சலைக்காமல் பணியாற்றும் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர்... பொதுமக்கள் பாராட்டு!
பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் திரு நா.அசோக்குமார் அவர்களின் செயல்பாடு பொது மக்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது.
பதவியேற்று தொகுதிக்கு வந்த நாள் முதல் பம்பரமாய் சுழன்று பணி செய்து வருகிறார்.
பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிசன் வசதியுடன் 50 படுக்கைகள் அமைத்திட மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி அதற்கான பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார்...
உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் செய்து ஊரகப் பகுதிகளில் நோய்த்தொற்று பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார். சிறப்பாகச் செயல்படும் ஊராட்சிகளுக்கு பரிசு வழங்குவதாக கூறி சிறப்பான செயல்பாடுகளை ஊக்கப்படுத்தி வருகிறார்.
எந்தத் திட்டங்களும் எளிமையாக மக்களிடம் சென்றடைய உள்ளாட்சி செயல்பாடுகளே காரணமாக அமையும் என்பதை கருத்தில் கொண்டு இவர் மேற்கொண்டுள்ள செயல்பாடுகள் பாராட்டுக்குரியது.
நோய்த்தொற்று தீவிரமாக பரவி வரும் இந்த காலத்தில் அவசரகால ஊர்தியின் அவசியம் மிகவும் முக்கியமானது. இதை உணர்ந்த சட்டமன்ற உறுப்பினர், செருவாவிடுதி மற்றும் அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தனது சுய நிதியிலிருந்து ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்து இருக்கிறார்.
நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை உரிய முறையில் நல்லடக்கம் செய்து வரும் தன்னார்வ அமைப்புகளை சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
பேராவூரணி சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களைச் சேர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நோய் தொற்றால் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்து வருகிறார்கள். இது போன்ற அமைப்புகளை சந்தித்து அவர்களின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தி வருகிறார் சட்டமன்ற உறுப்பினர்.
அரசின் சட்டங்கள் திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா என்பதை மக்கள் பிரதிநிதிகளின் முழுமையான கண்காணிப்பின் மூலம் மட்டுமே மக்களுக்கு நலன் சேர்க்க முடியும் என்பதை உணர்ந்து பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து செயலாற்றி வருகிறார்.
மாவட்ட ஆட்சியர் உடன் கலந்துரையாடல்,
மருத்துவர்களின் செயல்பாட்டை முடுக்கி விடுதல்,
சுற்றுப்புற சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றுதல்,
அரசால் உடனடியாக தீர்க்க முடியாத சிக்கல்களை தனது சொந்த நிதி கொண்டு தீர்த்திட முனைதல்
போன்ற காரணங்களால் பதவியேற்ற சிறிது காலத்திற்குள் பேராவூரணி மக்களின் மனதில் நிறைந்து நிற்கிறார் சட்டமன்ற உறுப்பினர் திரு நா.அசோக்குமார் அவர்கள்
இந்த நேரத்தில் சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு கோரிக்கையை முன்மொழிகிறோம்.
பேராவூரணி அரசு மருத்துவமனை போதிய இட வசதி இன்றி துறைசார் மருத்துவர்கள் தங்கி மருத்துவம் செய்ய முடியாத நிலையில் வெளிச்சமும் காற்றும் புகாத பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு போர்க்கால அடிப்படையில் கட்டிடம் கட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
பேராவூரணி பேரூராட்சியின் தலைவராக சிறப்பாக செயலாற்றிய திரு நாஅசோக்குமார் அவர்கள் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சட்டமன்ற உறுப்பினராகவும் சிறப்பாகச் செயல்பட மெய்ச்சுடர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
உங்கள் சேவை மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள் அண்ணா ...
பதிலளிநீக்கு