பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தந்தை பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாள் விழா
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தந்தை பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாள் விழா
தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்ததைத் தொடர்ந்து பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகம் சார்பில் சமூகநீதி நாள் விழா மற்றும் சமூக நீதி உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் நா.தனராஜன் தலைமையில் பெரியார் அம்பேத்கர் நூலகப் பொறுப்பாளர் மெய்ச்சுடர் நா வெங்கடேசன் முன்னிலையில் பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா அசோக்குமார் தந்தை பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
கல்லூரி மாணவர் மாணவிகள் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் தந்தை பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள் என்னும் நூல் நூலகம் சார்பில் வழங்கப்பட்டது.
கல்லூரி மாணவிகளுக்கு இந்த நூலை வழங்கிப் பேசிய கல்லூரியின் முதல்வர், "இந்த புத்தகத்தில் இருந்து விரைவில் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் அத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும்" என்றார். உடனே சட்டமன்ற உறுப்பினர் குறுக்கிட்டு அந்தப் பரிசுகளை "நானே வழங்குகிறேன்" என்றும் முதல் பரிசு ரூபாய் 10 ஆயிரம் இரண்டாம் பரிசு ரூபாய் 5000 மூன்றாம் பரிசு ரூபாய் 2500 வழங்குவதாக அறிவித்தார்.
நிகழ்வில் பெரியார் அம்பேத்கர் நூலகப் பொறுப்பாளர்கள் ஆறு நீலகண்டன், சித திருவேங்கடம், தா கலைச்செல்வன், மருத உதயகுமார், இரா மதியழகன், அ கோவிந்தன், க.ஜெய்சங்கர், தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் பொறுப்பாளர்கள் த.பழனிவேல், ந. அமரேந்திரன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், திராவிட இயக்க பொறுப்பாளர்கள் அப்துல் மஜீத், குழ.செ. அருள்நம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி வளாகம் வண்ணக் கோலங்களால் விழாக்கோலம் பூண்டிருந்தது. பேராசிரியர்கள் மாணவர்கள் புத்தாடை அணிந்து வந்திருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக