நூல் திறனாய்வுக் கூட்டம்

நூல் திறனாய்வுக் கூட்டம்
---------------------------------------- 






பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் தந்தை பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள்? என்ற நூலின் தமிழ் மற்றும் ஆங்கில பதிப்புகளின் திறனாய்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழக மக்கள் விடுதலை இயக்க ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் பா.சண்முகப்பிரியா தலைமை வகித்தார். நிகழ்வின் அறிமுக உரையை மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் நிகழ்த்திட தமிழ்ப் பதிப்பு நூலினை திராவிடர் விடுதலைக் கழக நகர அமைப்பாளர் தா.கலைச்செல்வன், ஆங்கிலப் பதிப்பு நூலினை தமிழக மக்கள் விடுதலை இயக்க அரசியல் செயலாளர் முனைவர் ஆ.ஜீவானந்தம் ஆகியோர் திறனாய்வு செய்தனர்.
திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், தமிழக மக்கள் புரட்சிக் கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு.நீலகண்டன், சி.பி.எம் ஒன்றியப் பொறுப்பாளர் வேலுச்சாமி, அறநெறி மக்கள் கட்சி பொதுச் செயலாளர் தங்கவேல் ஜேம்ஸ், சி.பி.எம் பொறுப்பாளர் அமரா அழகு, ஆசிரியர் சண்முகவள்ளி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பதிப்பாசிரியர் கவிஞர் நன்செய் தம்பி தனது ஏற்புரையில் கூறியதாவது, "இந்த புத்தகத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை இயக்கமாகவே செய்தோம், முற்போக்கு இயக்கங்கள் இரண்டு லட்சம் கரங்களில் இந்தப் புத்தகத்தைத் தவழவிட்டுள்ன. திருமணங்களுக்கு பலர் இந்தப் புத்தகத்தை பரிசளித்துள்ளனர். இல்ல நிகழ்வுகளுக்கு வரும் விருந்தினர்களுக்கு இந்தப் புத்தகத்தை பலரும் பரிசாக வழங்கியுள்ளனர். சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகத்திற்காக மட்டுமே தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருபதாயிரம் பிரதிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அங்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்த ஒரு கல்லூரி மாணவன் 'இந்தப் புத்தகத்தை மட்டும் முன்னமே எனது அம்மா படித்திருந்தால் எனது அப்பாவை இழந்து தவிக்கும் அவர் மறுமணம் செய்திருப்பார்' என்றான். அவனது அந்த வார்த்தைகள் இந்தப் புத்தகத்தைத் தூக்கிச்சுமப்பதற்கான ஊட்டமாக இன்றும் என்னுள் செயல்படுகிறது. அடுத்ததாக 'சாதியை அழித்தொழிக்கும் வழி' என்ற அம்பேத்கர் எழுதி இந்திய மொழிகளில் முதன் முதலில் தமிழில் பெரியாரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட புத்தகத்தை மீண்டும் மலிவு விலையில் வெளியிட்டுள்ளோம். கோடி கரங்களில் பெரியாரையும், அம்பேத்கரையும் கொண்டுபோய் சேர்ப்போம். வாசிப்பை நேசிப்போம்! வாழ்வியலை இனிமையாக்குவோம்" என்றார்.
நிறைவாக ஆசிரியர் மருத உதயகுமார் நன்றி கூறினார்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா