சித்தாதிக்காடு ஆரம்பப்பள்ளியில் உலக தாய்மொழி நாள் விழா
பேராவூரணி அருகே சித்தாதிக்காடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் உலகத் தாய்மொழி நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் கோவி தாமரைச்செல்வன் தலைமை வகித்தார்.
தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் தலைவர் சின்னப்பத் தமிழர் சிறப்புரையாற்றினார்.
தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் தலைவர் அரங்க குணசேகரன் வாழ்த்துரை வழங்கினார்.
தாய்மொழிக் கல்வியில் பயின்று மருத்துவத் துறையில் புகழ்பெற்று விளங்கும் மருத்துவர் துரை நீலகண்டன் தமிழ்வழிக் கல்வியின் அவசியம் குறித்தும், தாய்மொழியில் கல்வி கற்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
அவர் தனது உரையில்...
"மெல்லத் தமிழினிச் சாகும் - என்று பாரதி கூறியதாக பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் பாரதி என்ன கூறினார் என்பதை முழுவதுமாக வெளிப்படுத்துவதில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்தமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்" என்றந்தப் பேதை யுரைத்தான்
இந்த வசை எனக்கெய்திடலாமோ? என பாரதி சொன்னதை நம்மில் பலபேர் சரியாகப் பொருள் கொள்ளாமல் , ஏதோ "தமிழ் இனி வாழாது " என்று புரிந்து கொண்டு பல இடங்களில் இதனை மேற்கோளும் காட்டுகின்றனர் ! இது மிகவும் வருத்தத்திற்குரியது.
"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"
என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
என்ற பாரதியின் வரிகளை முழுமையாக இளம் தலைமுறையிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
தமிழில் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை படித்திட அரசு வழிவகை செய்திடல் வேண்டும்" என்றார்.
நிகழ்வில் தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
பாடப் புத்தகங்களைத் தாண்டி மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் வழங்கப்பட்டு அந்தப் புத்தகங்களை பள்ளி நூலகத்திற்கு மாணவர்கள் கையில் இருந்து அன்பளிப்பாக பெறப்பட்டது.
நிகழ்வில் கல்விப் புரவலர் க.நீலகண்டன் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் குறிப்பேடு மற்றும் எழுது பொருட்களை வழங்கினார்.
விழாவில் தமிழ்வழிக் கல்வி இயக்க மாவட்டச் செயலாளர் த.பழனிவேல், ஒன்றியச் செயலாளர் செ.சிவக்குமார், திருக்குறள் பேரவை பொறுப்பாளர் சித. திருவேங்கடம், ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக