திசைகள் 18
அறந்தாங்கி திசைகள் அமைப்பின் பதினெட்டாவது ஆண்டு விழா நாளை அறந்தாங்கி நைனா முகமது கல்லூரி கலை அரங்கில் நடைபெற உள்ளது.
மனிதத்தை உயர்த்தி பிடிக்கும் தோழமைகளால் கட்டமைக்கப்பட்டது திசைகள் அமைப்பு.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்த அமைப்பு 18 ஆண்டுகளில் சாதித்த செயல்கள் ஏராளம் ஏராளம். பல்வேறு சிந்தனைகளை கொண்ட பள்ளிப் பருவ நண்பர்கள் ஒன்று கூடி 18 ஆண்டுகள் சமூகப் பணிகளுக்காக பயணம் செய்ததே பெரும் சாதனை தான்.
சமூக நீதி
சூழலியல்
கல்வி
சுகாதாரம்
பெண்ணுரிமை
என்று ஐம்பெரும் கொள்கைத் தூண்களை அடிப்படையாகக் கொண்டு ஒன்று கூடி பயணிக்கிறது திசைகள்.
ஐம்பெரும் கொள்கைகளை அனைவரிடமும் எடுத்துச் செல்வதோடு குறிப்பாக மாணவர்களிடம் இந்தக் கொள்கைகள் குறித்த புரிதலை உருவாக்குவதில் பெரும்பங்காற்றி வருகிறது.
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு
என்ற திருக்குறளுக்கு ஒப்ப மாணவர்கள் மீது இந்த அமைப்பு கொண்ட அன்பை, அமைப்பின் தோழமைகள் தாங்கள் ஈட்டிய பெரும் செல்வத்தை மாணவர்களுக்காகவே செலவிடும் பண்பைக் கொண்டு அறிய முடியும்.
நீட் பயிற்சி அளிப்பது,
போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிப்பது,
பள்ளி மாணவர்களிடம் புத்தக வாசிப்பை மேம்படுத்துவது,
வசதியின்மை என்ற வறுமை சூழ்ந்த மாணவர்களை உயர்கல்வி பெற்றவர்களாய் தகுதிப்படுத்துவது,
பெண்ணுரிமை சார்ந்த செயல்பாடுகளை பொதுவெளியில் நடைமுறைப்படுத்துவது,
சமூக நீதிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தோழமைகளை பொதுவெளியில் கொண்டாடுவது என திசைகள் சமூகத்திற்கு திசை காட்டியாய் திகழ்கிறது.
இந்த அமைப்பு தனது செயல்பாடுகளால் அறந்தாங்கி யின் காரணப் பெயராக, அடையாளமாக மாறி நிற்கிறது.
அறந்தாங்கியின் எல்லைகளைத் தாண்டி தமிழ் கூறும் பரப்பெெங்கும் அறம் தாங்கி நிற்கிறது.
நாளை 26 06 2023 இல் நடைபெறும் திசைகள் 18 விழா ஒரு பண்பாட்டுப் பெருவிழாவாக முற்போக்கு சிந்தனையாளர்களால் கொண்டாடப்படுகிறது.
திசைகளின் அங்கமாய் விழாவிற்கு அன்போடு அழைப்பதில் பெருமிதம் கொள்கிறது மெய்ச்சுடர்.
கருத்துகள்
கருத்துரையிடுக