போட்டித் தேர்வு பயிற்சி மையத் தொடக்க விழா

தொடக்கப் பள்ளியில் படிக்கும் பொழுது மிகவும் சுமாராக படிக்கும் மாணவனாக இருந்தேன், சோதிடர்கள் எனக்கு படிப்பு வராது என்று சொன்னார்கள், ஆனால் பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று உங்கள் முன்னால் ஒரு மருத்துவராக நிற்கிறேன் - புனல்வாசலில் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வு பயிற்சி மையத் தொடக்க விழாவில் மருத்துவர் துரை.நீலகண்டன் பேச்சு.



புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளியில் 1991 லிருந்து 1993 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வளாகத்தில் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வு பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளனர்.
1993 பள்ளி இறுதி ஆண்டில் பயின்ற இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து ஊரகப் பகுதி மாணவர்களின் நலன் கருதி போட்டித்தேர்வு பயிற்சி மையத்தைத் தொடங்க முடிவெடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாக கைபேசி புலன குழு அமைத்து உடன் பயின்ற மாணவர்களை ஒருங்கிணைத்து பயிற்சி மையம் தொடர்பாக பேசினர்.
புதுக்கோட்டை தன்னார்வலர் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தோடு இணைந்து பயிற்சி வழங்குவது என முடிவெடுத்து இன்று பயிற்சி தொடங்கியுள்ளது.
இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்களான, தற்போது பள்ளியின் தாளாளராக இருக்கும் அருள் தந்தை ஜான்சன் எட்வர்டு, இந்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஆர்.எஸ். அதிகாரியாகப் பணிபுரியும் ஜஸ்டின், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அருள்ராஜ், மருத்துவர் துரை.நீலகண்டன் ஆகியோர் ஒன்றாக மேடையில் ஒளி ஏற்றி நிகழ்வை தொடங்கி வைத்தனர்.


நிகழ்வில் பேசிய ஜஸ்டின் ஐஆர்எஸ், "தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக வளர்ச்சியை எட்டியுள்ளது இதற்கு முக்கிய காரணம் திராவிட செயல் திட்டம் என்று சொல்லப்படும் சமூகநீதி கொள்கை தான். தொடர்ந்து ஊரகப் பகுதி மாணவர்களின் நலனுக்காக செயல்படுவது சமூக நீதியின் ஒரு பகுதி" என்றார்.
வட்டாட்சியர் அருள்ராஜ், "அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுக்கு ஸ்மார்ட்டான ஹார்ட் வொர்க் செய்ய வேண்டும், தலைவராக இரு அல்லது தலைவரோடு இரு என்ற பழமொழிக்கேற்ப நாம் நன்றாக படிக்க வேண்டும் அல்லது நன்றாக படிக்கும் மாணவர்களுடன் இணைந்து இருக்க வேண்டும், இதுதான் வெல்லும் சூழலை உருவாக்கித் தரும்" என்றார்.
பயிற்சி மையம் தொடங்க தொடர்ந்து முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து, புதுக்கோட்டை பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் களோடு தொடர்பிலிருந்த மருத்துவர் நீலகண்டன் தனது உரையில், "தொடக்கப் பள்ளியில் படிக்கும் பொழுது மிகவும் சுமாராக படிக்கும் மாணவனாக இருந்தேன், சோதிடர்கள் எனக்கு படிப்பு வராது என்று சொன்னார்கள், ஆனால் பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று உங்கள் முன்னால் ஒரு மருத்துவராக நிற்கிறேன், நம் தன்னம்பிக்கையை குறைக்கும் எதற்கும் இடம் கொடுக்காமல் தொடர் முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். வெற்றிக்கான பழக்கங்களை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்" என்றார்.
"மாப்பிள, பங்காளி, மாமு" என்று அழைத்துக் கொண்ட பள்ளிக்கால நண்பர்கள் மீண்டும் இணைந்து இது போன்றே உறவு முறை சொல்லி அழைத்துக்கொண்டு கேளிக்கைகளோடு கடந்து செல்லாமல் அடுத்த தலைமுறை மாணவர்கள் மீது அக்கறையோடு செயல்பட்ட இந்த நிகழ்வு மிகுந்த நெகிழ்வு.






பயிற்சி தொடர்பாக விளக்கம் பெற தொலைபேசி எண்கள்
97 87 65 63 49
80 98 92 35 86
76 39 85 12 21
99 94 03 20 48
91 59 98 86 62
98 42 94 87 00

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா