பேராவூரணியில் தமிழறிஞர்கள் பெயரில் குடியிருப்புப் பகுதிகள் - 200க்கும் மேற்பட்டவர்கள் குடிமனைப் பட்டா பெற்று மகிழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் குடிமனை இல்லாத 227 ஏழைக் குடும்பங்களுக்கு குடியிருப்பு பகுதிகள் உருவாக்கப்பட்டு குடிமனை பட்டா வழங்கப்பட்டது.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் பயனாளர்களுக்கு குடிமனை பட்டாக்களை வழங்கி வருவாய்த் துறை அதிகாரிகளை பாராட்டிப் பேசினார்.
அவர் தனது உரையில், "ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க இப்பகுதியில் தகுதியான பயனாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான குடியிருப்பு வளாகங்கள் உருவாக்கப்பட்டு மிகத் தரமான முறையில் குடிமனை பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள இது பெரிதும் உதவும்.
இந்த குடியிருப்பு வளாகங்களை உருவாக்கிட கடினமான உழைப்பை வழங்கிய பேராவூரணி வருவாய் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், நில அளவைத் துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் என ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள். பயனாளர்களை இனம் கண்டு அவர்களுக்கான குடியிருப்பு வளாகங்களை உருவாக்க பெரும் ஒத்துழைப்பு வழங்கிய மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்றார்.
இந்தப் பணிக்காக வருவாய் நிர்வாகத்தில் அன்றாடப் பணிகளில் தொய்வு ஏற்படாமல், சுமார் இரண்டு மாதத்திற்கும் மேலாக பயனாளர்களுக்கு தேவையான நிலத்தை அடையாளம் கண்டு, நில அளவை செய்து, சாலையுடன் கூடிய குடியிருப்பு பகுதிகளை உருவாக்கி, ஒவ்வொரு பயனாளிக்கும் உரிய இடத்தை அளவு செய்து, கல் ஊன்றி பட்டா கொடுத்திட பெரும் முயற்சி எடுத்த பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் த. சுகுமார் தலைமையிலான வருவாய்த்துறை செயல்பாடுகள் போற்றுதலுக்குரியது.
எவ்வித அரசியல் தலையிடும் இன்றி மிக நேர்மையாக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதில் பேராவூரணி பொதுமக்கள், வருவாய்த் துறையை பெரிதும் பாராட்டுகிறார்கள்.
குறிப்பாக பேராவூரணியில் மிக நீண்ட காலமாக குடிமனை இல்லாமல் குப்பைமேட்டுக்குள் குடியிருந்து வந்த தூய்மை பணியாளர்களுக்கு நகரின் மையப் பகுதியில் குடியிருப்பு பகுதியை உருவாக்கிக் கொடுத்த வருவாய்த் துறையின் செயல் முற்போக்கு தோழர்களால் கொண்டாடப்படுகிறது.
மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு தொல்காப்பியர்புரம், பாவாணர்புரம், அவ்வையார்புரம், பாவேந்தர்புரம், பாரதியார் புரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள செயல் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழறிஞர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது.
இதே வருவாய் நிர்வாகத்தின் கீழ் இதற்கு முன் திருவள்ளுவர்புரம் என்ற பெயரில் குடியிருப்பு பகுதி உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலை அடைந்து 75 ஆண்டுகளுக்கும் மேலாக குடிமனை கூட இல்லாமல் வாழ்ந்து வரும் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கிட ஆணை பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மெய்ச்சுடரின் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
படங்கள்: பாரதி ந. அமரேந்திரன்
கருத்துகள்
கருத்துரையிடுக