வள்ளுவரிடம் இரண்டு அடி வாங்குங்கள்! - திருவள்ளுவர் சிலை திறப்புவிழாவில் பாவலர் அறிவுமதி பேச்சு.
வள்ளுவரிடம் இரண்டு அடி வாங்குங்கள்! - திருவள்ளுவர் சிலை திறப்புவிழாவில் பாவலர் அறிவுமதி பேச்சு.
பேராவூரணியில் மருத்துவர் துரை நீலகண்டன் தனது மருத்துவமனை வளாகத்தில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்துள்ளார். இந்தத் திருவள்ளுவர் சிலை திறப்புவிழா 19.09.2021 அன்று நடைபெற்றது. தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்பிரமணியன் சிலையினைத் திறந்து வைத்தார். சிலை திறப்புவிழா நிகழ்வைத் தொடர்ந்து மருத்துவர் நீலகண்டன் எழுதிய தொடர் பயணத்தில் சிறு இளைப்பாறல் என்ற நூல் வெளியீட்டு விழா அருகில் உள்ள அரங்கில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் நூலினை வெளியிட தஞ்சை மருத்துவக்கல்லூரியில் பணியாற்றி பணிநிறைவு பெற்ற பேராசிரியர் மருத்துவர் மு.குலாம்மொகிதீன் நூலினைப் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் பகுத்தறிவுப் பாவலர் அறிவுமதி விழாப் பேருரையாற்றினார்.
அவர் தனது உரையில்,"மருத்துவர் நீலகண்டன் அவரது மருத்துவமனையில் திருவள்ளுவரின் சிலையைத் திறந்து வைத்ததுள்ளது வரலாற்றுச் சிறப்புக்கு உரியது. வாழ்க்கையை வள்ளுவனிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் வள்ளுவரிடம் இரண்டு அடி வாங்கவேண்டும். இலக்கியங்களைத் தொடர்ந்து படித்துவந்தால் நிச்சயமாக இலக்கியத்தைப் படைக்க முடியும். நல்ல நோக்கம் கொண்ட படைப்புகள் எல்லாமே நல்ல இலக்கியங்கள்தான். மருத்துவர் நீலகண்டன் எழுதியுள்ள இந்த நூல் நல்ல சிந்தனையுடன் எழுத்தப்பட்ட மிகச்சிறந்த நூல். தமிழர்கள் தமிழை வளர்க்காமல் சமற்கிருதத்தைத்தான் வளர்த்து வருகிறார்கள். தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும். தமிழில் பெயர் சூட்டாமல் சமற்கிருதத்தில் பெயர் வைத்தால் தமிழ் எப்படி வாழும். சமற்கிருதம் எப்படி செத்த மொழியாகும்? தந்தைப் பெரியாரின் பகுத்தறிவுப் பாதைதான் நமக்கு திருக்குறளை வெளிச்சமிட்டுக் காட்டியது. பகவத்கீதை நமது பண்பாடல்ல என்று கூறிய ஐயா திருக்குறளை படிக்க வேண்டும் என்றார். பாரதியின் பாதையும் பகுத்தறிவுப் பாதைதான். அதற்கான சான்றுகள் அவனின் படைப்புகளில் காணலாம். பாரதி நினைவு நூற்றாண்டை நினைவு கூறும் இந்த காலத்தில் மருத்துவர் நீலகண்டன் இந்த நூலைப் படைத்துத் தந்திருப்பது சிறப்புக்குரியது" என்றார்.
நூல் வெளிவர பெரிதும் துணை நின்ற ஓவியர் தஞ்சை பிரசன்னா, ஒளிப்படக் கலைஞர் பாரதி அமர், சுரேஷ்.அசோக் ஆகியோர் நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டனர்.
நிகழ்வில் திருக்குறள் பேரவை தலைவர் பாவலர் மு.தங்கவேலனார், திருக்குறள் பேரவை ஒருங்கணைப்பாளர் ஆறு நீலகண்டன், மேனாள் சட்டமற்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் தலைவர் அ.சி.சின்னப்பத்தமிழர், இந்திய மருத்துவக் கழக தமிழ் மருத்துவக்குழுவின் தலைவர் மருத்துவர் மு.மாரியப்பன், திருக்குறள் பேரவை நிர்வாகக்குழு உறுப்பினர் எச்.சம்சுதீன், தென்னை அரிமா சங்கத் தலைவர் வ.பாலசுப்பிரமணியன், அரிமா சங்கப் பொறுப்பாளர் எ.வே.காந்தி, இந்திய மருத்துவக் கழக அறந்தாங்கி கிளை பொறுப்பாளர் மருத்துவர் ச.தெட்சிணாமூர்த்தி, ஆசிரியர் கோவி.தாமரைச்செல்வன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பணியாற்றும் முனைவர் இரா.அகிலன், பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறைப் பேராசிரியர் பா.சண்முகப்பிரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மருத்துவர் துரை.நீலகண்டன் ஏற்புரை நிகழ்த்தினார். முன்னதாக தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் த.பழனிவேல் வரவேற்றார். நிறைவாக புவனேஸ்வரி நீலகண்டன் நன்றி கூறினார். நிகழ்வுகளை திருக்குறள் பேரவையின் நிர்வாகக்குழு உறுப்பினர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் தொகுத்தளித்தார். விழா ஏற்பாடுகளை பேராவூரணி திருக்குறள் பேரவை முன்னின்று நடத்தியது.
கருத்துகள்
கருத்துரையிடுக