்சியாரின் ஒவ்வொரு நகர்வுகளும் வரலாற்றில் பேசத்தக்கது. கூர்மதி கொண்ட குந்தவையின் குணச்சித்திரத்தை நகைகளை அப்பிக்கொண்டு அழகு பொம்மையாக வந்து சென்ற திரிஷாவால் தந்துவிட முடியவில்லை.
உலகமே வியந்து போற்றும் பெரியகோவிலைக்கட்டிய பேரரசனான பொன்னியின் செல்வனின் குரலில் கூட பிரமாண்டம் காட்டமுடியவல்லை படத்தில். தனது படங்களிலெல்லாம் சிறப்பாக நடித்து ரசிகர்கள் நெஞ்சில் நிலைபெற்ற ஜெயம் ரவியின் திறனை பொன்னியின் செல்வனில் வெளிப்படுத்தத் தவறிவிட்டார் இயக்குநர் மணி. நடிகர் திலகம் சிவாஜியின் உருவம் திரையில் தெரியாமல் ராஜராஜனாகவே மாறிப்போயிருக்கும் கலை நுட்பம் பொன்னியின் செல்வனின் அருண்மொழியிடம் காணமுடியவில்லை.
சிவாஜி, கமல் வரிசையில் வைத்துப் போற்றப்படக்கூடியவர்தான் விக்ரம் என்றாலும் அவரின் தனித்துவமான நடிப்பாற்றல் அரசகுடும்பத்து அசாத்திய வீரனின் முகபாவத்தைத் தராமல் அவரின் பழைய படங்களைப் போன்றே காட்சியாகியுள்ளது. குந்தவையோடு உரையாடும் ஆதித்தக்கரிகாலனின் உரையாடல் அவனை மனநோயாளியைப்போல காட்சிப்படுத்தியிருக்கிறது. சோழநாட்டு இளவரசனின் பெரும்வீரத்தை வீழ்த்தியிருக்கிறது.
வந்தியத்தேவனாக வரும் கார்த்தி கச்சிதமாக நடித்திருக்கிறார். பூங்குழலியும் பொருத்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.
பொன்னிநதி பாக்கனுமே பாடலுக்கான ஏ.ஆர்.ரகுமானின் குரலும், இசையும் சோழர்களின் காலத்தை காட்டவில்லை. வெள்ளைக்காரன் தமிழ் படித்துவிட்டுப் பாடுவதுபோல் உள்ளது. இந்தப்பாடலின் தொடக்கம் தொன்மையாக இருந்தாலும் அது பாட்டில் தொடரவில்லை.
சமகாலத்தின் நிகழ்வுகளை கண்முன் நிறுத்தி தனது இயக்கத்தின் மூலம் தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் இயக்குநர் மணிரத்னம் ஒரு வரலாற்றுப்புனைவை வெள்ளித்திரைக்கு மாற்றியதில் சொதப்பியிருக்கிறார்.
ஆனாலும் தமிழர்களின் பெருமித உணர்வைத் தூண்டி விளம்பரப்படுத்துவதில் வென்றிருக்கிறார்கள் படக்குழுவினர். பட்டிதொட்டியெல்லாம் பேசப்படும் படமாக பொன்னியின் செல்வன் மாறியிருக்கிறது என்பது உண்மை.
கலிங்கம் வரை சென்று சோழர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிய ஆதித்தக்கரிகாலனின் வீரஞ்செறிந்த வாழ்வை நந்தினி என்ற கற்பனைப் பேரழகில் சிதைத்து, உண்மை வரலாற்றை திரித்து, உடையார்குடி கல்வெட்டை கண்துடைப்பு செய்திருப்பார் கல்கி. அதுவே தற்போது திரைப்படமாகவும் விரிந்திருக்கிறது. ஆதித்தக்கரிகாலனைக் கொலை செய்தவர்கள் நாவலிலும், திரைப்படத்திலும் இருட்டடிப்பு செய்யப்பட்டது வரலாற்று சோகம். இன்று ஆதித்தக்கரிகாலனின் கொலைக்காரணங்களைப் புனைவுகளைக் கொண்டு ஆய்வு செய்து வருகிறது தமிழ்கூறு நல்லுலகம்.
ஆயிரம் ஆண்டுகள் கடந்த வரலாற்றை தமிழ் உலகம் கல்வெட்டுகளிலோ, இலக்கியங்களிலோ, ஊர் பெயர்களிலோ, கதைவழிச் செய்திகளிலோ ஆய்வு செய்து தெரிந்து கொள்ள முற்படாமல் பேராளுமை மிக்க பேரரசை நிறுவியவர்களின் வரலாற்றை புனைவுகளின் வழி கண்டு கொண்டாடுவது காலத்தின் அவலம்.
வரலாற்றில் தொன்மையும், பெருமையும் கொண்ட தமிழர்கள் தங்களது வரலாற்றை, வரலாற்றுப் பெருமிதத்தை புனைவுகளில் தேடாமல், வரலாற்றுத் தரவுகளைக் கொண்டு காண முற்படுவதே வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் முயற்சியாகும்.
மெய்ச்சுடர் நா. வெங்கடேசன்
கருத்துகள்
கருத்துரையிடுக