வான் புகழ் வள்ளுவனுக்கு பேராவூரணியில் சிலை! மருத்துவரின் மகத்தான பணி!
வான் புகழ் வள்ளுவனுக்கு
பேராவூரணியில் சிலை! மருத்துவரின் மகத்தான பணி!
பேராவூரணி சேது சாலையில் அமைந்துள்ளது தர்ஷண மருத்துவமனை. எலும்பு முறிவு சிறப்பு சிகிச்சை மருத்துவர் துரை.நீலகண்டன் அவர்களின் மருத்துவமனை. இவர் இந்த மருத்துவமனையில் கடந்த 12 ஆண்டுகளாக கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்.
தமிழின் மீதும் தமிழ் இலக்கியங்களின் மீதும் தீராக் காதல் கொண்ட மருத்துவர் நீலகண்டன், திருக்குறளை மக்கள் வாழ்வியலாக கொள்ளவேண்டும். திருக்குறள் ஒன்றே மனித குலத்தை நல்வழிப்படுத்தும் என்பதை வலியுறுத்தும் வகையில் தனது மருத்துவமனை வளாகத்தில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்துள்ளார்.
மருத்துவமனை வளாகத்தில் திருக்குறள் வெண்பலகை அமைத்து நாள்தோறும் ஒரு திருக்குறள் மற்றும் அதற்கான பொருளை எழுதி அனைவரையும் படிக்கும்படி செய்துவந்த மருத்துவர் நீலகண்டன் தற்பொழுது தனது மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே திருவள்ளுவருக்கு சிலை அமைத்து அனைவரையும் திருக்குறள் படிக்க வலியுறுத்துகிறார்.
ஒருவர் தன் வாழ்நாளில் ஒரே ஒரு திருக்குறளையாவது தனது வாழ்வியலாக மாற்றிக் கொண்டால் அதுவே மிகப்பெரும் பலனாக அமையும் என்று கூறும் மருத்துவர் நீலகண்டன் அதை வலியுறுத்துவதற்காகவே திருவள்ளுவர் சிலை அமைத்ததாக கூறுகிறார்.
நாளை 19 செப்டம்பர் 2021 திறப்பு விழா காண உள்ளது இந்த திருவள்ளுவர் சிலை. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்பிரமணியன் இந்த திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கிறார்.
வள்ளுவர் சிலைக்கு திறப்பு விழா காணும் அதேநாளில் தான் எழுதிய "தொடர் பயணத்தில் சிறு இளைப்பாறல்" என்கின்ற நூலையும் வெளியிடுகிறார்.
நூல் வெளியீட்டு விழாவும் இதேநாளில் பேராவூரணி எஸ்டிடி ரெசிடென்சி அரங்கில் நடைபெற உள்ளது.
பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக் குமார் நூலினை வெளியிட புதுச்சேரி எலும்பு அறுவை மருத்துவத்துறை பேராசிரியர் மருத்துவர் மு குலாம் மோகிதீன் நூலினைப் பெற்றுக்கொள்கிறார்.
எழுத்தாளரும், திரைப்பட பாடலாசிரியருமான பகுத்தறிவு பாவலர் அறிவுமதி விழாப் பேருரை ஆற்றுகிறார்.
மருத்துவர் துரை நீலகண்டன் அமைத்த வான் புகழ் வள்ளுவன் சிலை பேராவூரணியில் இன்னுமொரு பெருமைமிகு அடையாளமாக மாறும் என்பதில் ஐயமில்லை.
திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்வையும் கவிதை நூல் வெளியீட்டு விழாவையும் பேராவூரணி திருக்குறள் பேரவை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிலை திறப்பு நிகழ்வு மாலை 4 மணிக்கும் நூல் வெளியீட்டு நிகழ்வு மாலை 5 மணிக்கும் நடைபெற உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக