மக்கள் நலனே முக்கியம்! பேராவூரணி வழித்தடம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் பேராவூரணியில் நின்று செல்ல வேண்டும்- அனைத்துக் கட்சிகள் வலியுறுத்தல்.
நகர வர்த்தகர் கழகம் சார்பில் நடைபெற்ற ரயில் நிலையம் முற்றுகை போராட்டத்தில், "பேராவூரணி வழித்தடம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் பேராவூரணியில் நின்று செல்ல வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது.
"மே மாதத்திற்குள் உரிய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ரயில்கள் நின்று செல்ல வழிவகை செய்யப்படும்" என்று ரயில்வே துறை, வருவாய்த்துறை, வர்த்தகக் கழகம் நடத்திய பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்பட்டது.
பேராவூரணி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்
வலிமையான போராட்டங்களை கையில் எடுப்போம் என்று பேராவூரணி நகர வர்த்தகர் கழகம் அறிவித்துள்ளது.
கட்சி பாகுபாடின்றி அனைத்துக் கட்சி பொறுப்பாளர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
வர்த்தகர் கழக தலைவர் ஆர் பி ராஜேந்திரன் தலைமையில் வர்த்தகக் கழக செயலாளர் திருப்பதி, பொருளாளர் சாதிக் அலி ஆகியோர் முன் நின்று போராட்டத்தை நடத்தினர்.
சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வயி.திருஞானசம்பந்தம், மா.கோவிந்தராசு ஆகியோர் நேரில் வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர் பண்ணைவயல் இளங்கோ நிகழ்வில் கலந்து கொண்டு "நான் நேரடியாக மத்திய அமைச்சர் எல் முருகன் அவர்களிடம் இந்தச் சிக்கல் குறித்து பேசி உடனடியாக தீர்வு காண முயற்சி செய்வேன். அவர் நிச்சயமாக இந்த சிக்கலை தீர்த்து வைப்பார்" என்று உறுதியளித்தார்.
நகர வர்த்தகர் கழக பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், அனைத்து கட்சிகளை சார்ந்த பொறுப்பாளர்கள், அரிமா சங்கம், சுழற் சங்கம், துளிர் அரசு ஆண்கள் பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்பு, ஆலமரத்து விழுதுகள், திருக்குறள் பேரவை போன்ற சமூக இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என என பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு ரயில்வே துறையின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டித்தனர்.
கட்சியாக, சாதியாக, மதமாக, தனித்த அடையாளமாக இல்லாமல் தங்களின் நலனுக்காக பொதுமக்களாக நின்று ஒன்று சேர்ந்து போராடிய இந்த நிகழ்வு அறிவார்ந்த சமூகத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாகத் திரண்டு போராடிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேராவூரணியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மெய்ச்சுடர் சார்பிலும் கேட்டுக் கொள்கிறோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக