உரிய இரயில்வே அதிகாரிகளைக் கொண்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் வரை சொர்ணக்காடு பாலப் பணிகளை நிறுத்தி வைக்க முடிவு.

 




பேராவூரணி நீலகண்டபுரம், கீழக்காடு மற்றும் சொர்ணக்காடு கிராமத்திற்குச் செல்லும் பாதைகளில் அமைந்திருந்த இரயில்வே கேட்டை எடுத்துவிட்டு, அந்தந்தப்பகுதியில் கீழ்ப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மக்கள் பயன்படுத்தவே முடியாதபடி பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் சொர்ணக்காடு, வளப்பிரமன்காடு, மணக்காடு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டக் குழுவை ஒருங்கிணைத்து, கடந்த பிப்ரவரி 8 ஆம் நாள் சாலைமறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகர், பேராவூரணி வட்டாட்சியர் த.சுகுமார் ஆகியோர் பாலப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். மக்களின் பயன்பாட்டுக்கு உதவாத வகையில் பாலம் அமைக்கப்பட்டு வருவதை உணர்ந்து போராட்டக் குழுவோடும் இரயில்வே அதிகாரிகளோடும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும் என்று அவர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை 10.02.2022 இன்று நடைபெறும் வகையில் வருவாய்த்துறை மூலம் சொர்ணக்காடு, நீலகண்டபுரம், கீழக்காடு பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் பாலத்திற்கு எதிராகப் போராடிவரும் அனைத்து குழு பொறுப்பாளர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.

இன்று 10.02.2022 பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவல கூட்ட அரங்கில் கோட்டாட்சியர் பிரபாகர் தலைமையில், பேராவூரணி வட்டாட்சியர் த.சுகுமார் முன்னிலையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மேற்கண்ட மூன்று போராட்டக் குழுவைச் சேர்ந்த பொறுப்பாளர்களும் வந்திருந்தனர். இரயில்வே துறை சார்பில் திருவாரூரிலிருந்து இரயில்வே பொறியாளர்கள் வருகைதந்திருந்தனர்.

போராட்டக் குழுவினரின் சார்பில் கீழ்கண்ட கேள்விகள் முன்வைக்கப்பட்டது

நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் நீலகண்டபுரம் இரயில்வே கீழ்ப்பாலப் பணிகளை எப்போது முடிப்பீர்கள்?
கீழ்ப்பாலத்தில் தண்ணீர் ஊற்றெடுத்து தேங்கி நிற்கும் நிலையில் மக்கள் எந்தப் பாதையைப் பயன்படுத்துவது?
அருகில் மாற்றுப் பாதை அமைத்துத் தருவதாகச் சொன்ன வாக்குறுதியை எப்போது நிறைவேற்றித் தருவீர்கள்?
கீழ்ப்பாலத்தில் தேங்கிநிற்கும் தண்ணீரால் பாதைகளெல்லாம் கரடுமுரடாக மாறிவிட்டதே அதை எப்போது சரி செய்து தருவீர்கள்?
பாலத்தில் நீர் தேங்கி நிற்பதால் அதை தினசரி அப்புறப்படுத்துவதற்காக டீசல் மோட்டார் கொண்டு இயக்கப்படுகிறது, அதற்கு ஒரு அறை உள்ளது, அதை இயக்க ஆள் போடப்பட்டுள்ளது, அவருக்குச் சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது இவ்வளவு சிக்கலை தீர்ப்பதற்குப் பதிலாக பாலத்தை மூடிவிட்டு கேட் அமைத்துக் கொடுக்கலாமே?
முறையாக இந்தப்பாலத்தை அமைத்துத் தருவதற்கே முடியாத நிலையில்...

சொர்ணக்காடு பகுதியில் மக்கள் பயன்படுத்தவே முடியாதபடி பாலம் அமைப்பதற்கு வடிவமைத்துக் கொடுத்தது யார்?
இந்த வடிவமைப்பு இந்தப்பகுதிக்கு பொறுந்துமா? என்று ஆய்வு செய்யப்பட்டதா?
இந்தப் பகுதியில் உள்ள உள்ளாட்சி பொறுப்பாளர்களிடம் இது குறித்து பேசாதது ஏன்?
இந்தப்பகுதிக்கான திட்டத்தின்படிதான் பாலம் அமைக்கப்படுகிறது என்றால் பாலப் பகுதிக்குள் பேருந்து செல்லமுடியவில்லையே ஏன்?
இந்தப் பாலம் இந்தப் பகுதிக்கான திட்டமிடல் என்றால் பேருந்து இயக்குவதற்கு முடியவில்லை என்று
இப்போது பாலத்தை ஏன் உடைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள்? அப்படியென்றால் உங்கள் திட்டமிடல் தவறுதானே?
எஙகோ திட்மிட்டு முன்னமே தயார் செய்யப்ட்ட காஙகிரிட் பாலங்களை, இப்பகுதிக்கு சற்றும் பொருந்தாத வகையில் நிறுவியது சரிதானா?
14 அடி பள்ளத்திற்குள் சென்று கீழ்ப் பாலம் அமைக்கப்பட்டுள்ளதே மழைக்காலங்களில் இந்தப் பகுதி மக்கள் எந்தப் பாதையைப் பயன்படுத்துவது? மழை விட்டு மாதக்கணக்கான பிறகும் தண்ணீறும் சேறும் சகதியுமாக உள்ள பாதையை மக்கள் எப்படி பயன்படுத்தமுடியும்?


கீழக்காட்டில் அமைக்கப்பட்டுள்ள பாலத்திலும் இதே சிக்கல் உள்ளதே? இந்தப்பகுதியில் டாஸ்மாக் கடை இருப்பதால் மதுக்குடிப்பவர்களின் கூடாரமாக இந்தப் பாலம் மாறி வருகிறதே? இதை யார் கண்காணிப்பது? இப்படி பாதுகாப்பற்ற பாலத்தை பெண்களும் குழந்தைகளும் எப்படிப் பயன்படுத்த முடியும்?

என்று போராட்டக்குழு கேட்ட சரமாரியான கேள்விகளுக்கெல்லாம் இரயில்வே தரப்பில் கலந்து கொண்ட பொறியாளர்களால் பதில் கூறமுடியாமல் விழித்தனர். இதை புரிந்து கொண்ட பொதுமக்கள் உரிய அதிகரிகளை வர வைத்து பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினர்.

இறுதியாக...

இரயில்வே துறை சார்பில் உரிய அதிகாரிகள் விரைவில் வந்து பேராவூரணி பகுதிகளில் அமைக்கப்பட்டுவரும் இரயில்வே கீழ்ப்பாலங்கள் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வளிக்க வேண்டும்.

பாலம் தொடர்புடைய இடத்திற்குச் சற்றும் பொருத்தமில்லாமல் ரெடிமேட் பாலங்களை முன்பே தயாரித்து பொருத்துவதை இரயில்வே நிர்வாகம் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மீண்டும் போராட்டக்குழுவினரோடு உரிய இரயில்வே அதிகாரிகளும் கலந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய முடிவு காணும் வரை சொர்ணக்காடு பாலம் பணிகளையோ, மேற்கொண்டு இப்பகுதிகளில் பாலம் அமைக்கும் நடவடிக்கைகளையோ மேற்கொள்ளக்கூடாது என்று இன்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நீலகண்டபுரம் போராட்ட குழு சார்பில் வழக்கறிஞர் சு.மோகன், தோழர் ஆறு.நீலகண்டன், ஓய்வுபெற்ற கிராமநிர்வாக அலுவலர் சி.மணிவண்ணன், இராமமூர்த்தி, யாசின், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், தமிழ்வழிக்கல்வி இயக்க மாவட்டச் செயலாளர் த.பழனிவேல் ஆகியோரும்,

கீழக்காடு போராட்டக்குழு சார்பில் சு.இராமநாதன், பொ.ரவி, தோ. கருப்பைன், க.ரஞ்சித், வீ.ஞானசேகரன், க.மகேந்திரன் ஆகியோரும்,

சொர்ணக்காடு போராட்டக்குழு சார்பில், வளப்பிரமன்காடு ஊராட்சி மன்றத் தலைவர் சி.கணேசன், சொர்ணக்காடு ஊராட்சி மன்றத்தலைவர் விஜயபாஸ்கர், மணக்காடு ஊராட்சி மன்றத்தலைவர் விஜயகுமார், அ.தெட்சணாமூர்த்தி, தெ.இளையராஜா, மு. சண்முகநாதன், த.சண்முகம், அ.இராமதாஸ், சி.நமச்சிவாயன், ச.இளங்கோ, அ.திருப்பதி, மு.முத்துகிருஷ்ணன், சி.நாகராஜன், சி.மனோகரன், ப.மகராஜா, வ.ஆத்மநாதன் ஆகியோரும்

தமிழக மக்கள் புரட்சிக் கழக தலைவர் தோழர் அரங்க குணசேகரன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராமநிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா