தினமணி (24.10.2015) திராவிட-ஆரிய மாயை! கட்டு​ரைக்கு மறுப்பு

இன்றைய தினமணி இதழில் (24.10.2015) பத்மன் என்பவர் எழுதிய திராவிட-ஆரிய மாயை என்ற கட்டுரை வெளிவந்துள்ளது. இதற்கு மறுப்பு ​தெரிவித்து எழுதப்படுகிறது இக்கட்டு​ரை

இக்கட்டு​ரையில் திராவிட-ஆரிய இன வேற்றுமைகள் இல்லாததுபோல சித்தரித்து கட்டுரை எழுதியுள்ளார். 

கட்டுரையின் தொடக்கத்திலேயே இந்திய சமயங்களின் தொகுப்பிற்கு இந்து என்று பெயர் வந்ததாகக் குறிப்பிடுகிறார். இந்திய சமயங்கள் யாவும் இந்து மதத்திற்குள் இல்லை என்பதே உண்மை. பெளத்தமும், சமணமும் இந்து சமயத்திற்குள் இல்லாமல் போய்விட்டதே ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இந்திய சமயங்களில் தொகுப்புகளுக்கு இந்து என்ற பெயரைக் கூறிக்கொண்டு இந்திய சமயங்களின் தனித்தன்மையை அழித்துவிட்டது என்பதுதான் இந்துமதத்தின் மீதான குற்றச்சாட்டாகும். இந்து மதத்தின் புனித நூலாக, இந்திய சமயங்கள் வழங்கிய குறிப்பாக சைவம் வழங்கிய சித்தாந்தத் திரட்டோ, பன்னிரு திருமுறைகளோ, ஆழ்வார்களின் பாயிரங்களோ புனித நூலாக இல்லாமல் பாகவத் கீதை மட்டும் எப்படி புனித நூலாக மாறியது என்பதுதான் இன்றையச் சிக்கல்.

"இந்து மதம் வேறு, தமிழர்கள் வேறு" என்று தமிழரிஞர்கள் குறிப்பிடுவது சரியானதுதான். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய மனோன்மணியம் சுந்தரனார் "தமிழர்கள் வேறு, இந்துக்கள் வேறு" என்று விவேகானந்தரிடமே கூறினார்.

தமிழர்களுக்குள், தமிழ் அறிஞர்களுக்குள், தமிழ் மன்னர்களுக்குள் ஆரிய சடங்குகள் தொற்றிக் கொண்டிருப்பதால் ஆரிய வழிபாட்டு முறைகளும், ஆரிய சித்தாந்தங்களும் தமிழர்களுடையதாகாது. சிந்துச் சமவெளிப் பகுதியில் ஆரியப் படையெடுப்புக்குப்பின் ஆரியத் திணிப்பு தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. ஆரியத் திணிப்பு சங்க இலக்கியங்களையும் விட்டு வைக்கவில்லை என்பதை வரலாற்றறிஞர் சு.வேலு ஆய்வுகளை நோக்கும்போது அறியலாம். ரிக் வேதம், சிந்து வெளித் தமிழர்களை ஆரியர்கள் எப்படி வெற்றி கொண்டார்கள் என்ற செய்திகளை உள்டக்கியே உள்ளது. 

"பேர் கொண்ட பார்ப்பான்" என்று தொடங்கும் திருமூலரின் திருமந்திரப் பாடல் ஆரிய எதிர்ப்பைக் காட்டுகிறது.
வள்ளலாரின் "சமரச சன்மார்க்க சபை" ஆரிய எதிர்ப்பைக் காட்டுகிறது.
ஐயா வைகுண்டரின் "அன்பு சமயம்" ஆரிய எதிர்ப்பைக் காட்டுகிறது. 
ஆரியம் தமிழர்களுக்குள்(திராவிடர்களுக்குள்) திணிக்கப்பட்டாலும், வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நபர்கள் அதை எதிர்த்தே வந்திருக்கிறார்கள். 

அயோத்திதாசப் பண்டிதர், தந்தை பெரியார், அம்பேத்கர் போன்றோர்கள் இந்து மத எதிர்ப்பை தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே வந்திருக்கிறார்கள். அவர்களின் இந்து மத எதிர்ப்பென்பது ஆரிய எதிர்ப்புதான். 

ஆரிய - தமிழ்(திராவிட) இனங்களுக்குள் உள்ள முதன்மையான வேறுபாடு என்பது சடங்குகளையெல்லாம் தாண்டி, பிறப்பின் அடிப்படையிலான தகுதிப்பாடு என்பதுதான். தமிழ் இனத்தில் பிறப்பின் அடிப்படையில் தகுதி மாறுபாடு கிடையாது. பிறப்பு ஒக்கும் எல்லா உயிருக்கும் என்பதே தமிழ் இனத்தின் நெறி. ஆரிய நெறி என்பது பிறப்பின் அடிப்படையில் வர்ண அடுக்குமுறை கொண்டது. இதை உண்டாக்கிய கிருஷ்ணனாலேயே மாற்ற முடியாது என்று கூறுவது. 

அதனால்தான் மகாத்மா காந்தியாலும் கூட இந்த கொள்கையிலிருந்து மாற மனம் நினைத்தாலும் மாற முடியவில்லை. அதனால்தான் காந்தி ஆசிரமம் நடத்திய தோழர் ஜீவானந்தம் அவர்கள் பொதுவுடமைக் கொள்கையைக் கடைபிடிக்கத்தொடங்கினார். 
சடங்குகள் கூட ஒன்றுபோலத் தோன்றலாம், ஒன்றாகவே கூட இருக்கலாம், வேள்விகளை இரண்டு இனத்தைச் சேர்ந்தவர்களும் செய்திருக்கலாம். ஆனால் பிறப்பின் அடிப்படையில் தகுதி உடையவராக தங்களை நிலைநிறுத்த முயற்சிப்பவர்கள் ஆரிய பிராமணர்களே அல்லாமல் தமிழர்கள் அல்லர். 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற கோரிக்கை வைத்தால் அர்ச்சகருக்குரிய தகுதி யாரிடம் இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் எண்ணம் ஆரிய இனத்தாரிடம் இல்லை. ஆனால் எந்தத் தகுதியும் இல்லாமல் பிறப்பால் பார்ப்பனராக இருப்பதாலேயே பல கோவில்களில் பூசனைச் சடங்குகளைச் செய்பவர்களாக இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. 

இதையெல்லாம் மறைத்துவிட்டு மீண்டும் மீண்டும் ஆரியன் - திராவிடன் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். ​தொடர்ந்து ஆரிய அடக்குமு​றைக்குள்  தமிழினம் இருக்க​வேண்டும் என்ற கட்டுரையாளரின் விருப்பமாக​வே  இக்கட்டு​ரை  அ​மைந்துள்ளது. திராவிடன் என்றால் தமிழன் என்ற கட்டு​ரையாளரின் ஒரு கூற்றில் மட்டு​மே உண்மை உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா