மக்களுக்கான போராட்டமே வாழ்வு - உங்கள் வேட்பாளரைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

பேராவூரணி பேரூராட்சியின் 14-வது வார்டு உறுப்பினர் பதவிக்காக மக்கள் வேட்பாளராக களத்தில் நிற்கிறார் தோழர் ஆ.நீலகண்டன்.

நமது மண்ணின் மைந்தரான இவர், தனது வாழ்நாளில் பெரும்பகுதியை மக்கள் நலனுக்கான போராட்டத்திலேயே கழித்துவருகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
மக்களின் நல வாழ்வுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் முதல் குரலாக ஒலிப்பவர் தோழர் நீலகண்டன்.
எளிய மக்களின் கடைசிப் புகலிடமாக தோழர் வாழ்ந்து வருகிறார்.
பெண்களின் உரிமைகள், மாணவர்களின் உரிமைகள், அரசுப் பள்ளிகளின் மேம்பாடு, தமிழ் மொழி உரிமை காக்கும் போராட்டங்கள், தமிழர்களின் வாழ்வியலைக் காக்கும் போராட்டங்கள் என தனது வாழ்வை பொதுவாழ்வுக்காகவே அர்ப்பணித்துக்கொண்டு வாழ்பவர்.
நம் பகுதியின் மண் காக்கும் போராட்டமான நெடுவாசல் ஐட்ரோ கார்பன் எடுப்புக்கு எதிரான போராட்டத்திற்கு முன்பாகவே
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மூலம் வீதி வீதியாகச் சென்று பரப்புரையை மேற்கொண்டவர்.
கூடங்குளம் அணுவுலையின் அபாயம் குறித்து அணு அணுவாக அனைத்து கிராமங்களுக்கும் சென்று முழங்கியவர்.
நமது காவிரித் தாயின் மடியை பசுமைச் சூழலோடு பாதுகாக்கவும், வேளாண் மண்டலமாக அறிவிக்க ஒன்றிய மாநில அரசுகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி களம் கண்டு வருகிறார்.
சிறு, குறு வேளாண் மக்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் வேளாண் சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வீதியில் நின்று போராடியவர்.
அகதிகளாக தாய் தமிழ்நாட்டில் வந்துவாழும் ஈழத்துத் தமிழர்களுக்கு எதிராகவும், சிறுபாண்மை இஸ்லாமிய மக்களுக்கு எதிராகவும் ஒன்றிய அரசு கொண்டு வர எத்தனிக்கும் குடிமக்கள் திருத்தச் சட்டத்திற்கு எதிராக எதிர் நின்று களப்போராட்டங்களை கண்டவர்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பேராவூரணி திருக்குறள் பேரவையோடு இணைந்து குரல் கொடுத்து வருகிறார்.
பேராவூரணி திருக்குறள் பேரவை நடத்திய மாநாடுகளிலும், மாணவர்களிடம் நடத்திய திருக்குறள் பரப்புரைகளிலும் பெரும் பங்காற்றியவர்.
கஜா புயல் காலத்தில் காலநேரம் பார்க்காமல் களத்தில் நின்று மக்களுக்கு உதவியவர்.
புயலின் கோரத்தாண்டவத்தால் குடிசைகளை இழந்து தவித்த குடிமக்களின் துயரம் தீர்க்க நூற்றுக் கணக்கில் தென்னங்கீற்று வீடுகளை அமைத்துக் கொடுத்தவர்.
செங்கமங்கலம் - மேலத்தெரு கிராமத்தைத் தத்தெடுத்துக்கொண்டு முற்றிலும் வீடிழந்து நின்ற மூன்று குடும்பங்களுக்கு குவைத் வாழ் தமிழர்களின் உதவியோடு ரூபாய் 14 லட்சத்தில் காங்கிரிட் வீடுகளை அமைத்திட கரம் கொடுத்தவர்.
செங்கமங்கலம் - மேலத்தெரு மாணவர்களின் நலனுக்காக நித்தம் நித்தம் சிந்தித்து அந்தப்பகுதியில் "இல்லம் தேடி கல்வி" திட்டத்திற்கு மூன்றாண்டுக்கு முன்பிருந்தே மாலை நேரப் பயிற்சிப் பள்ளி செயல்பட பங்காற்றி வருபவர்.
சாதி பார்ப்பதில்லை - மத வெறி கொண்டதில்லை பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று நீதிக்காக குரல் கொடுப்பவர்.
உழைக்கும் மக்களின் உயர்வுக்காகவே சிந்திப்பவர்... செயல்படுபவர்...
நீலகண்டபுரம் மக்கள் பயன்படுத்திய பாதையை ஒன்றிய இரயில்வே துறை முடக்க முயன்றபோது முன்னின்று முழங்கியவர்.
இரயில்வே துறையின் அடாவடித்தனத்திற்கு முட்டுக்கட்டை போட்டவர்.
கீழ்ப்பாலம் போட இரயில்வே துறை ஒப்புக்கொண்டபோதும் இவர் மறுத்தார். கேட் அமைக்க வலியுறுத்தினார்.
இவரின் மறுப்பையும் மீறி போடப்பட்ட கீழ்பாலத்தினால் நித்தம் நித்தம் மக்கள் படும் போராட்டத்தை மாற்றிட தற்போதும் முனைப்பு காட்டி வருபவர்.
தோழமைகளை இணைத்துக் கொண்டு இவர் உருவாக்கிய பெரியார் அம்பேத்கர் நூலகம் பலரை முனைவராக மாற்றியிருக்கிறது... ஆய்வாளர்களை உருவாக்கி வருகிறது... வாசித்தல் பண்பை மாணவர்களிடம் வளர்த்து வருகிறது.
பேராவூரணியில் முற்போக்குச் செயற்பாட்டாளர்களை ஒருங்கணைத்து இவரால் நடத்தப்பட்ட மதுக்கடைக்கு எதிரான போராட்டம் வெகுமக்களின் பாராட்டைப் பெற்றது. இந்தப் போராட்டத்தின் விளைவாய் இன்றும் பேராவூரணி பேரூராட்சி எல்லைக்குள் மதுக்கடைகளே இல்லை என்பது சிறப்புக்குரியது.
உங்கள் பகுதியின் தேவைகள் அனைத்தும் தெரிந்தவர்...
மக்களின் தேவைகளைப் போராடிப் பெற்றுத்தரும் ஆளுமை மிக்கவர்...
ஊழல் இல்லாத பேரூராட்சி நிர்வாகத்தை நிலைநிறுத்த உறுதி கொண்டு செயலாற்றுபவர்...
அன்புத் தோழர் ஆ.நீலகண்டன் அவர்களை ஆதரிப்போம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா