மதிய வேளையில் முட்டையுடன் உணவளிக்கும் மனிதநேயம்

 மதிய வேளையில் முட்டையுடன் உணவளிக்கும் மனிதநேயம்



வறியார்க்கொன்று ஈவதே ஈகை என்கிறது வள்ளுவம்.


பேராவூரணி பேருந்து நிலையத்தை வசிப்பிடமாக்கிகொண்டுள்ள சுமார் 20 பேருக்கு உணவளிக்கும் அரும்பணியை செய்து வருகிறார்கள் பா.பாலமுருகன் - கவிதா குடும்பத்தினர்.


ரெட்டவயல் மருத்துவர் பாலசுந்தரம் என்றால் இப்பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகம்.  பூக்கொல்லை, ரெட்டவயல், மணக்காடு கிராமங்களைச் சேர்ந்த மக்களின் பிணி தீர்த்த பெருமகன். இவரது மகன் பாலமுருகன் பேராவூரணியில் லட்சுமி மெடிக்கல் என்ற பெயரில் மருந்தகம்  நடத்தி வருகிறார், பாலமுருகனின் மனைவி ஆசிரியை கவிதா.  இவர்கள் ஒவ்வொரு நாளும் பேராவூரணி பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி தவித்து வரும் மக்களுக்கு உணவு அளித்து வருகிறார்கள்.


"ஒருவேளை உணவின்றி இருப்பது எவ்வளவு கடினமானது என்பதை உணரும் பொழுது மிகவும் வருத்தமாக இருந்தது.  சாதாரண நாட்களில் கோவில்களிலும் கடைகளிலும் பிச்சை எடுத்தேனும் பிழைத்துக் கொள்ளும் இவர்களுக்கு இப்பொழுது வாழ்வதே பெரும் சவலாக உள்ளது. ஒருவேளை உணவுக்குக்கூட நிலையற்ற நிலையிலிருக்கும் இவர்களுக்கு உணவளிக்கும் எண்ணம் தோன்றியது. எனது மனைவியிடம் கூறினேன், பள்ளி ஆசிரியரான அவர் உடனே செயலில் இறங்கிவிட்டார். 


 தினமும் 20 பேருக்கு முட்டையுடன் உணவு சமைத்து தருவது அவர்தான்.  எனது இரண்டு மகள்களும் உணவை பொட்டலம் ஆக்கி தந்துவிடுவார்கள் நான் சென்று உணவை வழங்கி வருகிறேன் அவ்வளவுதான்" என்கிறார் பாலமுருகன்.


"ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குவதால்  எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.   அருகில் இருப்பவர்கள் பசித்து இருப்பதை எப்படி சகிக்க முடியும்.. காக்கைக்கும் நாய்க்கும் மாடுகளுக்கும் கோழிகளுக்கும் கூட  உணவு வழங்க பொறுப்பேற்க வேண்டியது நாம்தான்.. சக மனிதர்களை எப்படி அப்படியே விட்டுவிட முடியும்.   ஊரடங்கு காலம்வரை இவர்களுக்கு உணவு  அளிக்க உறுதி ஏற்று இருக்கிறோம். நிச்சயமாக செய்வோம்" என்கிறார் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை கவிதா பாலமுருகன்.







உண்டாலம்ம இவ்வுலகம் என்று சங்கத்தமிழ் போற்றியது உங்களைத்தானோ!


அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் 

பெற்றான் பொருள்வைப் புழி.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா