தோழர் ஆறு.நீலகண்டன் அவர்களுக்கு திசைகள் அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது
தமிழின மீட்பு,
சமூக நீதி,
பெண்ணுரிமை,
மனித குல இழிவுகளுக்கு எதிரான மனித உரிமைச் செயல்பாடுகள்,
சூழலியல் பாதுகாப்பு,
திருக்குறள் பரப்புரை
என பன்முக ஆளுமை கொண்ட அரசியல் செயல்பாட்டாளர்...
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் கொளக்குடி அமரசிம்மேந்திரபுரம் பகுதியில் நிலவி வந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இழிவுகளை ஒழித்துக் கட்ட 2004 ஆம் ஆண்டு அப்பகுதியில் போடப்பட்ட 144 தடை உத்தரவை மீறி கோவில் நுழைவு போராட்டம் நடத்தி சிறை சென்றவர்...
1998 இல் குடிமனை நில மீட்பு போராட்டம் நடத்தி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் வீரக்குடி மணக்காடு பகுதியில் 44 ஏழை எளிய குடும்பங்களுக்கு குடிமைப் பட்டா பெற்றுக் கொடுத்தவர்...
பேராவூரணி நகர் பகுதியில் சூழ்ந்திருக்கும் பள்ளிகளையும் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பேராவூரணி பேரூராட்சி பகுதிக்குள் டாஸ்மாக் கடைகள் நடத்தக்கூடாது என்ற இவரின் வீரஞ்செறிந்த போராட்டம் காரணமாக ஐந்தாண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மதுக்கடைகள் இல்லாத பகுதியாக மாறி நிற்கிறது...
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து உருவான பெரும் போராட்டக் கட்டமைப்புக்கு ஆதாரமாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டத்தை மிகத் தீவிரமாக ஒருங்கிணைத்து நடத்தியவர்...
2009இல் ஈழத்தில் இலங்கை அரசு முதலாளித்துவ நாடுகளை இணைத்துக் கொண்டு மிக உக்கிரமாக நடத்திய இன அழிப்புப் போருக்கு எதிராக இவர் தஞ்சையில் நடத்திய தபால் நிலைய முற்றுகை போராட்டம் முற்றிப்போய் தபால் நிலையத்தை அடித்து உடைக்கும் நிலைக்கு சென்றது அதன் காரணமாக சிறைக்குச் சென்றவர்...
தமிழக மக்கள் புரட்சிக் கழகம் என்ற முற்போக்கு அரசியல் இயக்கத்தில் 30 ஆண்டுகளாக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து கொண்டு இவர் உருவாக்கிய
தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு,
திருக்குறள் பேரவை,
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு,
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு,
இன்பத்தமிழ் ஊரக வளர்ச்சி குழு போன்ற அமைப்புகளின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை...
தனது மாணவப் பருவத்திலேயே சமூகச் செயல்பாடுகளைத் தொடங்கிய இவர், இப்பகுதி இளைஞர்களை இணைத்துக் கொண்டு 1996 இல் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி பேராவூரணி பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் சிலையை நிறுவினார்...
அரசியல் போராட்டச் செயல்பாடுகளை யெல்லாம் தாண்டி தானே மற்றும் கஜா புயலில் கோரத்தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்...
இன்பத்தமிழ் ஊரக வளர்ச்சி குழு சார்பில் செங்கமங்கலம் பகுதியில் புயலால் வீடுகளை இழந்து தவித்து வந்த மூன்று குடும்பங்களுக்கு 13 லட்சத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்க காரணமாக அமைந்தவர்...
அதே பகுதியில் இல்லம் தேடி கல்வி என்ற தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே இடை நின்ற பள்ளி செல்லாக் குழந்தைகள் 80 மாணவர்களை இனம் கண்டு, அவர்களை ஒருங்கிணைத்து மாலை நேர சிற்றுண்டி உடன் கூடிய பயிற்சி பள்ளியை உருவாக்கியவர்...
புயலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உடனடி தேவையான உணவுப் பொட்டலங்களை தயாரித்து வழங்கியவர்...
கொரோனா நோய் தொற்று காரணமாக உருவான உயிர்வளி தட்டுப்பாட்டை தடுத்து நிறுத்தும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூபாய் இரண்டு லட்சம் செலவில் உயிர்வளி செறிவூட்டிக் கருவிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்...
மருத்துவம் படிக்க வாய்ப்பு இருந்தும் வசதியற்ற நிலையில் இருந்த மாணவர்களை இனம் கண்டு அந்த மாணவர்களுக்கு நிதி திரட்டி உதவி வருகிறார்...
பேராவூரணி போன்ற சின்னஞ்சிறு நகர் பகுதியில் ஓர் அரசே முன்னின்று நடத்த வேண்டிய திருக்குறள் ஆய்வு மாநாடுகளை தனது தோழமைகளை இணைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் தலைசிறந்த தமிழ் ஆளுமைகளைக் கொண்டு மூன்று முறை நடத்திக் காட்டியவர்...
நூற்றுக்கும் மேற்பட்ட சமூக அரசியல் செயற்பாட்டாளர்களை இப்பொகுதியில் உருவாக்கியதில் பெரும் பங்காற்றிய தொலைநோக்காளர்..
அன்புத் தோழர் ஆறு நீலகண்டன் அவர்களுக்கு திசைகள் அமைப்பின் பதினெட்டாவது ஆண்டு விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தோழருக்கு மெய்ச்சுடரின் வாழ்த்துக்கள்.
விருதினைப் பெற்றுக் கொண்ட தோழர் ஆறு நீலகண்டன் கூறியதாவது, "சிறப்பாக இயங்கி வரும் திசைகள் அமைப்பு சார்பில் வழங்கப்பட்ட இந்த விருதை மனமகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறேன். இது எனக்கு மட்டுமானது அல்ல பேராவூரணியில் என்னோடு இணைந்து பல்வேறு போராட்டங்களிலும் ஆக்கப் பணிகளிலும் தொடர்ந்து செயலாற்றிய அத்தனை தோழர்களுக்கும் உரியது" என்றார்.
மிக்க மகிழ்ச்சி சரியான நபரை அடையாளம் கண்டு விருது வழங்கியுள்ளது திசைகள்... வாழ்த்துக்கள் தோழர், மேலும் அவர் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
பதிலளிநீக்கு