"மாற்றி யோசி" மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைக் கருத்தரங்கம்


பேராவூரணி, "பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை" சார்பில் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த வழிகாட்டு நிகழ்வு நடைபெற்றது.


தலைசிறந்த கல்வி ஆளுமைகளை கொண்டு மாணவர்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.  


மொழியியல், மருத்துவம், பொறியியல், சட்டம், மேலாண்மையியல், வணிகம், கலையியல், அறிவியல், கடல்சார் மற்றும் கால்நடை தொடர்பான படிப்புகள் குறித்தும் பல்வேறு படிப்புகளின் அவசியம் குறித்தும் நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை செய்யப்படும் படிப்புகள், நுழைவுத் தேர்வு இல்லாமல் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை செய்யப்படும் பாடப்பிரிவுகள், பல்வேறு படிப்புகளை வழங்கும் தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகங்கள், ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், தொலைநிலைக் கல்வி என உயர் கல்வி பெறுவதற்கான முழுமையான விளக்கமாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.   


தன்னம்பிக்கை ததும்பும் உரையாகவும், வழிகாட்டும் துணையாகவும் பேராசிரியர்களின் கருத்துரை அமைந்திருந்தது. 


சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் 'ஆசிரியர் மனசு' திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார், பாரத் நிகர்நிலைப் பல்கலைக்கழக இணை பேராசிரியர் அ.மணிகண்டன், திருச்சி புனித வளனார் கல்லூரி பேராசிரியர் விமல் ஜெரால்டு உள்ளிட்ட கல்வியாளர்கள் பல்வேறு வாய்ப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.  


கல்வியாளர்கள் தங்களது உரையில்,

"உயர்கல்வி பெற்றிட பணம் ஒரு தடையில்லை. உரிய தகுதியும் ஆர்வமும் இருந்தால் நிச்சயமாக நினைத்த படிப்பை படித்து முடிக்கலாம். பெரும் ஆசையோடும் கனவோடும் கல்வி கற்க மாணவர்கள் முன்வர வேண்டும். திட்டமும் நோக்கமும் இல்லாமல் கல்வி கற்பது கூடாது. என்ன படிக்க வேண்டும் ஏன் படிக்க வேண்டும் எதற்காக படிக்க வேண்டும் என்ற திட்டத்தோடு மாணவர்கள் கல்வி கற்க முன் வர வேண்டும். கற்ற கல்வி மூலம் சமூகத்துக்கும் குடும்பத்திற்கும் துணையாக இருக்க வேண்டும். இன்று உயர்கல்விக்கான வாய்ப்புகளை அறிந்து கொள்ள இணையம் பெரும் உதவியாக இருக்கிறது. கையில் உள்ள கைபேசியை உயர்ந்த நோக்கத்திற்காக பயன்படுத்தி பழக வேண்டும்" என்று எடுத்துரைத்தனர்.


கல்வியாளர்களின் உரைகளை தனது கண்களை அகல விரித்து கவனத்தோடு மாணவர்களும் பெற்றோர்களும் கேட்டறிந்தனர். பல்வேறு பாடப்பிரிவுகள் குறித்த ஐயங்களையும் கல்வி ஆளுமைகளிடம் கேட்டறிந்து கொண்டனர்.  


பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து துளிர் என்கிற அமைப்பை உருவாக்கி கல்வி சார் செயல்பாடுகளில் தங்களை இணைத்துக் கொண்டு செயலாற்றுவது இப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.  


பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் முதல்வன், மனோகரன், ஓய்வு பெற்ற தமிழாசிரியை இந்திரா தேவி, பேராவூரணி நகர வர்த்தக கழக தலைவர் ஆர் பி ராஜேந்திரன், பொருளாளர் மு. சாதிக் அலி, அரிமா சங்க பொறுப்பாளர் ஆசிரியர் இராமநாதன், தமிழ் தேசிய செயல்பாட்டாளர் நெடுவாசல் ராம்குமார் ராமச்சந்திரன், மருத்துவர் துரை நீலகண்டன், பொறியாளர் டி.ஆர்.முருகேசன், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்கள் மற்றும் துளிர் அமைப்பின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு மாணவர்களின் உள்ளங்களில் பெரும் வெளிச்சத்தை ஏற்படுத்தியது. துளிர் அமைப்புக்கு மெய்ச்சுடரின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.



கருத்துகள்

  1. சிறப்பான நிகழ்வு மிக்க மகிழ்ச்சி, பேராவூரணி இது போன்ற நிகழ்வுகள் நடப்பது மகிழ்ச்சியையும் அதற்கு மெய்ச்சுடர் உறுதுணையாக இருப்பது உந்துதலையும் தருகிறது

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலை பெறுமா?

புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது புனல்வாசல் தன்னார்வ பயிலும் வட்டம்

பேராவூரணியில் மகளிர் நாள் விழா